08/26/22

பத்தாண்டு தொலைநோக்கு திட்டகோரிக்கைபட்டியல்

ஆட்சியரிடம் அளித்தார்

இனிகோ இருதயராஜ்


திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குள் இருக்கிற தீர்க்கப்படாத மக்கள் பிரச்சினைகளைப் பட்டியலிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் அளித்திருக்கிறார் அத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் இனிகோ இருதயராஜ்.

தங்கள் தொகுதியில் இருக்கிற முக்கியமான பத்து பிரச்சினைகளைப் பட்டியலிட்டு அவற்றை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

அந்த உத்தரவை ஏற்று முதல் ஆளாக தனது திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள முக்கியமான தீர்க்கப்படாத மக்கள் பிரச்சினைகளை பட்டியலிட்டு ஆட்சியரிடம் அளித்திருக்கிறார் சட்டப்பேரவை உறுப்பினர் இனிகோ இருதயராஜ்.



திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமாரிடம் இன்று அவர் கொடுத்துள்ள அந்த பட்டியலில், 

மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாரை தரிசிக்க வரும் வயதானவர்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள் சிரமமின்றி தரிசிக்க ரோப் கார் வசதி

24 மணிநேரமும் தங்குதடையற்ற குடிநீர்

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகண்டு மக்கள் நடந்து செல்ல நடைபாதை

சிரமமான பகுதிகளில் சுரங்கப்பாதை

கே.சாத்தனூர் ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம்

உய்யக்கொண்டான் கால்வாய் சீரமைப்பு,டவுன்ஹால் சீரமைப்பு

வீட்டுமனை பட்டா

போன்ற கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறார்.

அவற்றை விரைந்து நிறைவேற்றி தர வேண்டும் என்று ஆட்சியரை கேட்டுக் கொண்டுள்ள அவர் தமது தொகுதியின் முன்னேற்றத்திற்கான முக்கிய தேவைகளைத் தெரிவிக்க வாய்ப்பளித்த தமிழக முதல்வருக்கு தொகுதி மக்களின் சார்பாக இதயம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - திருச்சி

சாரண,சாரணியர்
இயக்க தலைவராக

அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு


சாரணர் இயக்கம், உலக அளவிலான இளைஞர் இயக்கங்களில் ஒன்றாகும்.
உலக பேரியக்கங்களில் ஒன்றாகவும் இது திகழ்கிறது.இந்த இயக்கத்தை 1907-ல் பேடன் பவல் என்பவர் இங்கிலாந்தில் உருவாக்கினார். 

இந்த இயக்கத்தின் செயல்பாடாக, 1908-ம் ஆண்டு ஜனவரி 24-ல் ஆண்கள் சாரணர் குழுவை அவர் உருவாக்கினார். 'பாய் ஸ்கவுட்ஸ்' என்று அழைக்கப்பட்ட இதுவே முதல் சாரணர் படையாகும்.


நாளைய குடிமக்களான இளைய தலைமுறையினருக்கு குழந்தைப் பருவத்தில் இருந்தே கீழ்ப்படிதல், பெரியோரை மதித்து நடத்தல் போன்ற நற்பண்புகளை வளர்க்கும் இயக்கமாக சாரணர் இயக்கம் தோன்றியது. ராணுவ கட்டுக்கோப்பு இளைய தலைமுறையினரிடம் வளர வேண்டும் என்ற நோக்கத்துடன் ராணுவ வீரரான பேடன் பவல், இந்த இயக்கத்தை செயல் படுத்தினார்.

அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த இயக்கம் மற்ற நாடுகளிலும் பரவத் தொடங்கியது. 1909-ல் இந்தியாவிலும், சிலி நாட்டிலும், 1910-ல் அமெரிக்காவிலும் சாரணர் குழு உருவானது. 10 ஆண்டுகளுக்குள்ளாகவே உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு இந்த இயக்கம் விரிவடைந்துவிட்டது. 

நாட்டுப்பற்று, இறைப்பற்று, அன்பு, கருணை, பணிவு, பிறருக்கு உதவி செய்தல், தன்னம்பிக்கை முதலான பண்புகளை சிறுவர்களிடத்தில் வளர்த்து அவர்களை சிறந்த குடிமக்களாக உயர்த்துவதே சாரணர் இயக்கத்தின் நோக்கமாகும்.


