09/08/22

காவேரி பாலம்

போக்குவரத்து மாற்றம்


திருச்சிராப்பள்ளி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில் செல்லும் வழியில் உள்ள காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட காவிரிப் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப் படவுள்ளதை யொட்டி இப்பணிகள் மேற்கொள்ள 5 மாத காலம் ஆகுமாதலால், மேற்படி காவிரிப் பாலத்தின் மேல் செல்லும் வாகனங்களின் போக்குவரத்தை வருகின்ற 10.09.2022 சனிக்கிழமை இரவு 12 மணி முதல் கீழ்காணும் மாற்றுப் பாதையில் செல்லும் வகையில் மாற்றியமைக்கப் பட்டுள்ளது. 

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் முதல் அண்ணாசிலை வழியாக ஸ்ரீரங்கம் செல்ல காவிரிப் பாலத்திற்கு முன்னதாக உள்ள ரயில்வே மேம்பாலத் திலிருந்து ஓயாமரி வழியாக (காவிரி தென் கரை சாலை) சென்று இடதுபுறம் திரும்பி சென்னை பைபாஸ் சாலை (சென்னை - திருச்சி - திண்டுக்கல் சாலை) பழைய பாலத்தின் வழியாகச் சென்று இடதுபுறம் திரும்பி கும்பகோணத்தான் சாலை (காவிரி இடது கரை சாலை) வழியாக ரயில்வே மேம்பாலம் ஏறி திருவானைக்கோவில் அடைந்து ஸ்ரீரங்கம் செல்லலாம்.


ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்திலிருந்து இடதுபுறம் உள்ள திருவானைக்கோவில் செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலத்தின் வழியாக திருவானைக்கோவில் வந்தடைந்து வலதுபுறம் திரும்பி ட்ரங்க் சாலை வழியாக ரயில்வே மேம்பாலம் ஏறி இடதுபுறம் திரும்பி கும்பகோணத்தான் சாலை வழியாக வந்து திரும்பி சென்னை பைபாஸ் சாலை (சென்னை - திருச்சி - திண்டுக்கல் - சாலை) பழைய பாலத்தின் வழியாக வந்து வலதுபுறம் திரும்பி ஓயாமரி வழியாக (காவிரி தென்கரை சாலை) அண்ணாசிலை வந்தடைந்து சத்திரம் பேருந்து நிலையம் செல்லலாம்.

திருச்சியிலிருந்து சென்னை செல்லும் வாகனங்கள் நகர வழி போக்குவரத்தைத் தவிர்த்து புறவழிச்சாலை வழியாக சஞ்சீவி நகர் மார்க்கமாக காவிரி புதுப்பாலம் வழியாக நெ.1. டோல்கேட் அடைந்து சென்னை செல்லலாம். அவ்வாறே சென்னையிலிருந்து திருச்சி வரும் வாகனங்கள் நெ.1.டோல்கேட் அடைந்து காவிரி புதுப்பாலம் வழியாக வந்து புறவழிச்சாலை மார்க்கமாக திருச்சி அடையலாம்.

சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் புறநகர் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் அண்ணாசிலை வழியாக காவிரி பாலத்திற்கு முன்னதாக உள்ள ரயில்வே மேம்பாலத் திலிருந்து ஓயாமரி வழியாகச் சென்று இடதுபுறம் திரும்பி சென்னை பைபாஸ் சாலை காவிரி பழைய பாலத்தில் சென்று நேராக நெ.1.டோல்கேட் சென்று செல்லலாம். காவிரிப் பாலம் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப் படவுள்ளதை யொட்டி மேற்கண்ட மாற்றுப் பாதையில் பயணம் செய்து பொதுமக்கள் நல்ஒத்துழைப்பு வழங்கிடும்படி திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். 

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி

செல்போன் பறிப்பு
காவலர்கள் மீட்பு
ஆணையர் பாராட்டு





திருச்சி மாநகரில் செல்போன் பறித்த நபர்களை மடக்கி பிடித்து 4 செல்போன்கள் மீட்பு.

கடந்த 20.08.22-ந்தேதி, இரவு 11.30மணிக்கு திருவானைக்கோவில் நாகநாதர் டீ கடை முன்பு ஏழாம்சுவை உணவகத்தில் பணிபுரியும் ஆனந்த் (19) என்பவரிடமிருந்து இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள், ஆனந்த் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றதாக தகவல் கிடைக்கப் பெற்று,

மேற்படி செல்போன் பறிப்பு சம்பவ நடைபெற்ற சில நிமிடங்களில் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், உடனடியாக வான்செய்தி வழியாக கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்ட நபர்களை பிடிக்க இரவு பணியிலிருந்த காவல் அதிகாரிகள், ரோந்து பணியில் இருந்த காவல் ஆளிநர்கள் மற்றும் காவல் ரோந்து வாகனங்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவையடுத்து திருச்சி மாநகரத்தில் இரவு பணியில் இருந்த காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு, முக்கிய சந்திப்புகளில் வாகன சோதனை செய்தும் மற்றும் சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் மேற்கண்ட கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்ட மூன்று நபர்களும் மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக நின்று கொண்டிருந்த ஒருவரிடம் செல்போனை பறித்து கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முற்படும் போது, அங்கு ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பாஸ்கர், தலைமைக் காவலர்கள் டேவிட் சாலமன், செந்தில், ஜோசப் சகாயராஜ் ஆகியோர்கள் செல்போன் கொள்ளையர்களை சம்பவ இடத்திலேயே மடக்கிபிடித்து கைது செய்தனர்.

மேலும் கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் பல்வேறு இடங்களில் வழிப்பறி செய்த மேலும் 3 செல்போன்கள் உட்பட (மொத்தம் 4 செல்போன்கள்) பறிமுதல் செய்யப்பட்டு, எதிரிகள் 1) விக்னேஸ்வரன் (23), 2) அஜெய்ராஜ் (22) ஆகியோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்கள்.

மேற்கண்ட கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டவர்களை துரிதமாக செயல்பட்டு, கைது செய்த காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், வெகுமாக பாராட்டி, மெச்சத்தகுந்த வகையில் பணி செய்தமைக்காக பணிநற்சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி

ஓணம் ஸ்பெஷல்

தித்திப்பான அடை பாயாசம்


தேவையான பொருட்கள்

அரிசி – 1/2 டம்ளர்

தேங்காய்ப்பால் – 4 டம்ளர்

வெல்லம் – 2 டம்ளர்

ஏலக்காய் தூள் – சுவைக்கு

பால் – 1 டம்ளர்

நெய் – தேவைக்கு

தேங்காய் துண்டுகள் – கைப்பிடியளவு

முந்திரி – தேவையான அளவு

உலர்திராட்சை – 2 ஸ்பூன்

செய்முறை: 

வெல்லத்தை தண்ணீர் கரைத்து வடிகட்டி வைக்கவும்.

அரிசியை ஊற வைத்து நைசாக கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை, வாழை இலையில் நெய் தடவி, மெலிதாக பரப்பி, மெதுவாக மடித்து, நூலால் கட்டி, இட்லி தட்டில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.

வெந்த மாவு ஆறியதும் இலையிலிருந்து உரித்து எடுத்து, மிகவும் சிறு துண்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.

ஒர் வாணலியில் நெய் விட்டு முந்திரி, திராட்சை, தேங்காய் துண்டுகளை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

அதனுடன் அரிசி அடை துண்டுகளை பிரட்டி, பாலை சேர்க்கவும்.

அடுத்து  அதில் வடிகட்டி வைத்துள்ள வெல்லத்தை சேர்க்கவும்.

அனைத்தும் நன்கு வெந்ததும் தேங்காய் பாலை சேர்த்து, ஏலக்காய் பொடி செய்து போட்டு இறக்கவும்.

தித்திப்பான அடை பாயாசம் தயார்

நமது நிருபர் - G.மோனிஷா - சென்னை

பொது பாதையை மீட்க கோரி

வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

மதுரை,திருப்பரங்குன்றம் ஏற்குடி அச்சம்பத்தில் புது சாலையை ஆக்கிரமிப்பதை கண்டித்து ஏற்குடி அச்சம்பத்து மாப்பிள்ளை விநாயகர் நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் மதுரை மேற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்


மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய ஏற்குடி அச்சம்பத்து கிராமத்தில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பை கண்டித்து பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்



ஏற்குடி அச்சம்பத்து கிராமத்தில் மாப்பிள்ளை விநாயகர்  நகர்உள்ளது.இங்குள்ள 40 அடி பொதுப் பாதையை தனியார் ஒருவர் 20 அடி அளவில  ஆக்கிரமித்து வீடுகட்டுவது தொடர்பாக திருப்பரங்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஏற்குடி அச்சம்பத்தில் பொதுமக்கள் புகார் செய்ததாக கூறப்படுகிறது.


இதனை அடுத்து இன்று மேற்கு வட்டாட்சியரிடம் நில அளவை செய்ய கோரிக்கை வைத்தது  பொதுமக்கள் மதுரை மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர் .


ஏற்குடி அச்சம்பத்து மாப்பிள்ளை விநாயகர் நகரில் உள்ள பொது பாதையை 40 அடி பாதையாக மீட்டு தருமாறு கோரிக்கை வைத்து ஏற்குடி அச்சம்பத்து மாப்பிள்ளை விநாயகர் நகர் குடியிருப்போர் நலசங்க துணை செயலாளர் ரஞ்சித் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நமது நிருபர்சென்னை ஷேக் அப்துல்லா

வயலூர் முருகன் கோயிலில்

எளிமையாக நடைபெற்ற நடிகர்

விக்னேஷ் காந்த் திருமணம்





பிரபல நகைச்சுவை நடிகர் விக்னேஷ் காந்த் இவர் சென்னை 28, நட்பே துணை ன, மீசைய முறுக்கு, மெகந்தி சர்க்கஸ், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். சில பாடல்களையும் எழுதி உள்ளார். நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருக்கிறார்.

