7000 பேரிடம் 700 கோடி ரூபாய்  மோசடி

திருச்சி பொருளாதர குற்றப்பிரிவில் பரபரப்பு




தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கமாலுதீன். இவர் ராஹத் ஆம்னி பேருந்து டிராவல்ஸ் நடத்தி வந்தார். இவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் முதலீடாக பெற்று பெறப்பட்ட பணத்தை அவர் நடத்தும் டிராவல்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.

கடந்த 20 வருட காலமாக ஒவ்வொரு மாதமும் அவர் நடத்திய டிராவல்ஸில் கிடைக்கும் லாபத்தில், முதலீடு செய்துள்ள ஒவ்வொரு வருக்கும் அவரவர் களுக்கு உரிய பங்கை முறையாக செலுத்தி வந்துள்ளார். அவருடைய இறப்பிற்கு பிறகு சட்ட ரீதியான வாரிசுகள் பங்குதாரர்களின் பணத்தை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றி வருவதாக தங்கள் பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என்று கூறி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் தங்களுடைய புகார் மனுக்களை கொடுக்க 7000 பேர் வந்துள்ளனர்.

இதுகுறித்து பங்குதாரர்களின் ஒருங்கிணைப்பாளரான கமாலுதீன் கூறுகையில்...தஞ்சையை சேர்ந்த தொழிலதிபர் கமாலுதினுக்கு மொத்தம் 182 பேருந்துகளும் அதில் 23 நகர் பேருந்துகளும், கிரானைட் குவாரி, பள்ளி, பெட்ரோல் பங்க், சூப்பர் மார்க்கெட்டுகள், தங்கும் விடுதிகள் என சுமார் 1500 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகள் உள்ளது. 

கடந்த 20 வருடங்களுக்கு மேலாக பங்குதாரர்கள் ஆகிய எங்களிடம் முதலீடாக பணம் பெற்று ஒவ்வொரு மாதமும் டிராவல்ஸில் கிடைக்கும் லாபத்தில் சரியாக பங்குகளை பிரித்து கொடுத்து வந்தார். எதிர்பாராத விதமாக கடந்த 19.2.2021 அன்று அவர் இறந்து விட்டார்.

இந்நிலையில் நிறுவனத்தில் முதலீடு செய்த சுமார் 6800 பங்குதாரர்களும் 3 மாதத்திற்கு பிறகு அவருடைய உறவினர்களான மனைவி மற்றும் சட்டப்படியான வாரிசுகளிடம் கடந்த 2021 செப்டம்பர் முதல் டிசம்பர் வரை தங்களுடைய பங்குத் தொகையை திருப்பி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அவர்களை நேரில் சந்தித்து பேசியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. அவர்கள் பணத்தை திருப்பி தருவதாக தெரியவில்லை.

எனவே தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவில் 1000 பங்குதாரர்களும் புகார் மனுவை அளித்தோம். வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் பணம் திருப்பிதரப்படவில்லை.எனவே எங்களுடைய வழக்குகளை திருச்சி பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்ததின் அடிப்படையில் வழக்கும் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. 

கடந்த 9 மாதங்களாக தொடர்ந்து வழக்கு தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவுக்கு வந்து செல்கிறோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே இன்று ஒட்டுமொத்த பங்குதாரர்களான 6800 பேரும் அமைதியான முறையில் எங்களுடைய கோரிக்கைகளை பதாகைகளாக கைகளில் ஏந்தி கொண்டு அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். மேலும் எங்களுடைய புகார் மனுக்களை பொருளாதார குற்றப்பிரிவில் இன்று கொடுக்கிறோம் என தெரிவித்தார்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - திருச்சி

Share To:

IBINEWS

Post A Comment:

0 comments so far,add yours