09/28/22

தேசிய விளையாட்டு

விருதுகள் 2022

கடைசி தேதி நீடிப்பு

தேசிய விளையாட்டு விருதுகள் 2022-க்கான கடைசி தேதியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் அக்டோபர் 1 வரை நீடித்துள்ளது.

மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது, அர்ஜூனா விருது, துரோணாச்சார்யா விருது, தியான் சந்த் விருது,  தேசிய விளையாட்டு ஊக்குவிப்பு விருது, 2022-ம் ஆண்டுக்கான மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோப்பை ஆகியவற்றுக்கு 2022 ஆகஸ்ட் 27 அன்று மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் அமைச்சகம் விண்ணப்பங்களை வரவேற்றிருந்தது.

இதற்கான அறிவிப்பு  அமைச்சகத்தின் www.yas.nic.in என்ற இணையதளத்தில்  பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  விண்ணப்பங்கள் அனுப்புவதற்கான கடைசி தேதி 2022 செப்டம்பர் 27 என்பதிலிருந்து 2022 அக்டோபர் 1–க்கு (சனிக்கிழமை) நீடிக்கப்பட்டுள்ளது.

தகுதியுள்ள விளையாட்டு வீர்ர்கள் / பயிற்சியாளர்கள் / அமைப்புகள் / பல்கலைக்கழகங்கள் இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கென்றே உருவாக்கப்பட்டுள்ள dbtyas-sports.gov.in என்ற இணையப்பக்கத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளனர்.

அக்டோபர் 1-க்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப் படமாட்டாது.

நமது செய்தியாளர் G.மோனிஷாசென்னை

சட்டவிரோத இணையதளம்

அரசுக்கு வருவாய் இழப்பு

சர்வதேச அழைப்புகளுக்காக அமைக்கப்பட்ட சட்டவிரோத தொலைத்தொடர்பு கட்டமைப்பை தொலைத்தொடர்புத் துறை கண்டுபிடித்துள்ளது.

இந்தியாவில் உள்ள உள்நாட்டு மொபைல் மற்றும் வயர்லைன் வாடிக்கை யாளர்களுக்கு சர்வதேச அழைப்பு வசதியை அளிப்பதற்காக சட்டவிரோதமாக இணையதளம் மூலம் தொலைத் தொடர்பு கட்டமைப்பு அமைக்கப்பட்டதை தொலைத்தொடர்பு துறை கண்டுபிடித்துள்ளது.

இதுபோன்ற சட்டவிரோதமான கட்டமைப்பு நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலையும், அரசுக்கு வருவாய் இழப்பையும் ஏற்படுத்தும்.கடந்த 4 மாதங்களில் 30 சட்டவிரோத தொலைத்தொடர்பு அமைப்புகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

இதுபோன்ற, சட்டவிரோத தொலைத் தொடர்பு அமைப்புகள் இருப்பது தெரியவந்தால், பொதுமக்கள் 18001104204/1963 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு  புகார் அளிக்கலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நமது செய்தியாளர் G.மோனிஷாசென்னை

பகத் சிங் பிறந்த தினம்

பிரதமர் தலைவணக்கம்

தியாகி பகத் சிங் பிறந்த தினத்தையொட்டி அன்னாருக்கு பிரதமர் தலைவணங்கினார்



தியாகி பகத் சிங் பிறந்த தினத்தையொட்டி அன்னாருக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைவணங்கினார். தியாகி பகத் சிங் குறித்து தமது எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ள வீடியோ பதிவையும் பிரதமர் பகிர்ந்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;  “தியாகி பகத் சிங் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி, அவருக்கு நான் தலைவணங்குகிறேன். அவருடைய துணிச்சல், நமக்கு அதிக உத்வேகத்தை அளிக்கிறது. நமது நாடு குறித்த அவரது தொலைநோக்குப் பார்வையை நனவாக்க, நாம் உறுதியேற்போம்.”

