திருச்சி குளத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த
10 கிலோ கஞ்சா பறிமுதல்
மத்திய மண்டல காவல்துறை தலைவர் சந்தோஷ் குமார், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் ஆகியோர் உத்தரவின் பேரில் காவல்துறையினர் தொடர்ந்து ராம்ஜி நகர் பகுதியில் கஞ்சாவை ஒழிக்க அதிரடி சோதனையும் வேட்டையும் நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதமாகவே அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய கஞ்சா வியாபாரி வெளி மாநிலத்திற்கு தப்பி ஓடியுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று (13.08.2022)திருச்சி ராம்ஜி நகர் அடுத்த சின்ன கொத்தமங்கலம் கிராமத்தில் உள்ள கோனார் குளத்தில், சமூக விரோதிகள் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. ஜீயபுரம் காவல்நிலைய துணை கண்காணிப்பாளர் பரவாசுதேவன் தலைமையில் 40-க்கும் மேற்பட்ட போலீசார் அந்தகுளத்தில் சோதனை நடத்தினர்.
அப்போது வயல்களிலும், குளக்கரையிலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 கிலோ கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர். கஞ்சா பதுக்கிய 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் அப்பகுதிகளில் தொடர்ந்து சோதனை நடத்த திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours