10/03/22

போதைப் பொருள் இல்லா இந்தியா

மத்திய அரசு முயற்சி

வீரேந்திர குமார்




செங்கல்பட்டு மாவட்டத்தில் 359 கிராம ஊராட்சிகளில் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு: மத்திய அமைச்சர் வீரேந்திர குமார்

செங்கல்பட்டு மாவட்டம்  கோவளம் அருகே முட்டுக்காட்டில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட  ஊனமுற்றோரின் மேம்பாட்டிற்கான  தேசிய நிறுவனத்தில் செயல்படுத்தப்படும் சமூக நீதி திட்டங்களின் செயலாக்கம் குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளுடன் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் வீரேந்திர குமார் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் பேசிய அவர், மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ்  செங்கல்பட்டு மாவட்டத்தில் 151 கிராம ஊராட்சிகளில் உள்ள வீடுகளுக்கு குழாய் மூலம் தூய்மையான குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.இந்த திட்டம் மேலும் 208 கிராம ஊராட்சிகளுக்கு விரிவுப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

நடப்பாண்டில்  செங்கல்பட்டு மாவட்டத்தில் 142 கிராம ஊராட்சிகளில்  445 பணிகள் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் செயல் படுத்தப்படும் என்றும், இதற்கான ரூ.64 கோடி செலவிடப்படும் என்றும் கூறினார். பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 16, 265 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளதாகவும் இதில், 11,308 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மாவட்டத்தில் பிரதமர் கிராம சாலை திட்டத்தின் கீழ் 15 திட்டங்களை செயல்படுத்தப் படுவதாகவும் இதற்காக  ரூ.16 கோடி செலவிடப் படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு, 8 ஆண்டுகளில் கிராமங்களில் பெண்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் அவர்களுடைய இடர்பாடுகளை குறைக்கும் வகையில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

போதைப் பொருள் இல்லா இந்தியாவை உருவாக்க, மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக, பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில்,ஒன்றரை கோடி மாணவர்கள் போதைப்பொருளை பயன்படுத்த மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டதாக கூறினார். 

இவர்களுக்காக, பேச்சுப்போட்டி, விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஓவியப் போட்டி உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.மதிய உணவு திட்டத்தின் கீழ் அங்கன்வாடிகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரத்தை அதிகாரிகள் அவ்வப்போது, கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதேபோல், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில்  இணைந்துள்ள மக்கள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, புற்றுநோய் உள்ளிட்ட நோய்களின் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை மற்றும் இத்திட்டத்தில் இணைந்துள்ள தனியார் மருத்துவமனைகளை பயன்படுத்தி கொள்ளுமாறு கூறினார்.

ஒன்றுக்கும் மேற்பட்ட  ஊனமுற்றோரின் மேம்பாட்டிற்கான  தேசிய நிறுவனத்தின் செயல்பாடு குறித்து பாராட்டு தெரிவித்த அமைச்சர், அண்டை மாநிலத்தை சேர்ந்தவர்களும், பயன்பெறும் வகையில், இதன் செயல்பாட்டினை விரிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், ஒன்றுக்கும் மேற்பட்ட  ஊனமுற்றோரின் மேம்பாட்டிற்கான  தேசிய நிறுவனத்தின் இயக்குனர் நச்சிகேத்தா ராவத் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

சிறப்பு நிருபர் - A.M.மாஹீன் - சென்னை

உதவித்தொகை ரூ.12,000

விண்ணப்பிக்க

அக்டோபர் 15 வரை நீட்டிப்பு

தேசிய தகுதி மற்றும் திறமையான மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் 2022 அக்டோபர் 15-ந் தேதி வரை நீட்டிப்பு

தேசிய அளவிலான தகுதி மற்றும் திறமையான மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் 2022 அக்டோபர் 15-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 

8-ம் வகுப்பில் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடும், பொருளாதாரத்தில் நலிவடைந்த திறமையான மாணவர்கள் மீண்டும் கல்வியை தொடர ஊக்குவிக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 லட்சம் புதிய மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு அவர்கள் 9-ம் வகுப்பில் பள்ளிப் படிப்பை தொடர முடியும். மேலும் மாநில அரசு, அரசு உதவிபெறும் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் கீழ் வரும் பள்ளி  மாணவர்களும் 10 மற்றும் 12 வகுப்புகளில் பள்ளிப்படிப்பை தொடர முடியும்.

ஆண்டுக்கு உதவித் தொகை ரூ.12,000 வழங்கப்படும்.

தேசிய  அளவிலான தகுதி மற்றும் திறமையான மாணவர் களுக்கான உதவித்தொகை வழங்குவது தொடர்பாக வலைதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகை,மாணவர்களின் வங்கி கணக்கிற்கு  நேரடியாக செலுத்தப் பட்டுவிடும். இந்த திட்டம்  நூறுசதவீதம் மத்திய அரசால் செயல்படுத்தப் படுகிறது.

இந்த உதவித்தொகையை பெறுவதற்கு தகுதியான மாணவர்களின் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.3,50,000-த்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

உதவித்தொகையை பெறுவதற்கான தேர்வில்  7-ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான வகுப்பில்  மாணவர்கள் குறைந்தபட்சம் 55 சதவீதம்  பெற்றிருக்க வேண்டும்.

மேலும் எஸ்சி/எஸ்டி மாணவர்களுக்கு 5 சதவீதம் மதிப்பெண்கள் தளர்த்தப் பட்டிருக்கிறது.

சிறப்பு நிருபர் - A.M.மாஹீன் - சென்னை

இந்திய விமானப்படை

உலகின் முதன்மையான

படையாக திகழும்

ராஜ்நாத் சிங்

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட இலகு ரக ஹெலிகாப்டர் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டது

பாதுகாப்புத்துறையில் தற்சார்பை அடைவதற்கு ஊக்கமளிக்கும் வகையில், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட இலகு ரக ஹெலிகாப்டர் ஜோத்பூரில் உள்ள இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார்.பின்னர் பேசிய அவர், எதிர்காலத்தில் இந்திய விமானப்படை உலகின் முதன்மையான படையாக திகழும் என்று கூறினார்.அத்துடன்  பாதுகாப்புத் தளவாட  உற்பத்தியில்  நாடு முழு தற்சார்பை அடையும் என்றும் அவர் தெரிவித்தார்.பின்னர் இலகு ரக ஹெலிகாப்டரில் சிறிது நேரம் அவர் பயணித்தார்.

சிறப்பு நிருபர் - A.M.மாஹீன் - சென்னை

சென்னை துறைமுகம்

மதுரவாயல் இணைப்பு

சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் முனையம் வரையிலான திட்டம் டிசம்பர் -2024-க்குள் நிறைவடையும்



மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,புதிய இந்தியாவில் தடையற்ற பன்னோக்கு போக்குவரத்து இணைப்பை அளிக்கும் வகையில், ரூ.5800 கோடி செலவில் சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் முனையம் வரையிலான இணைப்பு  பணிகள் நடைபெற்று வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்னை துறைமுகத்தில் தொடங்கி மதுரவாயல் வரை  உயர்த்தப்பட்டு கட்டப்பட்டு வரும் 20.5 கிலோ மீட்டர் தொலைவிலான பாலம் 4 பகுதிகளாக கட்டப்படும் என்று கூறியுள்ளார்.

இத்திட்டம் டிசம்பர் 2024-ம் ஆண்டிற்குள் நிறைவடையும் என்றும், இதன் மூலம் சென்னை துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன் 48% அதிகரிக்கும் என்றும், அதேபோல். காத்திருப்பு காலம் 6 மணி நேரம் குறையும் என்றும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

சிறப்பு நிருபர் - A.M.மாஹீன் - சென்னை

சிறுபான்மையின

நலத்துறை நீக்கம்

சிறுபான்மையின நலத்துறை அமைச்சகத்தை  மத்திய அரசு நீக்க உள்ளது என்று சில ஊடகங்களில் வெளியான தகவல் தவறானது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

சிறுபான்மையின நலத்துறை அமைச்சகத்தை மத்திய அரசு நீக்கிவிட்டு அதனை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகத்துடன் இணைக்கப் போகிறது என்று டெக்கான் ஹெரால்டு பத்திரிகையில் செய்தி வெளியானது.இது தவறான தகவல்.

சிறப்பு நிருபர் - A.M.மாஹீன் - சென்னை

வாக்காளர் நிலையம்

இந்திய தேர்தல் ஆணையம்

தொடங்கியது

வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அகில இந்திய வானொலியுடன் இணைந்து வாக்காளர் நிலையம் என்ற வானொலி தொகுப்பை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது




வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அகில இந்திய வானொலியுடன் இணைந்து வாக்காளர் நிலையம் என்ற வானொலி தொகுப்பை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர் சந்திர பாண்டேயுடன் இணைந்து இன்று புதுதில்லியில் உள்ள ஆகாஷ்வானி நிலையத்தில் தொடங்கிவைத்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள்,பிரசார் பாரதி தலைமைத் தேர்தல் அதிகாரி, அகில இந்திய விழிப்புணர்வு வானொலி செய்திப் பிரிவு தலைமை இயக்குநர்,தேர்தல் ஆணையத்தின் தூதர் நடிகர் பங்கஜ் திரிபாதி உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தேர்தல் நடைமுறைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 52 வாரங்கள் நிகழ்ச்சி ஒலிபரப்பாக உள்ளது.அகில இந்திய வானொலியின் விவித் பாரதி, எஃப்எம் ரெயின்போ, எஃப்எம் கோல்டு மற்றும் முதன்மை அலைவரிசைகளில் 15 நிமிடங்களில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்நிகழ்ச்சி ஒலிப்பரப்பாக உள்ளது.

அகில இந்திய வானொலியின் 230 அலைவரிசைகளில் 23 மொழிகளில் இது ஒலிபரப்பப்பட உள்ளது.வாக்காளர் நிலையம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியின் முதலாவது பகுதி அக்டோபர் 7,2022 அன்று ஒலிபரப்பாக உள்ளது.வாக்காளர் பதிவு என்ற தலைப்பிலான இந்நிகழ்ச்சி, இரவு 7.25-க்கு ஒலிப்பரப்பாகும்.

சிறப்பு நிருபர் - A.M.மாஹீன் - சென்னை

ரயில்வேக்கு

பிரதமர் பாராட்டு




கே.எஸ்.ஆர் பெங்களூரு ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக் மற்றும் பெட் பாட்டில்களைக் கொண்டு செய்யப்பட்ட சிற்பத்திற்காக ரயில்வேக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்

பெங்களூரு கே.எஸ்.ஆர்.ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக் மற்றும் பெட் பாட்டில்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட சிற்பத்திற்காக தென்மேற்கு ரயில்வேயின் செயல்பாடுகளுக்கு பிரதமர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். 

தென்மேற்கு ரயில்வேயின் ட்விட்டர் செய்தியை மேற்கோள் காட்டி, பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "இத்தகைய முயற்சிகள் புதுமையானவை மட்டுமின்றி பாராட்டுக்குரியவை என்றும், மிக முக்கியமாக  சுற்றுப்புறங்களையும்,பொது இடங்களையும் சுத்தமாக வைத்திருப்பது குறித்த  மக்களின்  அடிப்படைக் கடமையை நினைவூட்டுவதாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

சிறப்பு நிருபர் - A.M.மாஹீன் - சென்னை

குடியரசுத்தலைவர்

மகாத்மா காந்திக்கு

மரியாதை செலுத்தினார்

குஜராத்தில் குடியரசுத்தலைவர்; சபர்மதி ஆசிரமத்திற்கு சென்றார்; சுகாதாரம், நீர்ப்பாசனம், தண்ணீர் விநியோகம் மற்றும் துறைமுக வளர்ச்சி தொடர்பான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

சுகாதாரம், நீர்ப்பாசனம், தண்ணீர் விநியோகம் மற்றும் துறைமுக வளர்ச்சி தொடர்பான குஜராத் அரசின் பல்வேறு திட்டங்களுக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இன்று (அக்டோபர் 3, 2022) அடிக்கல் நாட்டினார்.

அத்துடன் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வளத்துறை அமைச்சகத்தின் திட்டங்களான கண்ட்லாவில் உள்ள தீனதயாள் துறைமுகத்தின் மேம்பாட்டுப் பணியையும், அவர் தொடங்கி வைத்தார்.

