Articles by "மருத்துவம்"
மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திருச்சி அஞ்சுமனே

ஹிமாயத்தே இஸ்லாம் சொசைட்டி

இலவச கண் மருத்துவ முகாம்



இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஹபீபுர் ரஹ்மான் தொடங்கி வைத்தார்

அஞ்சுமனே ஹிமாயத்தே இஸ்லாம் சொசைட்டி சார்பில் வடக்கு உக்கடை பகுதியில் உள்ள அஞ்சுமன் அர் ரஹ்மத் பள்ளிவாசலில் இலவச கண் மருத்துவ முகாம் பள்ளிவாசல் தலைவர் காமில் அன்வர் தலைமையில் நடைபெற்றது.

அஞ்சுமன் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஹபீபுர் ரஹ்மான் கலந்து கொண்டு இலவச கண் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். 


இந்நிகழ்வில் ஜமாத்துல் உலமா சபை மாநில பொருளாளர் மீரான் மிஸ்பாகி ஹஜ்ரத், அஞ்சுமன் தலைவர் ஹாஜி. முகம்மது அய்யூப், பிஸாத்தி பள்ளிவாசல் தலைவர் ஹாஜி. பாபு, மாவட்ட பொதுச் செயலாளர் தமீம் அன்சாரி, நிர்வாகிகள் சலீம், தாஜூதீன், மற்றும் முஸ்லிம் லீக் இளைஞரணி மாவட்ட துணைத் தலைவர் ஹாஜி.சேக் முகமது கௌஸ் மற்றும் பேரா மைதீன் அப்துல் காதர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

நமதுநிருபர் - M.முஹம்மது நியாஸ் – திருச்சி

சிதம்பரத்தில்

கால் பாத அழுத்த

சிகிச்சை வகுப்பு



சிதம்பரத்தில் உள்ள தில்லை மெட்ரிகுலேஷன் பள்ளியில் கடலூர் மாவட்ட சித்த வைத்தியர்கள் சங்கத்தின் சார்பாக மருத்துவர் ரவிச்சந்திரன் தலைமையில் ஒருநாள் சிறப்பு வகுப்பாக கால் பாத அழுத்த சிகிச்சை வகுப்புகள் நடைபெற்றது.

இதில் மருத்துவர் ரவிச்சந்திரன் கால் பாத அழுத்த சிகிச்சை கோட்பாடு மற்றும் நடைமுறைகள் பற்றி விளக்கம் கொடுத்தார்.அங்கு சிகிச்சைக்காக வந்தவர்களுக்கு முதுகு வலி, கைவலி,கை தூக்க முடியாமை போன்ற பல பிரச்சினைகளும் சரி செய்யப்பட்டது 

மேலும் இந்த சிறப்பு வகுப்பில் கடலூர் மாவட்ட சித்த வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் கருணா மூர்த்தி,பொருளாளர் ரவிச்சந்திரன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த சிறப்பு வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு மதிய  உணவும் கொடுத்து வகுப்புகள் சிறப்பாக நடைபெற்றது.

திருச்சி எஸ்.ஆர்.எம் கல்லூரி

மாணவ மாணவிகள்

விழிப்புணர்வு பேரணி






திருச்சி எஸ்.ஆர்.எம் பிசியோதெரபி கல்லூரி மாணவர்கள் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கலைஞர் அறிவாலயம் வரை  மூட்டுவலிக்கான  அறிகுறிகள் மற்றும் விழிப்புணர்வு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு இப்பேரணியில் பங்கேற்றனர்.