இந்த நிலையில்,தமிழ்நாடுசாரண, சாரணியர் இயக்க தலைவராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். கடந்த முறை BJP மூத்த தலைவர் ஹெச்.ராஜா தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில், இம்முறை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தி.மு.க ஆட்சிக்கு வந்தது முதல் பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் மீதும் கவனம் செலுத்த தொடங்கியது.கடந்த 2021, மே மாதம் பொறுப்பேற்றுக் கொண்ட தி.மு.க., பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் மீதான தனது பார்வையை செலுத்த தொடங்கியது.


ஆட்சிக்கு வந்த முதல் சுதந்திர தின விழாவிலே இயக்கத்தை சார்ந்தவர்களுக்கு விருதுகளை வழங்கினார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

கடந்த பல ஆண்டுகளாக இவ்விருது வழங்கும் விழா நடத்தப்படாமலே இருந்தது.இதில் அவ்வியக்கத்தை சார்ந்தவர்கள் மனகுமுறலில் இருந்தார்கள்.

எப்போதும் சாரண சாரணியர் இயக்கம் என்பது பள்ளிக் கல்வித்துறையின் கீழேதான் செயல்படும். அதன் தலைவராக மாநிலத்தின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

ஆனால் கடந்த ஆட்சியில் இப்பொறுப்பை அ.தி.மு.க விட்டுக்கொடுத்தது. எச்.ராஜா கேட்டுக்கொண்டார், அதனால் அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்செங்கோட்டையன் விட்டுக்கொடுத்தார் என்பார்கள்.

ஆனால் அதற்கு பிறகு நடந்த சாரண சாரணியர் இயக்கத்திற்கான தலைவர் போட்டியில் எச்.ராஜா படுதோல்வி அடைந்தார்.இதன்பிறகு தி.மு.க ஆட்சிக்க வந்தபிறகு சுதந்திர தினம், குடியரசு தினங்களில் திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள பாரத சாரண சாரணியர் தலைமையகத்தில் கொடியேற்றி அவ்வியக்கத்தின் செயல்பாடுகளில் இறங்கியது பள்ளிக் கல்வித்துறை.

 அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இயக்கத்தின் தலைமையகத்தில் கொடியேற்றி விழாக்களிலும் கலந்துகொண்டார்.

இதையடுத்து பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தலைவர் பொறுப்பை மீண்டும் மாநிலத்தின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு வழங்கும் நடவடிக்கை நடந்தது.இதை தொடர்ந்து அதற்கான தேர்தல் நடத்த ஆயத்தமானது இயக்கத்தின் தலைமை.தற்போது அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தலைவர் பொறுப்பு கிடைத்துள்ளது.

முதலில் என்மீது நம்பிக்கை வைத்து யாரும் என்னை எதிர்த்து போட்டியிடவில்லை என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.என்மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் எனது நன்றிகள். 

அவ்வியக்கத்தின் உறுப்பினர்கள் கோரிக்கைகள் வைத்துள்ளார்கள். அவர்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்பட்டு, பெரும்பாலான பள்ளிகளில் சாரண சாரணியர் இயக்கம் தொடங்கப்படும்’ எனவும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  தெரிவித்துள்ளார்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - திருச்சி

எம்மாம் பூண்டி நீர்உந்து நிலையம் மு.க.ஸ்டாலின் ஆய்வு



அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தின் கீழ், ஈரோடு மாவட்டம், பெருந்துறை, கிரே நகரில் அமைக்கப்பட்டுள்ள எம்மாம்பூண்டி நீர்உந்து நிலையத்தை முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - திருச்சி

அனுமதி பெற்றால் மட்டுமே விநாயகர் சிலை

திருச்சி காவல் ஆணையர் பேட்டி






திருச்சியில் விநாயகர் சிலை கட்டுப்பாடு குறித்த  கூட்டத்தில் இந்து முன்னணியினர் வெளிநடப்பு- அனுமதி பெற்றால் மட்டுமே சிலை வைக்கலாம் காவல் ஆணையர் பேட்டி

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31ம் தேதி இந்து மக்களால் கொண்டாடப்பட உள்ளது. இதனிடையே விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது திருச்சி மாநகரில் திருக்கோவில்கள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து விசர்ஜனம் செய்யப்படும்.

இது தொடர்பாக திருச்சி மாநகர காவல்துறை சார்பில் இந்து முன்னணி, இந்து அமைப்புகள் மற்றும் திருக்கோவில் நிர்வாகிகளுடன் மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் விடுத்ததால், மாநகர காவல் ஆணையர் அரங்கினுள் வந்தவுடன் கூட்டத்தை புறக்கணித்து இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் வெளியேறினர்.