பின்னர் பேசிய அவர், நாட்டின் வளர்ச்சிப் பணிகளில் குஜராத் மாநிலம் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது என்று கூறினார். நாட்டின் மக்கள் தொகையில் 5 சதவீதத்தை கொண்டுள்ள குஜராத் மாநிலம், நாட்டின் வேளாண் உற்பத்தியில் 20 சதவீத பங்களிப்பை வழங்குவதாக குறிப்பிட்டார். 

குஜராத் மாநிலத்தில் வேளாண் வளர்ச்சிக்காக வெற்றிகரமாக செயல் படுத்தப்படும் நடைமுறைகள் நாடு முழுவதும் மேற்கொள்ளப் படுவதாக குறிப்பிட்டார்.  சுகாதாரத்துறையில் குஜராத் மாநிலம் மிகப் பெரிய சாதனைப் படைத்துள்ளதாக குடியரசுத்தலைவர் தெரிவித்தார்.

நாட்டிலேயே கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகாதார அட்டை வழங்கிய முதலாவது மாநிலம் குஜராத் என்று அவர் குறிப்பிட்டார். இன்று அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்கள், மூலம் புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோருக்கு வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர் கூறினார்.

முன்னதாக அகமதாபாத் சென்ற குடியரசுத்தலைவர் சபர்மதி ஆசிரமம் சென்று, மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் ராட்டையில் நூல் நூற்றார்.

சிறப்பு நிருபர் - A.M.மாஹீன் - சென்னை

முப்பெரும் தலைவர்களுக்கு

தமிழ்நாடு காங்கிரஸ்

மாலையணிவித்து மரியாதை






நேற்று 02.10.22 இந்தியாவின் தேசப்பிதா மகாத்மா அண்ணல் காந்தியடிகள், முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோர் பிறந்தநாள் மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜர் ஆகிய இம்முப்பெரும் தலைவர்களுக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில், காந்தி மண்டபத்தில் நன்றிக்கடன் செலுத்தும் விதமாக மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

 இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி Ex.MP, தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் MP, சட்டமன்ற உறுப்பினர்கள் ஹஸன் மவ்லானா MLA, மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் சிவ ராஜசேகரன் MC,

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி பகுதி தலைவர் TM. தணிகாசலம், 63 (அ) வது வட்ட தலைவர் S.நயிப்கான் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

சேப்பாக்கம்- பார்டர் தோட்டம் காங்கிரஸ் கட்சியின் மூத்த அரசியல்வாதி முன்னாள் நகரமன்ற உறுப்பினர் மறைந்த கந்தசாமி செட்டியார் Ex-MC அவர்களின் இல்லம் சென்று அவரது குடும்பத்தினருக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்/

நமது நிருபர் - M.நிஜாம்தீன் – சென்னை

மாவட்ட அளவிலான

இளையோர் திருவிழா


இந்திய அரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தில் செயல்படும் திருச்சிராப்பள்ளி மாவட்ட நேரு யுவ கேந்திரா சார்பில் 75வது சுதந்திர தினவிழா அமுத பெருவிழாவினை முன்னிட்டு மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் இளையோர் சக்தியை மேம்படுத்தவும் மற்றும் வலியுறுத்தும் விதமாகவும் திருச்சிராப்பள்ளியில் வரும் அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில் இளையோர் திருவிழா நடைபெறவுள்ளது. 

அதையொட்டி கீழ்க்கண்ட போட்டிகள் நடைபெற உள்ளது.

போட்டிகள் விபரம் :

இளம் கலைஞர் (ஓவியம்), இளம் எழுத்தாளர் (கவிதை), போட்டோகிராபி (புகைப்படம்). பேச்சுப்போட்டி, இளையோர் கலைவிழா, மாவட்ட இளையோர் கருத்தரங்கம்.

போட்டிக்கான விதிமுறைகள்:

போட்டிகளில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சார்ந்த 01.04.2022 அன்று 15 முதல் 29 வயதிற்குட்பட்ட இளையோர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம், மேற்கண்ட போட்டிகளில் வரிசை எண் 1 முதல் 4 வரை, ஒரு நபர் ஒருபோட்டியில் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.

போட்டிகளில் வெற்றி பெறும் இளையோர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளும் வழங்கப்படும். மேலும் மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்கள் மாநில போட்டிகளுக்கும், மாநில அளவில் வெற்றி பெறுபவர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுவார்கள்.

