07/07/22

லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கு  நடிகர் ராம் பொத்தினேனி, கீர்த்தி ஷெட்டி நடித்துள்ள வாரியர் திரைப்படத்தின் வெளியிட்டுக்கான  முன்னோட்ட விழா சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர்கள் விஷால், ஆர்யா, இயக்குனர்கள்  பாரதிராஜா மணிரத்னம், ஷங்கர்கார்த்திக் சுப்புராஜ், பார்த்திபன், வசந்தபாலன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட 20 பேர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்அதில் அனைவரும் லிங்குசாமியையும் வாரியர் திரைப்படத்தையும் பாராட்டி பேசினர்.

தமிழ்,தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள வாரியர் விழாவில் பேசிய விஷால் தற்போது தெலுங்கு நடிகர்களின் படங்கள் தமிழில் வெளியாகின்றன. தமிழ் நடிகர்கள் தெலுங்கில் நடிக்கின்றனர். இதைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.தென்னிந்திய சினிமா தென்னிந்திய சினிமா என்று சும்மாவா சொல்வார்கள். இன்று தென்னிந்திய சினிமாதான் ரூல் செய்து கொண்டிருக்கிறது என தெரிவித்தார். அத்துடன் பாலிவுட் தற்போது கதிகலங்கி உள்ளது எனவும் கூறினார். தெலுங்கு ரசிகர்கள் ரஜினிகாந்த்,  கமல்ஹாசன் போன்ற தமிழ் நடிகர்களை வரவேற்றுள்ளனர். அதுபோல  ராம் போத்தினேனியை தமிழ் ரசிகர்கள் நிச்சயம் வரவேற்பார்கள் என விஷால் கூறினார்.



தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளரான இளையராஜா மாநிலங்களவை எம்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இளையராஜாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். 'மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் அருமை நண்பர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்' என்று அவர் தமது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்






தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. பல மாதங்கள் கழித்து ஜூலை 5-ல் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட ஒருவர் மரணம் அடைந்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு பிறபிக்கப்படுமா என்பது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்

கொரோனா தினசரி பரிசோதனைகளில் 10 சதவீதத்திற்கும் மேல் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டாலோ அல்லது 40 சதவீதத்திற்கும் மேல் மருத்துவ சிகிச்சையில் இருந்தாலோ மட்டுமே ஊரடங்கு என்பது அவசியமாகும்.

தமிழ்நாட்டில் நேற்று வரை 2662 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்போது சிகிச்சையில் இருந்தாலும் கூட மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைவாகவே உள்ளது.

எனவே தற்போதைய நிலையில் ஊரடங்கிற்கு அவசியம் இல்லை , ஊரடங்கு பிறப்பிக்க அவசியம் ஏற்படாத வகையில் பொதுமக்களும் அரசின் நிலையான வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.


சென்னை அரசு ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில், குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் பெரு நிறுவனங்களில் பணியாற்றும் 18 முதல் 59 வயதுடைய தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு தனியார் மருத்துவமனைகளில் கோவிட் தடுப்பூசி முன்னெச்சரிக்கை தவணை வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “18 வயது முதல் 59 வயது வரை உள்ள நபர்கள் பூஸ்டர் தடுப்பூசியை 386 ரூபாய் செலுத்தி தனியார் மருத்துவமனைகளில் போட வேண்டும்.

குறு, சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு அந்தந்த தொழில் நிறுவனங்களே பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசுடன் இணைந்து செயல்படுவதற்கு ஏதுவாக இந்த கூட்டம் நடைபெற்றதாகவும் தெரிவித்தார்.

சி.எஸ்.ஆர் நிதியிலிருந்து இதுவரை 10 லட்சம் தொழிலாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் மக்கள் பிரச்சினைகளுக்காக போராட்டம் நடத்துகிறோம் என்று கூறி இரட்டை வேடம் போடுவதை தமிழக பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்



இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் எப்பாடுபட்டாவது பாஜகவை வளர்க்க வேண்டுமென்று அண்ணாமலை அதிரடி போராட்டங்களை அடிக்கடி நடத்தி வருகிறார். தமிழகத்தின் ஒட்டுமொத்த நலனுக்கு எதிராக மத்திய பாஜக அரசு செயல்படுவதால் தொடர்ந்து 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், அதைத் தொடர்ந்து ஊரக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களிலும் திமுக தலைமையிலான, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணிக்கு அமோக ஆதரவை வழங்கி வெற்றி மேல் வெற்றியை மக்கள் வழங்கி வருகிறார்கள்

தமிழக பாஜகவை அனைத்து தேர்தல்களிலும் முற்றிலும் நிராகரித்து வருகிறார்கள். இதன்மூலம் தமிழக பாஜகவின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறிவிட்டது.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்து ஓராண்டுகளில் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிற வகையில் மகத்தான சாதனைகளை புரிந்து வருகிறது. இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்கிற வகையில் நாள்தோறும் சாதனை பட்டியல்களை படைத்து வருகிறது
இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்

 ஒற்றை தலைமை விவகாரத்தால் அதிமுகவில் மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டது. அதில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரான தனது ஒப்புதல் இன்றி வருகிற 11-ந்தேதி பொதுக்குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

கட்சியின் சட்ட விதிகளை திருத்தி ஒற்றை தலைமையை கொண்டு வருவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதால், பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் இன்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

செயற்குழு, பொதுக்குழுவை சேர்ந்த 2,441 பேரின் ஆதரவுடன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் ஒற்றை தலைமையாக வரவேண்டும் என 2,441 பேரும் தனித்தனியே ஆதரவு தெரிவித்துள்ளனர்.