18 வயது தேவையில்லை

பருவம் அடைந்தாலே திருமணம்

ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு..!



பருவமடைந்த முஸ்லிம் பெண்கள் 18 வயது நிரம்பாவிட்டாலும், தாங்கள் விரும்பிய நபரை திருமணம் செய்துகொள்ளலாம் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டெல்லியில், கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்துகொண்ட முஸ்லிம் ஜோடி, தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

தங்களது திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், தங்களை பிரிக்க முயல்வதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜஸ்மீத் சிங் முன்னிலையில் நேற்று (ஆக.23ம் தேதி) நடைபெற்றது. அப்போது, அந்தப் பெண் 18 வயது பூர்த்தி அடையாத சிறுமி என்பதும், இதனால் மணமகன் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் சிறுமியின் பெற்றோர் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது.

வீட்டில் தன்னை அடித்து துன்புறுத்தியதால், தான் விரும்பிய நபரை திருமணம் செய்துகொண்டதாக சிறுமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் சிறுமிக்கு நீதிமன்றம் சார்பில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில், உடலுறவு வைத்ததும், குழந்தை பெற்றுக்கொள்ள வாய்ப்புள்ளதும் தெரியவந்துள்ளது.

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, முகமதிய சட்டத்தின் கொள்கைகளை மேற்கோள் காட்டினார். அதில், 18 வயது பூர்த்தி அடையாவிட்டாலும், முஸ்லிம் பெண் பருவமடைந்திருந்தாலே திருமணத்திற்கான தகுதியாக கூறப்படுகிறது.

முஸ்லிம் விதிமுறைகளுக்கு உட்பட்டு திருமணமும் நடைபெற்றுள்ளதால், சிறுமி கணவருடன் இருக்கலாம். இதில், பெற்றோர் குறுக்கிடக் கூடாது என நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், முஸ்லிம் விதிமுறைகளின்படி திருமணம் செய்துகொண்ட பிறகே, இருவரும் விரும்பி உடலுறவில் ஈடுபட்டதால், இது பாலியல் வன்கொடுமை ஆகாது எனவும் குறிப்பிட்டார்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

Share To:

IBINEWS

Post A Comment:

0 comments so far,add yours