முன்பெல்லாம் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வரும் மூட்டு வலி பிரச்சனை தற்பொழுது 45 மேற்பட்டவர்களுக்கு வரத் துவங்கியுள்ளது. இதற்கு காரணம் உணவு பழக்க வழக்கம், வாழ்க்கை முறை என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவில்  மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து வருகின்றனர். இதில் பெண்களுக்கு அதிகமாக அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளதாக மருத்துவர் புள்ளிவிவரத்தின் அடிப்படையில் குறிப்பிட்டார். இப்பிரச்சனை வருவதற்கு உடல் பருமன் மற்றும் சிறிய உடற்பயிற்சி கூட செய்யாமல் இருப்பது காரணமாகவும் தெரிவித்தார்.

முன்னதாக திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். இப்பேரணியில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் SRM திருச்சி வளாக இயக்குனர் D.N.மால்முருகன் மற்றும் இணை இயக்குனர் Dr.N.பாலசுப்பிரமணியன் உடனிருந்து வாழ்த்துறை வழங்கினார்கள். பிசியோதெரபி கல்லூரியின் முதல்வர் Dr.ஆ.மணிகுமார் நன்றியுரை வழங்கினார்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி

முதியவருக்கு பெருந்தமனி வால்வு

திருச்சி காவேரி மருத்துவமனை

சாதனை

முதியவருக்கு அறுவைசிகிச்சையின்றி  பெருந்தமனி வால்வு மாற்று செயல்முறை -திருச்சி காவேரி பன்முக மருத்துவமனையில்  சாதனை 

 


திருச்சி காவேரி மருத்துவமனையில் திறந்தநிலை இதய அறுவைசிகிச்சைக்கு ஒரு மாற்றாக, மிகக்குறைவான ஊடுருவல் செயல்முறையான டிரான்ஸ்கதீட்டர் பெருநாடி வால்வு பதிய (TAVI) செயல்முறை பயன்படுத்தப்பட்டது .காலின் இரத்த நாளங்களில் சிறுதுளைகள் வழியாக உட்செலுத்தப்படும் குழாய்களைப் பயன்படுத்தி ஒரு செயற்கை வால்வை பதியம் செய்வது இச்செயல்முறையில் இடம்பெறுகிறது.

பன்முக சிறப்பு பிரிவுகளுடன் தமிழ்நாட்டில் முதன்மையான சங்கிலித்தொடர் மருத்துவ மனையாகத் திகழும் காவேரி குழும மருத்துவ மனைகளின் ஒரு அங்கமான திருச்சி, காவேரி மருத்துவமனையில் மூத்த குடிமக்கள் இருவருக்கு டிரான்ஸ்கதீட்டர் பெருந்தமனி வால்வு பதிய செயல் முறையைப் (TAVI) பயன்படுத்தி அறுவைசிகிச்சை இல்லாமல் பெருந்தமனி வால்வு மாற்று சிகிச்சை வெற்றிகரமாக செய்யப் பட்டிருப்பதை இன்று அறிவித்திருக்கிறது. 

முறையே 60 மற்றும் 70 வயதைக் கடந்த மூத்த குடிமக்கள், சுவாசிப்பதில் சிரமப் பிரச்சனையோடு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தனர். கூடுதலாக இவர்களுக்கு இதய செயல்பாடு தொடர்பான பாதிப்புகளும் இருந்தன. 

முதல் நபருக்கு அவரது இதயத்திற்கு செல்லும் இரத்தநாளங்களில் இருந்த அடைப்பு களுக்காக பைபாஸ் அறுவைசிகிச்சை முன்பு செய்யப் பட்டிருந்தது.  சமீபத்தில் இவருக்கு சுவாசிப்பதில் சிரமப்பிரச்சனை உருவானதோடு அவரால் நேராகப் படுக்க இயலவில்லை.குறுகியிருக்கும் இதயச்சுவர் மற்றும் பெருந்தமனி வால்வில் கசிவு என இரு பிரச்சனைகளும் அவருக்கு இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஏற்கனவே அவருக்கு திறந்தநிலை அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்த காரணத்தாலும் மற்றும் மீண்டும் திறந்தநிலை அறுவை சிகிச்சையை செய்வது உயிருக்கு ஆபத்தானதாக இருக்கலாம் என்ற இடரினாலும் TAVI மருத்துவ செயல்முறை உகந்தது என அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.  அவருக்கு இருந்த பிரச்சனைக்குத் தீர்வுகாண பலூன் மூலம் விரிவாக்கக்கூடிய ஒரு TAVI வால்வை இம்மருத்துவமனையின் சிறப்பு இருதயவில் நிபுணரான டாக்டர். சூரஜ் நரசிம்மன் தலைமையிலான மருத்துவக் குழு வெற்றிகரமாக பொருத்தியது.   