பங்கேற்க விருப்பமுள்ள இளையோர்கள் பூர்த்தி செய்யப்பட்டவிண்ணப்பத்துடன் ஆதார் அட்டை நகலை இணைத்து மாவட்ட இளையோர்அலுவலர், நேரு யுவகேந்திரா, ரேஸ்கோர்ஸ் ரோடு காஜாமலை,திருச்சிராப்பள்ளி - 620 023 என்ற அலுவலக முகவரிக்கு வருகின்ற 06.10.2022 வியாழக் கிழமைக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு மாவட்ட நேரு யுவ கேந்திரா அலுவலகத்தை நேரிலோ, அல்லது 9486753795, 6381785164 என்ற தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். போட்டி நடைபெறும் இடம் போட்டியாளர்களுக்கு பின்னர் தெரிவிக்கப்படும்.

மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார். தெரிவித்துள்ளார்.

நமதுநிருபர் - K.ஷாகுல் ஹமீது - திருச்சி

திருச்சி மாநகரில்

கடந்த 9 மாதங்களில்

12890 நபர்கள் அதிரடி கைது


திருச்சி மாநகரத்தில் பொது இடங்களில் பொது மக்களுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து இந்த ஆண்டு 12890 நபர்கள் மீது சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்களின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் கத்தியை காட்டி வழிபறியில் ஈடுபட்ட ரவுடிகள், குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள், போதை பொருட்களை விற்பனை செய்தவர்களை கண்டறிந்து 2020-ஆம் ஆண்டு 40 நபர்கள் மீதும், 2021-ஆம் ஆண்டு 85 நபர்கள் மீதும், இந்த 2022 ஆண்டு ஒன்பது மாதங்களில் 142 நபர்கள் மீது குண்டர் காவல் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்களது எதிர்கால நலனை பாதுகாக்கும் பொருட்டு, பள்ளி-கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் கஞ்சா போதை பொருட்களை விற்பனை செய்த 170 நபர்கள் மீது கஞ்சா வழக்குகள் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொது அமைதியை பேணிக்காப்ப தற்காகவும், நன்னடத்தைக்கான பிணையம் பெறவேண்டி 1027 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நன்னடத்தைக்கான பிணையம் பெற்றிருந்தும், குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டு பிணையத்தை மீறிய 23 ரவுடிகள் உட்பட 42 நபர்கள் மீது திருச்சி மாநகர நிர்வாக செயல்துறை நடுவர் அவர்களால் சிறைதண்டனை விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 651 நபர்கள் மீதும், லாட்டரி சீட்டு விற்பனை செய்த 90 நபர்கள் மீதும், சூதாட்டத்தில் ஈடுபட்ட 113 நபர்கள் மீதும், சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்த 1124 நபர்கள் மீதும் மற்றும் பொது இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்களை தடுப்பதற்காக 9857 நபர்கள் மீது உரிய சட்ட பிரிவின்கீழ் வழக்குகள் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கை காரணமாக கடந்த ஆண்டை விட, நடப்பாண்டில் குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளது.

திருச்சி மாநகரத்தில், சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கவும், சட்ட விரோதமாக செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், கெட்டநடத்தைக் காரர்கள், வழிப்பறி குற்றச்சம்பவங்கள் மற்றும் சமூக விரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை தெடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

நமதுநிருபர் - M.முஹம்மது நியாஸ் – திருச்சி

தூய்மை நகரம் பட்டியலில்

திருச்சிக்கு 262 வது இடம்


தூய்மையில் சிறப்பாக செயல்படும் நகரங்களை கண்டறிந்து கவுரவப்படுத்தி ஊக்குவிக்கும் வகையில், ஸ்வஸ் சர்வேக்‌ஷான் என்ற தூய்மையான நகரங்களுக்கான விருது வழங்கும் திட்டத்தை 2016-ல் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்தார்.

அதன்படி பல்வேறு பிரிவுகளின் கீழ் நாட்டில் தூய்மையில் சிறந்து விளங்கும் நகரங்கள் குறித்த தரவரிசை பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் 2022-ம் ஆண்டுக்கான நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியலை மத்திய அரசு  வெளியிட்டது.

திருச்சி (382 நகரங்களில்) 262வது இடத்தில் உள்ளது, கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகவும்  பின்தங்கிய இடத்தை பிடித்துள்ளது.

மூன்று வெவ்வேறு கட்டங்களின் கீழ் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், திருச்சி மூன்றாம் கட்டத்தில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றது, ஆனால் முதல் இரண்டு கட்டங்களில் அதன் மோசமான செயல்திறன் சிறந்த தரத்தை இழந்தது.

தமிழகத்தில் தூய்மையான நகரங்களில் சிறந்த நகரமாக விளங்கிக் கொண்டிருந்த திருச்சி மாநகரம் தற்போது அதன் மதிப்பை இழந்து விட்டது

மொத்தம் 7,500 மதிப்பெண்களில் திருச்சி 2,473.78 மதிப்பெண்கள் பெற்றுள்ளது. சுமார் 48% மதிப்பெண்கள், திட்டங்கள் மற்றும் ஆவணங்களைச் செயல்படுத்துவதை உள்ளடக்கிய சேவை நிலை முன்னேற்றப் பிரிவில் இருந்து வந்துள்ளது.

குடிமக்கள் ஈடுபாடு மற்றும் குறைகளைத் தீர்ப்பது, திருச்சி 2,250 மதிப்பெண்களுக்கு 1,078 மதிப்பெண் பெற்றுள்ளது.

திருச்சி, சாலைகள், சந்தைகள், குடியிருப்பு பகுதிகளை சுத்தம் செய்தல் போன்ற அளவுருக்களில் சிறப்பாக செயல்பட்டாலும், பொது கழிப்பறைகளை பராமரிப்பதில் சராசரிக்கும் குறைவான மதிப்பெண்களை பெற்றுள்ளது.

 நகரை அழகுபடுத்துதல்,வடிகால் சுத்தம் போன்ற அளவுருக்களில், திருச்சி சராசரி மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. திறந்தவெளி  சிறுநீர் கழித்தல் மற்றும் பொது இடங்களில் போதுமான சிறுநீர் கழிப்பறைகள் இல்லாதது ஆகியவை குறைபாடுகளாக இருந்தன.

திருச்சியில் வலுவான பொதுக் கழிப்பறை உள்கட்டமைப்பு மற்றும் மலக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதில் நிபுணர்களை ஈடுபடுத்துவதன் மூலம் நகரம் முழுவதும் உள்ளடங்கிய துப்புரவு (CWIS) திட்டத்தை செயல்படுத்துவதால், பொதுக் கழிப்பறைகளை பராமரிப்பதில் மோசமான செயல்திறன்  இருந்தது. 

ஜனவரி முதல் ஜூன் வரையிலான முதல் இரண்டு காலாண்டுகளில் திருச்சி மாநகராட்சி 1,200 மதிப்பெண்களுக்கு 459 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ளதாக பகுப்பாய்வு காட்டுகிறது.

மூன்றாம் கட்டத்தில் , திருச்சி 1,200 மதிப்பெண்களுக்கு 735 மதிப்பெண்களைப் பெற்றது, இது  முன்னேற்றப் பிரிவில் மிக உயர்ந்த ஒன்றாகும். இருப்பினும், முதல் இரண்டு காலாண்டுகளில் ஏற்பட்ட தவறுகளை ஈடுகட்ட கடைசி நிமிட முயற்சிகளும் செயல்திட்டங்களும் போதுமானதாக இல்லை. 

“பொது கழிப்பறைகளின் பராமரிப்பு மற்றும் ஒட்டுமொத்த தரவரிசையை மேம்படுத்துவோம். கடந்த காலாண்டின் செயல்திறன் எங்களின் களப்பணிக்கு சான்றாகும்" என்று திwருச்சி மாநகராட்சியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நமதுநிருபர் - M.முஹம்மது நியாஸ் – திருச்சி

டிவிஎஸ் நிறுவன ஊழியர்களுக்கு

நீர் அருந்துவதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி



திருச்சி டிவிஎஸ் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு நீர் அருந்துவதன் அவசியம் மற்றும் நீர் ஆதாரங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்த நிகழ்ச்சியை நடத்தியுள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திருச்சி டான்போஸ்கோ நிறுவன இயக்குநர்,ரெவ் ஆண்டனி கலந்துகொண்டு மனித உடலில் நீரின் முக்கியத்துவம் குறித்து பேசினார். தண்ணீர் குடிக்காததற்கான காரணங்கள். பல்வேறு காணொளிகள் மூலம் நம்மைச் சுற்றியுள்ள நீர்நிலைகள் மற்றும் நீரைச் சேமிப்பது எப்படி என்பது குறித்து விளக்கினார்.

