இரண்டாம் கட்ட மெட்ரோ பணி - ஜும்ஆ பள்ளிக்கு பாதிப்பு - வக்பு வாரியத்தலைர் எம்.அப்துல் ரஹ்மான் நேரில் ஆய்வு
இரண்டாம் கட்ட மெட்ரோ பணியால் மயிலாப்பூர் கச்சேரி ரோடு ஜும்ஆ பள்ளிக்கு பாதிப்பு தமிழ்நாடு வக்பு வாரியத்தலைர் எம்.அப்துல் ரஹ்மான் Ex.எம்பி நேரில் ஆய்வு
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ இரயில் திட்டப்பணிகள் ரூ. 61,843 கோடி மதிப்பில் 118.9 கீ.மி தூரத்திற்கு நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை 26.1 கி.மீ தொலைவுக்கும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ தொலைவுக்கும், மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீ தொலைவுக்கும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டப்பணி நடைபெறுகிறது.
இந்த இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை உள்ள வழித்தடத்தில் மயிலாப்பூரில் 3 அடுக்குகளில் மெட்ரோ ரயில் நிலையம் அமையவிருப்பதாக கடந்த மே மாதம் மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.
மெட்ரோ ரயில் நான்காம் வழித்தடத்தில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், வடபழனி முருகன் கோவில், வடபழனி வெங்கீஸ்வரர் கோவில், வடபழனி அழகர் பெருமாள் கோவில், விருகம்பாக்கம் சுந்தரவரதராஜ பெருமாள் கோவில், வளசரவாக்கம் வேல்வீஸ்வரர் கோவில், பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோவில் ஆகிய புராதன கோவில் கட்டிடங்களும்,
சாந்தோம் தேவாலயம், ரோசரி தேவாலயம் உள்ளிட்ட மூன்று தேவாலயங்கள், 350 வருட பழமை வாய்ந்த கச்சேரி ரோடு ஜும்ஆ மஸ்ஜித் உள்ளிட்ட பழம்பெருமை மிக்க புராதான கட்டிடங்கள் அமைந்துள்ளது.
இதில் அமைந்துள்ள தேவாலயங்கள், கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தளங்களுக்கு பாதிப்புகள் இல்லை என தமிழக அரசு அண்மையில் அறிவித்திருந்தது.
இந்நிலையில் 350 வருட பாரம்பரியமிக்க கச்சேரி ரோடு ஜும்ஆ மஸ்ஜிதின் ஒரு பகுதி மெட்ரோ நான்காம் வழித்தடத்தில் பாதிப்படைவதாக அப்பள்ளியின் நிர்வாகிகள், மற்றும் ஜமாத்தார்கள் தமிழ்நாடு வக்பு வாரியத்தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் Ex.எம்பி அவர்களை நேரில் சந்தித்து மெட்ரோ பணிகளால் வக்பு பள்ளிக்கு ஏற்படும் இழப்பு குறித்தும், அதிலிருந்து கச்சேரி ரோடு பள்ளியை மீட்கக்கோரியும் வாரியத்தலைவரிடம் மனு அளித்திருந்தனர்.
தமிழ்நாடு வக்பு வாரியத்தலைவர் எம்.அப்துல் ரஹ்மான், வாரிய உறுப்பினர்கள், முதன்மை செயல் அலுவலர் ரபியுல்லா உள்ளிட்டோரின் கலந்தாலோசனையில் கடந்த 27 அன்று நடைபெற்ற வாரியக்கூட்டத்தில் மெட்ரோ அலுவலக அதிகாரிகள், கச்சேரி ரோடு ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகிகள், வக்பு வாரிய அதிகாரிகள் ஆகியோரை விசாரித்து மெட்ரோ நிலம் எடுப்பில் இருந்து வக்பு சொத்தை மீட்க விசாரணை நடைபெற்றது.
அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் எம். அப்துல் ரஹ்மான் Ex.எம்பி தலைமையில் வாரிய உறுப்பினர்கள் ஆளுர் ஷாநவாஸ் எம்எல்ஏ, டாக்டர் ஹாஜா கே மஜீத் ஆகியோரை கொண்ட 3 பேர் கமிட்டி அமைக்கப்பட்டது.
அதனடிப்படையில் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் எம். அப்துல் ரஹ்மான் Ex.எம்பி, ஆளுர் ஷாநவாஸ் எம்எல்ஏ ஆகியோர் 29.07.2022 மாலை 5 மணியளில் மெட்ரோ அதிகாரிகளால் கையகப்படுத்தப்படும் இடம் என தெரிவிக்கப்பட்ட இடங்கள், மஸ்ஜித் இடம் இல்லாமல் வேறு இடங்களை பயன்படுத்துவதற்கு சாத்தியக்கூறுள்ள இடங்கள் ஆகியவற்றை நேரில் ஆய்வு செய்தார்கள்.
கூடியிருந்த ஜமாத்தார்களும், பள்ளிவாசல் நிர்வாகிகளும் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் பணியினை பாராட்டி வக்பை மீட்க உதவி செய்யவேண்டுகோள் விடுத்தனர். கச்சேரி ரோடு ஜும்ஆ பள்ளியின் இடத்தை மீட்க தமிழ்நாடு வக்பு வாரியம் முழு வீச்சில் செயல்படும் என தெரிவித்த வாரியத் தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் Ex.எம்பி, பள்ளிவாசல் இடத்தை மீட்பதில் அரசின் கவனத்துக்கு உடனடியாக இப்பிரச்சனை கொண்டு செல்லப்பட்டு அனைத்து இடர்களும் கலைய முயற்சி செய்யப்படும் என்றார்.
Post A Comment:
0 comments so far,add yours