இரண்டாவது நபருக்கு தீவிர சுவாசப் பிரச்சனை இருந்தது.100 மீட்டர்கள் தூரம் வரை கூட அவரால் நடக்க இயலவில்லை.பெருந்தமனி வால்வில் கால்சியம் படிமங்கள் சேர்ந்திருப்பதன் காரணமாக நிகழ்கின்ற கடுமையான பெருந்தமனி குழாய் சுருக்கம் என அழைக்கப்படும் பாதிப்பு இருப்பது விரைவில் அவருக்கு உறுதி செய்யப்பட்டது.

இப்பிரச்சனையின் காரணமாக, பெருந்தமனி வால்வு திறப்பது பாதிக்கப்படும்.  இதனால், உடலின் பிற பகுதிகளுக்கு குறைவான இரத்தமே செல்லும்.இப்பாதிப்பு நிலையின் காரணமாக அவரது இதயத்தின் பம்ப்பிங் செயல்பாடு 15% ஆக குறைந்திருந்தது.அத்துடன் அவரது சிறுநீரக செயல்திறனும் குறைந்திருந்தது. திறந்தநிலை இதய அறுவைசிகிச்சை செய்யப்படுமானால், உயிரிழப்பிற்கு அதிக இடர் வாய்ப்பு அவருக்கு இருக்கும் என்று மதிப்பிடப் பட்டது.  

விரிவான கலந்தாலோசனைக்குப் பிறகு TAVI செயல்முறையை இவருக்கு மேற்கொள்ள மருத்துவ நிபுணர்களின் குழு முடிவு செய்தது.காலில் மிகச்சிறிய துளையை ஏற்படுத்தி, அதன்வழியாக சுயவிரிவாக்கம் செய்து கொள்ளக்கூடிய TAVI வால்வை மருத்துவர்கள் குழு அவருக்கு வெற்றிகரமாகப் பொருத்தியது.   

காவேரி மருத்துவ மனையின் செயல் இயக்குனர் மற்றும்  இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் T. செந்தில்குமார் வெற்றிகரமான இச்சிகிச்சை குறித்து கூறியதாவது: “பெருந்தமனி என்பது ஆக்சிஜன் நிறைந்த இரத்தத்தை முழு உடலுக்கும் எடுத்துச் செல்கின்ற மிகப்பெரிய இரத்த நாளமாகும். இடது வெண்ட்ரிக்கிள் என்பது இதயத்தின் உந்தி அறையாகும். பெருந்தமனி வால்வு என்பது, பெருந்தமனிக்கும் இதயத்தின் இடது கீழறைக்கும் இடையிலுள்ள வால்வாகும். இந்த உறுப்புகளில் ஏதேனும் பிரச்சனை இருக்குமானால், அது மிகவும் ஆபத்துகரமானதாகும் மற்றும் உடனடியாக மருத்துவ இடையீட்டு சிகிச்சை இதற்குத் தேவைப்படும்.இதற்கு முன்பு வரை இத்தகைய பாதிப்பு நிலைகள் அறுவைசிகிச்சை மூலம் சரிசெய்யப்படும் அல்லது வால்வு மாற்றப்படும்.

