விலையின்றி
சமையல் எரிவாயு
சிலிண்டர்
2022 ஆகஸ்ட் 31 வரை தமிழ்நாட்டில் சுமார் 37 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புகள் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளன: சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் தகவல்
2022 ஆகஸ்ட் 31 வரை தமிழ்நாட்டில் சுமார் 37 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புகள் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளன. சென்னை நெசப்பாக்கம் பகுதியில் பிபிசிஎல் பெட்ரோல் நிலையம் அருகே செப்டம்பர் 29 நடைபெற்ற நிகழ்ச்சியில் 20 பெண் பயனாளிகளுக்கு இந்த திட்டத்தின் மூலம் சமையல் எரிவாயு இணைப்புகளை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணையமைச்சர் ராமேஸ்வர் தெலி வழங்கினார்.
இந்திய எண்ணெய் கழகம் 19,21,340 இணைப்புகளையும், இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் 9,42,521 இணைப்புகளையும், பிபிசிஎல் 8,12,293 இணைப்புகளையும் வழங்கியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
2021-22 நிதியாண்டில் 62,06,748 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வாங்க தமிழ்நாட்டில் பிரதமரின் உஜ்வாலா திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.413.90 கோடி எண்ணெய் நிறுவனங்கள் மூலம் மத்திய அரசால் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
பெண்களின் சுகாதார பாதுகாப்பை கருத்தில் கொண்டு சமையலறையின் புகையிலிருந்து அவர்களை விடுவிக்கும் வகையில் விலையின்றி சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் பிரதமரின் உஜ்வாலா திட்டம் 2016 மே 1 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டதை அவர் நினைவுகூர்ந்தார்.
நெசப்பாக்கத்தில் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) நிரப்பும் நிலையத்தையும், விற்பனையையும் அமைச்சர் ராமேஸ்வர் தெலி தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய எண்ணெய் கழகத்தின் செயல் இயக்குனரும், மாநிலத்தில் உள்ள எண்ணெய் நிறுவனங்களின் தலைவருமான வி.சி அசோகன், இந்திய எண்ணெய் கழகத்தின் தென் மண்டல செயல் இயக்குனர் கே.சைலேந்திரா,பிபிசிஎல் தென் மண்டல சில்லரை விற்பனை பிரிவு தலைவர் புஷ்ப குமார் நய்யார், எச்பிசிஎல் மண்டல தலைவர் சஞ்சய் மாத்தூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக சிபிசிஎல் விரிவாக்க திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ராமேஸ்வர் தெலி ஆய்வு செய்தார்.எண்ணூர் பகுதியில் உள்ள காமராஜர் துறைமுகத்தில், ரூ.900 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இந்திய எண்ணெய் கழகத்தின் பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கான துணை துறைமுகப் பணிகளை அமைச்சர் பார்வையிட்டார். இந்த துணை துறைமுகம் ஆண்டுக்கு 2 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாளும் திறன்கொண்டதாகும்.
வல்லூர் முனையம் மற்றும் சிபிசிஎல் நிறுவனங்களை குழாய் மூலம் இந்த துணைத்துறைமுகம் இணைப்பதாக இருக்கும். இந்த துணைத் துறைமுகம் 2025-ல் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மணலி பகுதியில் உள்ள ஆமுல்லைவாயல் கிராமத்தில் 71 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த உயவு எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை வளாகத்தின் கட்டுமான பணிகளையும் ராமேஸ்வர் தெலி பார்வையிட்டார்.
ரூ.1400 கோடி செலவில் அமைக்கபடவுள்ள இந்த தொழிற்சாலை ஆண்டுக்கு 680 ஆயிரம் மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்டதாகும்.இது அடுத்த ஆண்டு செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டங்களின் மூலம் அருகில் உள்ள பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான திறன் மிகுந்த மற்றும் திறன் குறைந்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
Post A Comment:
0 comments so far,add yours