10/04/22

மரபு சாரா எரிசக்தி மூலம்

500 ஜிகாவாட் மின்சாரம்

பிரதமர் மோடி இலக்கு





ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் 30 ஜிகாவாட் மின் உற்பத்திக்கான காற்று வளம் உள்ளது

நாட்டிலேயே அதிக மின் உற்பத்தித் திறன்கொண்ட காற்றாலை டர்பைனைப் பாவையிட்ட மத்திய அமைச்சர் தகவல்

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே வடலிவிளையில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவிலேயே அதிக மின் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலையை  மத்திய அரசின்  புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை,  ரசாயனம் மற்றும் உரங்கள் துறை  இணை அமைச்சர் பகவந்த் கூபா பார்வையிட்டார். 

பிரேசில் நாட்டைச்  சேர்ந்த டபிள்யூ இ ஜி  நிறுவனம் 88 கோடி ரூபாய் மதிப்பில்  இந்தக்  காற்றாலை டர்பைனை அமைத்துள்ளது .இதன் மூலம் 4.2 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது.இந்த காற்றாலை டர்பைனைப் பார்வையிட்டு ஆய்வு செய்த மத்திய அமைச்சர், அந்த நிறுவன அதிகாரிகளிடம் அதிக மின் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலை செயல்பாடு , உற்பத்தி செலவு உள்ளிட்ட விபரங்களைக்  கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் ,  எதிர்காலத்தில் 7 மெகாவட் மின்சார உற்பத்தித்  திறன் கொண்ட  டர்பைனைத் தயாரிக்க உள்ளோம்.இந்திய கடலோரப் பகுதியில் 70 ஜிகாவாட் காற்று வளம் உள்ளது.குஜராத்திலும், தமிழ்நாட்டிலும் 35 ஜிகாவாட் காற்று வளம் உள்ளது. குறிப்பாக ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் சுமார் 30 ஜிகாவாட் காற்று வளம் உள்ளது.

இங்கு இரண்டு காற்றாலை டர்பைன் நிறுவ உள்ளோம்.இதன் மூலம் ராமேஸ்வரம் நகர் முழுவதும் மின்சாரத்தை விநியோகிக்க முடியும் என்றார். 2030-ஆம்  ஆண்டுக்குள் இந்தியாவில்  மரபு சாரா எரிசக்தி மூலம் 500 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப் பிரதமர் மோடி இலக்கு நிர்ணையித்துள்ளார். இதற்குப்  போதுமான அளவு வாய்ப்பும் வளமும் இந்தியாவில்  உள்ளது.

சூரிய சக்தி மூலம் 300 ஜிகாவாட் மின்சாரமும்,பிற மரபு சாரா எரிசக்தி மூலம் 200 ஜிகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்ய முடியும்  என அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில்  டபிள்யூ இ ஜி நிறுவன நிர்வாக இயக்குனர் ஜீன்கார் நோபஸ்கீ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சிறப்பு நிருபர் - A.M.மாஹீன் - சென்னை

மாநகராட்சி பணிகளை

விரைந்து முடிக்க

பிரியா ராஜன் ஆலோசனை


பெருநகர சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டல அலுவலகத்தில், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மாநகராட்சி, மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிக ளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்  எ.வ.வேலு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்  பி.கே.சேகர் பாபு பங்கேற்று நடைபெற்றுவரும் பணிகளை விரைந்து முடிக்க  ஆலோசனை.

சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் உடன் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங்பேடி அரசு அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள் என‌ பலர் கலந்துகொண்டனர்.

நமதுநிருபர் - M.முஹம்மது நியாஸ் – திருச்சி

விக்னேஷ் பிரியாவுக்கு

அரசு வாகனம்

தங்கம்தென்னரசு

வழங்கினார்


சிவகாசி மாநகராட்சி துணை மேயருக்கு தமிழக  அரசால் வழங்கப்பட்ட வாகனத்தை தமிழக தொழில் மற்றும் தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டு துறை அமைச்சர் தங்கம்தென்னரசுவிடமிருந்து துணை மேயர் விக்னேஷ் பிரியா பெற்றுக் கொண்டர்.

நமதுநிருபர் - M.முஹம்மது நியாஸ் – திருச்சி

ஆயுதங்களுடன்

தங்கியிருந்த

குற்றவாளிகள் கைது

கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் வாடகை வீட்டில் பயங்கர ஆயுதங்களுடன் தங்கியிருந்த 6 குற்றவாளிகள் கைது

தென்காசி மாவட்டம்,கடையநல்லூர் காவல் நிலைய எல்கைகுட்பட்ட கிருஷ்ணாபுரம்  பருத்திவிலை தெருவில் சில நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் தங்கி இருப்பதாகவும் , பொதுமக்கள் அச்சமுற்றதாகவும் , கிடைத்த இரகசிய தகவலின் படி தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் .உத்தரவின்பேரில்

காவல் துணை கண்காணிப்பாளர்கள் பொன்னரசு ,அசோக் ஆகியோர் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் மகேஷ்குமார் , விஜயகுமார் மற்றும் காவலர்கள் கிருஷ்ணாபுரம்  பருத்திவிலை தெருவில் உள்ளள வீடுகளை சோதனை செய்ததில் சரோஜா என்பவரது லைன் வீட்டை சோதனை செய்யும்போது மாடியில் உள்ள ஒரு வீடு மட்டும் கதவை தட்டியும் திறக்காத காரணத்தால் சந்தேகம் அடைந்து சட்டவழி முறைகளை பின்பற்றி கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சுமார் 6 நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தது தெரியவந்தது.