நமது செய்தியாளர் G.மோனிஷாசென்னை

PVC பூட்ஸ் பற்றிய

கலந்துரையாடல்

நிகழ்ச்சி

தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் PVC பூட்ஸ் பற்றிய திருத்தியமைக்கப்பட்ட இந்திய தரநிலைகள் கலந்துரையாடல்




இந்திய தர நிர்ணய அமைவனம் சார்பில் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் PVC பூட்ஸ் பற்றிய திருத்தியமைக்கப்பட்ட இந்திய தரநிலைகள்” குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று நடந்தது.   

நிகழ்ச்சியில் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி மோகன், இந்திய தர நிர்ணய அமைவனத்தின் விஞ்ஞானிகள், ஜோஸ் சார்லஸ், பானு கிரண் கலந்து கொண்டனர்.

சிமெண்ட், உணவு பதன தொழில்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு தொழிற்சாலைகளில் பணியாற்று பவர்களுக்காக பிவிசி பூட்ஸ் பரிந்துரைக்கப் படுகிறது. இத்தகைய பூட்ஸ்களில் தடிமன், ஏற்ற இறக்கம் போன்ற பல தேவைகளுக்கான மதிப்புகள் மாற்றியமைக்கப்பட்டு, செயல்திறன் மற்றும் குளிர் நெகிழ்வு எதிர்ப்பிற்கான கூடுதல் தேவைகள் அறிமுகப் படுத்தப்பட்டன.

மத்திய காலணி பயிற்சி நிறுவனம் (CFTI), காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (FDDI), இத்தகைய பூட்ஸ்களை பயன்படுத்தும் தொழிற்சாலைகள் ஆகிய பல்வேறு அமைப்புகளில் இருந்து பலர் கலந்து கொண்டனர். மூலப்பொருள் தேவைகள் முதல் சோதனை வரை தரநிலையின் விவரக்குறிப்புகள் விவாதிக்கப்பட்டன.

நமது செய்தியாளர் G.மோனிஷாசென்னை

இஸ்லாமிய

கூட்டமைப்பின் கூட்டம்

K.M.K.ஹபீப் ரஹ்மான்

தலைமை

திருச்சி இஸ்லாமிய கூட்டமைப்பின் அனைத்து கட்சிகள் இயக்கங்களின் கூட்டம் கூட்டமைப்பின் தலைவர் K.M.K.ஹபீப் ரஹ்மான் தலைமையில் இன்று 28.09.2022 நடைபெற்றது.




இஸ்லாமிய கூட்டமைப்பின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் இமாம் R. அப்துல்லாஹ் ஹஸ்ஸான் பைஜி MBA,LLB மற்றும் உதுமான் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அக்டோபர் 2 அமைதி பூங்காவான திருச்சியில் RSS ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கக் கூடாது என்று  இக்கூட்டமைப்பு  வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. மேலும் திருச்சி காவல் ஆணையரை நேரில் சந்தித்து இது சம்பந்தமாக மனு அளிப்பது என்று இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அவர்கள் செல்லும் பாதைகளில் பெரும்பாலான இடங்களில் பள்ளிவாசல்களும்,  வியாபார ஸ்தலங்களும் குடியிருப்புகளும் இருப்பதால் கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில் மக்களுக்கு இந்த ஊர்வலத்தின் மூலம் அச்ச நிலை ஏற்பட்டிருக்கிறது.

