திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்துள்ள பூலாங்குளம் பகுதியில், சந்தேகத்திற்குரிய வகையில் ரத்த காயங்களுடன் கூடிய சாக்குமூட்டை கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், சாக்குமூட்டையை பிரித்து பார்த்த போது அதில் பெண் சடலம் இருப்பதை கண்டனர்.
இதைத்தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போது, அந்த பெண் பூலாங்குளம் அருகே உள்ள கீழதிப்பம்பட்டியை சேர்ந்த பாண்டீஸ்வரி என்பது தெரியவந்தது. பின்னர் மேற்கொண்ட விசாரணையில், பாண்டீஸ்வரி தனது முதல் கணவரை பிரிந்து இரண்டாவதாக அமுல்ராஜ் என்பவரைத் திருமணம் செய்து அவருடன் வசித்து வந்துள்ளார்.
இதையடுத்து, இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமுல்ராஜ் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டாவது கணவன் சிறையில் இருக்கும்போது, தனியே வசித்து வந்த பாண்டீஸ்வரி, சில நாட்களுக்கு முன்பு சேடப்பட்டியை சேர்ந்த ஹவுஸ் பாண்டி என்பவரை சந்தித்துள்ளார். அவருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இவர்கள் இருவரும் காதல் வலையில் மட்டும் விழாமல், இவர்கள் சேர்ந்து திருட்டு, கஞ்சா உள்ளிட்ட குற்றச்செயல்களிலும் ஈடுபட்டு வந்ததோடு, அதில் கிடைக்கும் பணத்தை இருவரும் பங்கு போட்டு கொள்வர். அவ்வாறு பங்கு போட்டுக்கொள்ளும்போது இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இப்படியாக சம்பவத்தன்றும், பணத்தை பங்கு பிரிப்பதற்காக இரகசிய காதலன் ஹவுஸ் பாண்டி, பாண்டீஸ்வரியை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த ஹவுஸ் பாண்டி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பாண்டீஸ்வரியை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். மேலும் அதனை ஒரு சாக்கு மூட்டையில் கட்டி சாலையோரம் வீசிச் சென்றுள்ளார்.
இதையடுத்து காவல்துறையினர் பாண்டீஸ்வரியின் இரகசிய காதலனான ஹவுஸ் பாண்டியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours