பிளாஸ்டிக்கிற்கான

மாற்றுப் பொருள்

மத்திய அமைச்சர் வேண்டுகோள்

பிளாஸ்டிக்கிற்கான மாற்றுப் பொருட்களை ஊக்குவிக்க ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முன் வர வேண்டுமென மத்திய அமைச்சர் வேண்டுகோள்



ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று பொருட்கள் பற்றிய தேசிய கண்காட்சி மற்றும் தொழில் முனைவோருக்கான இரண்டு நாள் கருத்தரங்கம் சென்னை அருகே நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தொடங்கியது.

இதில் தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், விளையாட்டு இளைஞர் நலன் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்,மத்திய சுற்றுசூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறை கூடுதல் செயலர் நரேஷ் பால் கங்வார், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் துறை கூடுதல் தலைமை  செயலர் சுப்ரியா சாஹூ, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஜெயந்தி  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய சுற்றுசூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறை கூடுதல் செயலர் நரேஷ் பால் கங்வார்,  இந்த கண்காட்சி இந்திய மற்றும் தமிழக அரசால் சரியான நேரத்தில் நடத்தப்படுகிறது எனவும், ஒரு முறை உபயோகித்து தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் என தெரிவித்தார்.

பிளாஸ்டிக்கிற்கு மாற்று பொருட்கள் கண்டுபிடித்து அவற்றை ஊக்குவிக்குமாறு உற்பத்தியாளர்கள் மற்றும் ஸ்டார்டப் நிறுவனங்களை கேட்டுக் கொண்டார். இதுபோன்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க நிதி நிறுவனங்கள் முன் வர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அப்போது மேடையில் பேசிய தமிழக அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்,     பிளாஸ்டிக்குக்கு மாற்றுப் பொருட்கள் கண்காட்சி இந்தியாவிலேயே முதன்முறையாக இங்கு நடைபெறுகிறது என்றும், புவி வெப்பமயமாதல், காலநிலை மாற்றம் போன்றவற்றில் பிளாஸ்டிக் பங்களிப்பும் இருக்கிறது என்றும் பேசினார்.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், பிளாஸ்டிக் கழிவுகள்  பிரித்தெடுத்து அகற்றும் ஏற்பாடுகளை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை மேற்கொள்ள  உள்ளதாக தெரிவித்தார். ஆவின் பால் நெகிழிப் பைகளுக்கு மாற்றாக மட்கும் தன்மையுடைய பைகளை பயன்படுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மத்திய  சுற்றுசூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் புபேந்தர் யாதவ் காணொலி காட்சி மூலமாக பேசுகையில், பிளாஸ்டிக்கால் கணினி, செல்போன் போன்ற நன்மைகள் கிடைத்துள்ள போதும், பல தீமைகளுக்கு வழி வகுத்துள்ளது என்றார்.

கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி நடந்த சுற்றுச்சூழல் அமைச்சர்கள் மாநாட்டில், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பிளாஸ்டிக்கிற்கு மாற்றுப் பொருள் கண்டுபிடிப்பதோடு, பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வதும் முக்கியமானது என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியதை அவர் நினைவு கூர்ந்தார்.

மேலும், பிளாஸ்டிக்கிற்கு மாற்றான பொருளான மரம், சணல், மூங்கில் ஆகியவற்றை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

நமது செய்தியாளர் G.மோனிஷாசென்னை

Share To:

IBINEWS

Post A Comment:

0 comments so far,add yours