எனவே மக்களின் இந்த அச்சத்தையும், திருச்சியை அமைதி பூங்காவாக தொடர்வதற்கும் காவல்துறை இந்த பேரணியை  உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

 இந்த கூட்டத்தில் திருச்சி மாவட்ட அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் அரசியல் கட்சிகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

நமதுநிருபர் - M.முஹம்மது நியாஸ் – திருச்சி

மத்திய அரசு

பணியாளர் தேர்வு

இலவச பயிற்சி


மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (STAFF SELECTION COMMISSION) மூலம் உதவி தணிக்கை அதிகாரி (Assistant Audit Officer), உதவி கணக்கு அதிகாரி (Assistant Account Officer), உதவி பிரிவு அதிகாரி (Assistant Section Officer), தணிக்கையாளர்(Auditor), ஆய்வாளர் (Central Bureau of Narcotics), வருமான வரித்துறை ஆய்வாளர்(CBDT) உள்ளிட்ட சுமார் 20,000 பணியிடங்களுக்கு இளநிலை பட்டப்படிப்பு அளவிலான சார்நிலைத் தேர்விற்கான(Combined Graduate Level Examination) அறிவிப்பாணை 17.09.2022 அன்று வெளிவந்துள்ளது.

இப்பணியிடங்களுக்கு இளங்கலை பட்டப்படிப்பு கல்வித்தகுதி உடைய வேலை நாடும் இளைஞர்கள் இணையவழியில் (www.ssc.nic.in) 08.10.2022 வரை விண்ணப்பிக்கலாம், இப்போட்டித்தேர்விற்கு நேரடி இலவச பயிற்சி வகுப்பு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் 29.09.2022 அன்று முதல் துவங்கப்படவுள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள, திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த, போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் வேலை நாடுநர்கள் அனைவரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

நமதுநிருபர் - M.முஹம்மது நியாஸ் – திருச்சி

பயிர் காப்பீடு செய்ய அறிவிப்பு

ஆட்சியர் தகவல்


திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், நடப்பு 2022-23ஆம் ஆண்டு ரபி சிறப்பு பருவத்தில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்த அரசு ஆணை பெறப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் வருவாய் கிராம அளவில் நெல்-II, பிர்கா அளவில் மக்காச்சோளம்-II மற்றும் பருத்தி-II பயிர்களுக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து வருகின்றனர்.

மேலும், நெல்- II, மக்காச்சோளம்-11 மற்றும் பருத்தி-II பயிர்களை பயிர் காப்பீடு செய்ய, வரும் நவம்பர் 15-ஆம் தேதி கடைசி நாளாகும். விவசாயிகளின் நலன்கருதி தங்களது பயிர்களை பயிர் காப்பீடு செய்து கொள்ள ஏதுவாக இம்மாவட்டத்திலுள்ள அனைத்து பொது சேவை மையங்களும் (08.11.2022) முதல் (15.11.2022) வரை 24 மணி நேரமும் செயல்பட மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இத்திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் (குத்தகைதாரர் உட்பட) பயிர் காப்பீடு செய்யலாம். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் பயிர் கடன் பெறும் விவசாயிகள் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் விருப்பத்தின் பேரில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேரலாம்.

இத்திட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய முன்மொழி படிவம், விண்ணப்ப படிவம், பயிர் சாகுபடி அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல் ஆகிய ஆவணங்களுடன், அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பொது சேவை மையங்களை அணுகலாம். மேலும் தகவலுக்கு, அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகவும்.

இத்திட்டத்தில், நெல் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு பிரீமியமாக ரூ.558/-, பருத்தி பயிருக்கு ஒரு ஏக்கருக்கு பிரீமியமாக ரூ.566/- மற்றும் மக்காச் சோளம் பயிருக்கு ஒருஏக்கருக்கு பிரீமியமாக ரூ.388/- செலுத்தி பயிர் காப்பீடு செய்யலாம்.

அறிவிக்கப்பட்ட இறுதி நாளுக்கு முன்பாக வெள்ளம் மற்றும் புயல் ஏற்படும் பட்சத்தில் பயிர் சேதம் அடைந்தால் பயிர் காப்பீடு செய்ய அன்றே இறுதி நாளாகும்.