இந்த அறுவைசிகிச்சையில் உயிரிழப்பிற்கு பெரிய அளவிலான இடர்வாய்ப்பும் இருக்கும்.  நீண்டநாட்கள் மருத்துவமனையில் தங்கியிருக்கும் அவசியத்தோடு மார்பு மீது பெரிய அளவில் வெளியில் தெரியக்கூடிய தழும்பும் இதனால் ஏற்படும்.   சிகிச்சைக்குப் பிறகு மீண்டு இயல்புநிலைக்கு வருவதற்கு இந்நபர்களுக்கு நீண்டகாலம் தேவைப்படும்.  அதன்பிறகே வழக்கமான நடவடிக்கைகளை இவர்களால் மேற்கொள்ள முடியும்.  ஆனால், நவீன கண்டுபிடிப்புகள், டிரான்ஸ்கதீட்டர் பெருந்தமனி வால்வு பதியம் (TAVI) போன்ற புதிய விருப்பத்தேர்வுகளை சாத்தியமாக்கியிருக்கின்றன.

அறுவைசிகிச்சை இல்லாமலேயே ஒரு வால்வை இதன்மூலம் பொருத்த முடியும்.  காலின் இரத்தநாளங்களில் சிறிய துளைகளிட்டு, அவற்றின் வழியாக உட்செலுத்தப்படும் குழாய்களைப் பயன்படுத்தி ஒரு செயற்கை வால்வினை பொருத்துவது இம்மருத்துவ செயல்முறையில் இடம்பெறுகிறது.  65 வயதிற்கு மேற்பட்ட வயதான நபர்களுக்கு மற்றும் பிற உறுப்பு அமைப்புகளில் பிரச்சனைகள் இருக்கின்ற அல்லது அறுவைசிகிச்சைக்கு அதிக அளவு இடர்வாய்ப்பு இருக்கின்ற நபர்களுக்கு இந்த வழிமுறை வழக்கமாக அறிவுறுத்தப்படுகிறது.  

எவ்வித வலியும் இல்லாமல் 45 நிமிடங்களுக்குள் விழித்திருக்கும் நிலையிலுள்ள ஒரு நோயாளிக்கு TAVI மருத்துவ செயல்முறையை மேற்கொள்ள முடியும் என்பது இதன் தனித்துவ அம்சமாகும்.  இச்செயல்முறை நிறைவடைந்ததிலிருந்து 6 மணி நேரங்களுக்குப் பிறகு இந்நோயாளியால் எழுந்து நடமாட இயலும்; வழக்கமான செயல்பாடுகளை செய்வதற்கான திறனைப் பெற்றிருக்கும் நிலையில், 48 மணி நேரங்களுக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு சென்று இயல்பான செயல்களை இவர்களால் செய்ய முடியும்.” 

திறந்தநிலை அறுவைசிகிச்சைகளில் அதிகமான இடர்வாய்ப்பைக் கொண்டிருந்த இந்த முதியவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கு மிகத் துல்லியமான நோயறிதலையும் மற்றும் சரியான சிகிச்சை முறையையும் அடையாளம் கண்டு வெற்றிகரமாக இதனை நிகழ்த்தியிருக்கும், இடையீட்டு இதயவியல் சிகிச்சை நிபுணரான டாக்டர். சூரஜ் நரசிம்மன் மற்றும் அவரது குழுவினரை நான் பாராட்டி மகிழ்கிறேன்.” என்று டாக்டர். T. செந்தில் குமார் மேலும் கூறினார். 

இந்த மருத்துவ செயல்முறைக்குப் பிறகு பாதிப்பு அறிகுறிகளும், வேறு சிக்கல்களும் ஏதும் இல்லாத நிலையில், சிறப்பான சிகிச்சை விளைவுகளுடன் இந்த மூத்த குடிமக்களும் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  இப்போது இவர்களால் இயல்பாக நடக்க முடிகிறது மற்றும் வழக்கமான செயல்பாடுகளை நன்றாகவே அவர்களால் செய்ய இயல்கிறது.

நமதுநிருபர்- K.ஷாகுல் ஹமீது - திருச்சி