இதனால் கூட்ட அரங்கில் நாற்காலிகள் காலியாக இருந்ததால் மாநகர காவல் ஆணையர் கடும் அதிருப்தி அடைந்தார்.தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் போஜராஜன்..... காவல்துறையும்,அரசும் விநாயகர் சிலை வைக்கக் கூடாது எனவும் அனுமதி வாங்க வேண்டும் எனவும் கூறுகின்றனர். அடக்கு முறையில் ஈடுபடுகின்றனர். மேலும் விநாயகர் சிலையை வைத்து பணம் பறிக்கும் நோக்கில் உள்ள அமைப்புகளுடன் கூட்டத்தை நடத்துகின்றனர் என குற்றம் சாட்டினர்.

பாரத நாட்டில் வழிபாடு நடத்த அனுமதி உள்ளது என்றபட்சத்தில் திருச்சி மாவட்டத்தில் 500 இடங்களில் விநாயகர் சிலை வைப்போம் எனவும், காவல்துறையுடன் அனுமதி பெற மாட்டோம் அதேநேரம் ஒலிபெருக்கி வைப்பதற்கு மட்டும் அனுமதி பெறுவோம் என தெரிவித்தனர். மேலும் 12- 4 மணிக்குள் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால், வழக்கம்போல நடைபெறும் முறையை பின்பற்றுவோம் என தெரிவித்தனர்.

சிலைகளுக்கு மாநகர காவல் துறை அனுமதிக்காவிட்டாலும் திருச்சி மாவட்டம் முழுவதும் 500 சிலைகளை வைப்போம் என ஆவேசத்துடன் குறிப்பிட்டார்.முன்னதாக அவரை செய்தியாளர்கள் பேட்டி எடுத்துக் கொண்டிருந்த பொழுது திருச்சி மாநகர காந்தி மார்க்கெட் காவல் நிலைய ஆய்வாளர்  செய்தியாளர்களைப் பிடித்து தள்ளியதால் செய்தியாளர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு காவல்துறையினர் செய்தியாளர்களை சமாதானப்படுத்தி கூட்ட அரங்கிற்கு அழைத்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன்... அரசு அளித்த கட்டுப்பாடுகள் மட்டுமே தற்போது உள்ளது. கட்டுப்பாடுகள் குறித்து அவர்களுக்கு எடுத்துக் கூறியுள்ளோம், புதிதாக எந்த ஒரு கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.  எத்தனை விநாயகர் சிலைகள் வைக்கப்படும் என்பது இனிமேல் தான் தெரியவரும். 

கடந்த ஆண்டு 230 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டது. சட்டத்திற்கு உட்பட்டு வைத்தால் அனுமதி அளிக்கப்படும் இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்திற்கு உட்பட்டு சிலை வைக்க வேண்டும் என்பதே காவல்துறையின் அறிவுரை என்றார்.

இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.விநாயகர் சிலைகள் காவிரி பாலத்தில் வைத்தே கரைக்கப்படும் என்பதால் விநாயகர் சதுர்த்தி விழா முடிந்த பின்னர் பராமரிப்பு பணிகளுக்காக காவிரி பாலம்  மூடுவது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவித்தார்.

நமதுநிருபர்- K.ஷாகுல் ஹமீது - திருச்சி

ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு

பொதுமக்கள் செல்லதடை

தர்மபுரிமாவட்ட ஆட்சித்தலைவர்

கி.சாந்தி அறிவிப்பு


தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று (26.08.2022) வெள்ளிக்கிழமை காலை 6.00 மணி நிலவரப்படி, சுமார் 50,000 கன அடிக்கு மேல் தண்ணீர் வரத்து வந்து கொண்டிருப்பதாலும், தொடர்ந்து நீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாலும்,


சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இறங்கி குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ, படகு சவாரி செய்யவோ, ஆற்றின் குறுக்கே கால்நடைகளை அழைத்து செல்லவோ, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீன்பிடிப்பதற்கோ, காவிரி ஆற்றின் கரையோரங்களில் நின்று சுயபடம் (Selfie) எடுப்பது, புகைப்படங்கள் எடுப்பதற்கோ,


படகு / பரிசல் ஓட்டிகள் பரிசில்களை இயக்குவதற்கோ மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை பொதுமக்களின் நலன் கருதி முற்றிலும் தடைவிதிக்கப்படுகிறது என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி இஆ.ப., தெரிவித்துள்ளார்.

சிறப்பு நிருபர் - A.சிராஜுதீன் -  தர்மபுரி