எனவே, விவசாயிகள் அனைவரும் பயிர் காப்பீடு செய்ய இறுதி நாள் வரை காத்திருக்காமல் உடனடியாக நெல், மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்து பயன்பெறுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி

மீலாது விழா

தெருமுனைக் கூட்டம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

அழைப்பு

கே.எம்.காதர் மொகிதீன்

A.MD.இனாயத்துல்லா ஷெரிஃப்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சென்னை மேற்கு மாவட்டம் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சார்பில் உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உதய தின மீலாது விழா தெருமுனை கூட்டம் 29.09.2022 வியாழக்கிழமை மாலை 6 மணி அளவில் சென்னை 14 ராயப்பேட்டை ஐஸ் ஹவுஸில் உள்ள சேக் தாவூத் தெருவில் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியை சாலிஹ் சேட் பாக்கவி கிராஅத் ஓதி துவக்கி வைக்கிறார்.

சென்னை மேற்கு மாவட்ட தலைவர் யூசுப் குலாம் முஹம்மது தலைமை ஏற்க,

 அஞ்சுமன் ஏ ஷெரிஃப் தலைவர் A.MD.இனாயத்துல்லா ஷெரிஃப் தொகுப்புரை வழங்க,

சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.ஆலம்கான் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் விழா பேருரை ஆற்றுகிறார்.

திராவிட இயக்க சொற்பொழிவாளர் நாஞ்சில் கே.சம்பத்,

IUML மாநில பொதுச் செயலாளர் K.A.M.முகமது அபூபக்கர் Ex.எம்எல்ஏ.,

IUML மாநில முதன்மை துணைத் தலைவரும் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான M.அப்துல் ரகுமான் Ex.எம்.பி.,

IUML மாநில துணைத்தலைவரும் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான K.நவாஸ் கனி ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப்,

மாநில செயலாளர் K.M.நிஜாமுதீன்,

மாநில செயலாளர் மில்லத் இஸ்மாயில்,

MSF தேசிய பொதுச் செயலாளர் S.H.முகமது அர்ஷத்,

மாநில கவுரவ ஆலோசகர் K.P.இஸ்மத்,

மகளிர் அணி தேசிய தலைவி A.S.பாத்திமா முசபர் MC.,

மாநில இணை செயலாளர் ஆப்பனூர் ஜபருல்லா Ex.MC.,

மாநில இணை செயலாளர் இப்ராஹிம் மக்கி,

MYL தேசிய பொருளாளர் அன்சாரி மதார்,

MSF மாநில தலைவர் M.அன்சாரி,

தொழிலதிபர் குரோம் நசீர்,

தொழிலதிபர் முசப்பர் அகமது,

தென் சென்னை மாவட்ட தலைவர் பூவை M.S.முஸ்தபா,

தென் சென்னை மாவட்ட செயலாளர் மடுவை பீர்முகமது,

சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் A.M.H,இஸ்மாயில்,

சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் K.முதஸ்ஸர் காலித்,

சென்னை வடக்கு மாவட்ட தலைவர் கமுதி B.சம்சுதீன்,

சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் இர்ஃபான் சுபைர்,

தி நகர் தொகுதி தலைவர் K.ஜெசங்கர்M.A.,B.L.,

மயிலாப்பூர் தொகுதி தலைவர் J.அலி முகமது,

மகளிர் அணி சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் A.M.ஜெய்த்தூன்,

மகளிர் அணி சென்னை மண்டல துணை ஒருங்கிணைப்பாளர் A.R.ரபியா பேகம்,

சென்னை மேற்கு மாவட்ட பொருளாளர் AMY.ஐஸ் ஹவுஸ் அப்துல் ரஹ்மான்,

மாநில கவுரவ ஆலோசகர் அப்துல் காதர்,

அண்ணா நகர் தொகுதி அமைப்பாளர் மீரான் மொய்தீன்,

அண்ணா நகர் தொகுதி துணைத் தலைவர் S.ஜாபர் ஷெரீப் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பித்து தர வேண்டுமென அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு சென்னை மேற்கு மாவட்ட சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நமதுநிருபர்.முஜாஹித் தாஹா - சென்னை