விக்னேஷ் காந்க்கும், இன்ஜினியரிங் பட்டதாரியான ராஜாத்திக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்தது. இந்நிலையில் விக்னேஷ் காந்த் ராஜாத்தி திருமணம் நேற்று திருச்சி வயலூர் முருகன் கோவிலில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு மணமக்களை நேரில் வாழ்த்தினார்.

திருமண புகைப்படத்தை வலைதளங்களில் விக்னேஷ் காந்த் வெளியிட்டுள்ளார்.அவருக்கு திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி

திருச்சி எஸ்.ஆர்.எம் கல்லூரி

மாணவ மாணவிகள்

விழிப்புணர்வு பேரணி






திருச்சி எஸ்.ஆர்.எம் பிசியோதெரபி கல்லூரி மாணவர்கள் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கலைஞர் அறிவாலயம் வரை  மூட்டுவலிக்கான  அறிகுறிகள் மற்றும் விழிப்புணர்வு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு இப்பேரணியில் பங்கேற்றனர்.

முன்பெல்லாம் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வரும் மூட்டு வலி பிரச்சனை தற்பொழுது 45 மேற்பட்டவர்களுக்கு வரத் துவங்கியுள்ளது. இதற்கு காரணம் உணவு பழக்க வழக்கம், வாழ்க்கை முறை என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவில்  மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து வருகின்றனர். இதில் பெண்களுக்கு அதிகமாக அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளதாக மருத்துவர் புள்ளிவிவரத்தின் அடிப்படையில் குறிப்பிட்டார். இப்பிரச்சனை வருவதற்கு உடல் பருமன் மற்றும் சிறிய உடற்பயிற்சி கூட செய்யாமல் இருப்பது காரணமாகவும் தெரிவித்தார்.

முன்னதாக திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். இப்பேரணியில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் SRM திருச்சி வளாக இயக்குனர் D.N.மால்முருகன் மற்றும் இணை இயக்குனர் Dr.N.பாலசுப்பிரமணியன் உடனிருந்து வாழ்த்துறை வழங்கினார்கள். பிசியோதெரபி கல்லூரியின் முதல்வர் Dr.ஆ.மணிகுமார் நன்றியுரை வழங்கினார்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி

மணப்பாறை அரசு கலை

அறிவியல் கல்லூரி

அப்துல் சமது எம்எல்ஏ ஆய்வு




மணப்பாறை தொகுதி பன்னாங்கொம்பு பகுதியில் தற்காலிகமாக அமைந்துள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியை பார்வையிட்டு ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார் மணப்பாறை தொகுதி எம்எல்ஏ அப்துல் சமது.

உடன் கல்லூரியின் முதல்வர், ஒன்றிய கவுன்சிலர் சக்தி உள்ளிட்டவர்கள் இருந்தார்கள்.

நமதுநிருபர்- K.ஷாகுல் ஹமீது - திருச்சி

வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இருப்பதாக உணர்ந்தேன்

அன்பின் மகேஷ் பொய்யாமொழி



திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய 10 முக்கிய கோரிக்கைகள் குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி...

 இரண்டாண்டுகள் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடியிருந்த நிலையில் தற்போது தான் அது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மன ரீதியாக பாதிக்கப்பட்ட காலத்தை தற்போது தான் உடைத்துள்ளோம்.

மாணவர்கள் வருங்காலத்தில் இன்னும் அதிகமாக படிக்க வேண்டும். நீட் தேர்வுக்கு மாணவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிப்போம். தன்னம்பிக்கையை மாணவர்கள் இழந்து விட கூடாது. நீட் தேர்வை ரத்து செய்ய அனைத்து சட்ட போராட்டங் களையும் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. மத்திய அரசிடம் தொடர்ந்து நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.

மாணவர்கள் தன்னம்பிக்கையை இழந்து விடக் கூடாது. நேற்றே தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் கூறினேன் நாளை நீட் தேர்வு முடிவுகள் வருகிறது. வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இருப்பது போல் இருக்கிறேன். குழந்தைகளுக்கு எவ்வளவு தன்னம்பிக்கை கொடுத்தாலும் ஏதோ ஒரு விதத்தில் நம்பிக்கையே இழந்து விபரீத முடிவுகளை எடுத்து விடுகின்றனர். 

தயவு செய்து மாணவ செல்வங்கள் இதுபோன்ற முடிவுகளை எடுப்பதை விட்டுவிட்டு உயர்கல்விக்கான முகாம்களை பயன்படுத்தி ஆலோசனை எடுத்து கொள்ளுங்கள் என்றார். பணம் உள்ளவர்களுக்கு ஒரு கல்வி, பணம் இல்லாதவருக்கு ஒரு கல்வி என்ற நிலை தமிழகத்தில் இருக்கக் கூடாது. சமூக நீதி எல்லோருக்கும் சமமாக கிடைக்க வேண்டும். சமூகநீதிக்கும், சமத்துவத்திற்காக தான் இலவசங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது என்றார்.

நமதுநிருபர்- K.ஷாகுல் ஹமீது - திருச்சி