அனுமதி பெற்றால் மட்டுமே விநாயகர் சிலை
திருச்சி காவல் ஆணையர் பேட்டி
திருச்சியில் விநாயகர் சிலை கட்டுப்பாடு குறித்த கூட்டத்தில் இந்து முன்னணியினர் வெளிநடப்பு- அனுமதி பெற்றால் மட்டுமே சிலை வைக்கலாம் காவல் ஆணையர் பேட்டி
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31ம் தேதி இந்து மக்களால் கொண்டாடப்பட உள்ளது. இதனிடையே விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது திருச்சி மாநகரில் திருக்கோவில்கள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து விசர்ஜனம் செய்யப்படும்.
இது தொடர்பாக திருச்சி மாநகர காவல்துறை சார்பில் இந்து முன்னணி, இந்து அமைப்புகள் மற்றும் திருக்கோவில் நிர்வாகிகளுடன் மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் விடுத்ததால், மாநகர காவல் ஆணையர் அரங்கினுள் வந்தவுடன் கூட்டத்தை புறக்கணித்து இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் வெளியேறினர்.
இதனால் கூட்ட அரங்கில் நாற்காலிகள் காலியாக இருந்ததால் மாநகர காவல் ஆணையர் கடும் அதிருப்தி அடைந்தார்.தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் போஜராஜன்..... காவல்துறையும்,அரசும் விநாயகர் சிலை வைக்கக் கூடாது எனவும் அனுமதி வாங்க வேண்டும் எனவும் கூறுகின்றனர். அடக்கு முறையில் ஈடுபடுகின்றனர். மேலும் விநாயகர் சிலையை வைத்து பணம் பறிக்கும் நோக்கில் உள்ள அமைப்புகளுடன் கூட்டத்தை நடத்துகின்றனர் என குற்றம் சாட்டினர்.
பாரத நாட்டில் வழிபாடு நடத்த அனுமதி உள்ளது என்றபட்சத்தில் திருச்சி மாவட்டத்தில் 500 இடங்களில் விநாயகர் சிலை வைப்போம் எனவும், காவல்துறையுடன் அனுமதி பெற மாட்டோம் அதேநேரம் ஒலிபெருக்கி வைப்பதற்கு மட்டும் அனுமதி பெறுவோம் என தெரிவித்தனர். மேலும் 12- 4 மணிக்குள் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால், வழக்கம்போல நடைபெறும் முறையை பின்பற்றுவோம் என தெரிவித்தனர்.
சிலைகளுக்கு மாநகர காவல் துறை அனுமதிக்காவிட்டாலும் திருச்சி மாவட்டம் முழுவதும் 500 சிலைகளை வைப்போம் என ஆவேசத்துடன் குறிப்பிட்டார்.முன்னதாக அவரை செய்தியாளர்கள் பேட்டி எடுத்துக் கொண்டிருந்த பொழுது திருச்சி மாநகர காந்தி மார்க்கெட் காவல் நிலைய ஆய்வாளர் செய்தியாளர்களைப் பிடித்து தள்ளியதால் செய்தியாளர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு காவல்துறையினர் செய்தியாளர்களை சமாதானப்படுத்தி கூட்ட அரங்கிற்கு அழைத்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன்... அரசு அளித்த கட்டுப்பாடுகள் மட்டுமே தற்போது உள்ளது. கட்டுப்பாடுகள் குறித்து அவர்களுக்கு எடுத்துக் கூறியுள்ளோம், புதிதாக எந்த ஒரு கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. எத்தனை விநாயகர் சிலைகள் வைக்கப்படும் என்பது இனிமேல் தான் தெரியவரும்.
கடந்த ஆண்டு 230 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டது. சட்டத்திற்கு உட்பட்டு வைத்தால் அனுமதி அளிக்கப்படும் இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்திற்கு உட்பட்டு சிலை வைக்க வேண்டும் என்பதே காவல்துறையின் அறிவுரை என்றார்.
இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.விநாயகர் சிலைகள் காவிரி பாலத்தில் வைத்தே கரைக்கப்படும் என்பதால் விநாயகர் சதுர்த்தி விழா முடிந்த பின்னர் பராமரிப்பு பணிகளுக்காக காவிரி பாலம் மூடுவது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours