போதைப் பொருள் இல்லா இந்தியா

மத்திய அரசு முயற்சி

வீரேந்திர குமார்




செங்கல்பட்டு மாவட்டத்தில் 359 கிராம ஊராட்சிகளில் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு: மத்திய அமைச்சர் வீரேந்திர குமார்

செங்கல்பட்டு மாவட்டம்  கோவளம் அருகே முட்டுக்காட்டில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட  ஊனமுற்றோரின் மேம்பாட்டிற்கான  தேசிய நிறுவனத்தில் செயல்படுத்தப்படும் சமூக நீதி திட்டங்களின் செயலாக்கம் குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளுடன் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் வீரேந்திர குமார் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் பேசிய அவர், மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ்  செங்கல்பட்டு மாவட்டத்தில் 151 கிராம ஊராட்சிகளில் உள்ள வீடுகளுக்கு குழாய் மூலம் தூய்மையான குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.இந்த திட்டம் மேலும் 208 கிராம ஊராட்சிகளுக்கு விரிவுப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

நடப்பாண்டில்  செங்கல்பட்டு மாவட்டத்தில் 142 கிராம ஊராட்சிகளில்  445 பணிகள் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் செயல் படுத்தப்படும் என்றும், இதற்கான ரூ.64 கோடி செலவிடப்படும் என்றும் கூறினார். பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 16, 265 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளதாகவும் இதில், 11,308 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மாவட்டத்தில் பிரதமர் கிராம சாலை திட்டத்தின் கீழ் 15 திட்டங்களை செயல்படுத்தப் படுவதாகவும் இதற்காக  ரூ.16 கோடி செலவிடப் படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு, 8 ஆண்டுகளில் கிராமங்களில் பெண்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் அவர்களுடைய இடர்பாடுகளை குறைக்கும் வகையில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

போதைப் பொருள் இல்லா இந்தியாவை உருவாக்க, மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக, பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில்,ஒன்றரை கோடி மாணவர்கள் போதைப்பொருளை பயன்படுத்த மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டதாக கூறினார். 

இவர்களுக்காக, பேச்சுப்போட்டி, விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஓவியப் போட்டி உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.மதிய உணவு திட்டத்தின் கீழ் அங்கன்வாடிகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரத்தை அதிகாரிகள் அவ்வப்போது, கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதேபோல், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில்  இணைந்துள்ள மக்கள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, புற்றுநோய் உள்ளிட்ட நோய்களின் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை மற்றும் இத்திட்டத்தில் இணைந்துள்ள தனியார் மருத்துவமனைகளை பயன்படுத்தி கொள்ளுமாறு கூறினார்.

ஒன்றுக்கும் மேற்பட்ட  ஊனமுற்றோரின் மேம்பாட்டிற்கான  தேசிய நிறுவனத்தின் செயல்பாடு குறித்து பாராட்டு தெரிவித்த அமைச்சர், அண்டை மாநிலத்தை சேர்ந்தவர்களும், பயன்பெறும் வகையில், இதன் செயல்பாட்டினை விரிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், ஒன்றுக்கும் மேற்பட்ட  ஊனமுற்றோரின் மேம்பாட்டிற்கான  தேசிய நிறுவனத்தின் இயக்குனர் நச்சிகேத்தா ராவத் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

சிறப்பு நிருபர் - A.M.மாஹீன் - சென்னை

Share To:

IBINEWS

Post A Comment:

0 comments so far,add yours