அன்றாட நம் வாழ்க்கையில் ஒரு நாளில் குடிக்க வேண்டிய நீரின் அளவை சரியாக அருந்துகிறோமோ என்றால் இல்லை என்பதே உண்மை.  நம்முடைய வேலை நேரம் மற்றும் நாம் இருக்கும் இடம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே நாம் நீர் அருந்துவதை முறையாக பின்பற்றுவது இல்லை.

நீருக்கு பதிலாக குளிர்பானங்கள் போன்றவற்றை அதிகம் விரும்புகிறோம் ஆனால் இவை அனைத்தும் நீரில் உள்ள சத்துக்களை நமக்கு அளிக்காது. முறையாக நீர் அருந்துவது பல நோய்களிலிருந்து நம்மை காக்கும்.

அதுபோலவே நம்மை சுற்றி உள்ள நீர் நிலைகளை ‌ பாதுகாப்பதும் நமது கடமை ஆகும் மழை நீரை வீணடிக்காமல் சேகரித்து வைக்கலாம் இன்று நாம் சேமிக்கும் ஒவ்வொரு துளி நீரும் நாளைய தலைமுறைக்கு இன்றியமையாத ஒன்றாகும் என்றார்.

இந்த அமர்வின் முக்கிய நோக்கமே நிறுவனத்தின் பணி புரியும் ஊழியர்கள் போதுமான தண்ணீரை குடிக்க வேண்டும் மற்றும் தண்ணீரை ஒருபோதும் வீணாக்கக்கூடாது என்பதை அவர்களுக்கு வலியுறுத்தவே ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வை திருச்சி பிஷப் கல்லூரி சமூக பணித்துறை பயிற்சியாளர் பிரதீப் ஜான் ஏற்பாடு செய்திருந்தார்.

நமதுநிருபர் - M.முஹம்மது நியாஸ் – திருச்சி

உலக சுற்றுலா தினம்

என்.சி.சி. மாணவர்கள்  ஊர்வலம்









திருச்சியில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டும் தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம் என்பதை வலியுறுத்தியும் என்.சி.சி. மாணவர்களின் ஊர்வலம் நடைபெற்றது. ராணுவ அதிகாரி  லெப்டினன்ட் கர்னல் ஜி வெற்றிவேல் கொடியசைத்து  தொடங்கி வைத்தார்.

அஜய் தங்கம், காவல்துறை  துணை ஆணையர் மாணவர்களிடையே ஆறு மற்றும் குளங்களைக் காப்பதில் மாணவர்களின் பங்கு குறித்து எடுத்துரைத்தார்.

மேலும் கூறுகையில் 3வது உலகப் போர் என்று ஒன்று நேர்ந்தால் அது குடிதண்ணிருக்கான போராகவே இருக்கும் என்று குடிநீரின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

இறுதியில் லெப்டினன்ட் கர்னல் அஜய் குமார், சேனா மெடல், 3 (த.நா) கூட்டுத் தொழில் நுட்ப தேசிய மாணவர் படை அணியின்  கட்டளை அதிகாரி நன்றி உரையாற்றினார்.

பேரணியில், 10  அதிகாரிகள், 300 மாணவர்கள் கலந்து கொண்டு பொது மக்களிடையே குடிநீர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோஷங்கள் எழுப்பியும் விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட  பதாகைகளை பிடித்தும் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

பேரணியானது தேசிய மாணவர் படை (என்.சி.சி) அலுவலகத்திலிருந்து தொடங்கி தலைமை தபால் நிலையம், புகைவண்டி நிலையம், மத்திய பேரூந்து நிலையம் வழியாக மீண்டும் என்.சி.சி. அலுவலகத்தில் நிறைவடைந்தது.

நமதுநிருபர் - S.ஷமி அகமது - திருச்சி