பின்னர் மேற்படி நபர்களை விசாரணை செய்ததில் சேரன்மகாதேவி சங்கன்திரடு தெற்கு தெருவை சேர்ந்த முப்புடாதி (எ) ஆறு (27). நெட்டூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்பையா என்பவரின் மகன் சுரேஷ் கண்ணன் (எ) நெட்டூர் கண்ணன்

மேலசெவல் பகுதியைச் சேர்ந்த பிச்சையா என்பவரின் மகன் லட்சுமணகாந்தன் (எ) கருப்பசாமி, ஊத்துமலை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாண்டி என்பவரின் மகன் மாரிமுத்து, அய்யனார் குளம் நடுத்தெருவை சேர்ந்த உக்கிரமசிங்கம் என்பவரின் மகன்களான சூர்யா மற்றும் சத்யா என்றும்,

மேற்படி நபர்கள் குற்றம் செய்யும் நோக்கத்துடன் மேற்படி வாடகை வீட்டில் தங்கியிருந்தது தெரியவந்தது. எனவே மேற்படி ஆறு நபர்கள் ஆறு நபர்கள் மீதும் கடையநல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மேற்படி நபர்களை கைது செய்து விசாரணை செய்ததில் 

மேற்படி முப்புடாதி (எ) ஆறு என்பவருக்கு நெல்லை, தென்காசி மற்றும் பிற மாவட்டங்களில் கொலை, கொலை முயற்சி ஆயுதத்தடை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் உட்பட 21 வழக்குகளும், 

சுரேஷ் கண்ணன் (எ) நெட்டூர் கண்ணன் என்பவருக்கு நெல்லை, தென்காசி மற்றும் பிற மாவட்டங்களில் கொலை, கொலைமுயற்சி ஆயுதத்தடை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் உட்பட 27 வழக்குகளும்,

 லட்சுமண காந்தன் என்பவருக்கு கொலை, கொலைமுயற்சி உட்பட 15 வழக்குகளும், மாரிமுத்து என்பவருக்கு கொலை, திருட்டு. கஞ்சா உட்பட 10 வழக்குகளும், சூர்யா என்பவருக்கு கொலை முயற்சி உட்பட 2 வழக்குகளும். சத்யா என்பவருக்கு கொலை, கொலைமுயற்சி உட்பட 09 வழக்குகளும் உள்ளது என தெரியவந்தது.

மேலும் இது சம்பந்தமாக கடையநல்லூர் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் பயங்கர ஆயுதங்களுடன் தங்கியிருந்த நபர்களை காவல்துறையினர் கைது செய்ததை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.

 மேலும் கஞ்சா விற்பனை மற்றும் கஞ்சா உபயோகிப்பவர்கள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் 9385678039 என்ற எண்ணின் வாயிலாக தெரிவிக்குமாறு தென்காசி மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நமது நிருபர் – K.ஜமாலுதீன் - சென்னை

சுங்கச் சாவடி

ஊழியர்கள்பணி நீக்கம்

தீர்வு காண

வைகோ வேண்டுகோள்


சுங்கச் சாவடி ஊழியர்கள் பணி நீக்கம்.தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும்.வைகோ வேண்டுகோள்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம் - செங்குறிச்சி சுங்கச்சாவடி மையம் மற்றும் பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்கச் சாவடி மையங்களில், திடீரென 58 ஊழியர்களை நிர்வாகத்தினர் பணி நீக்கம் செய்துள்ளனர்.

தொழிலாளர்களின் பணி நிரந்தரம் கோரிய வழக்கு, புதுச்சேரியில் உள்ள மத்திய உதவி தொழிலாளர் ஆணையரிடம் நிலுவையில் உள்ளது. 

பணியாளர்களின் பணி நிலையில் எந்தவிதமான மாறுதல்களும் ஏற்படக்கூடாது என்று தொழிலாளர் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதை மீறி அரசிடம் முன்னனுமதி எதுவும் பெறாமலும், சட்டப்படி 3 மாதங்களுக்கு முன்பாக தொழிலாளர்களுக்கு அறிவிப்பு எதுவும் அளிக்காமலும் தன்னிச்சையாக திடீரென ஒரே நாளில் 58 பணியாளர்களை சுங்கச் சாவடி நிர்வாகம் வேலை நீக்கம் செய்திருப்பது கண்டனத்திற்குரியது.

பணி நீக்கத்தைக் கண்டித்து, தொழிலாளர்கள் 3ஆவது நாளாக உள்ளிருப்புப் போராட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியும், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மீறி சுங்கச் சாவடி நிர்வாகத்தினர் செயல்பட்டு வருகின்றனர். இது சட்ட விரோதமான செயலாகும்.

பதிமூன்று ஆண்டு காலம் தொடர்ச்சியாக பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு எந்த விதமான சலுகைகளையும் அளிக்காமல், சட்ட வழிமுறைகளைப் பின்பற்றாமல் 58 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்திருப்பது, தொழிலாளர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே உடனடியாக தமிழக அரசு தலையிட்டு, தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்

நமது நிருபர் R.வேல்முருகன் - கள்ளக்குறிச்சி

காதர் மொகிதீன்

தலைமையில் IUML

நிர்வாகக்குழு கூட்டம்




இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் 04.10.2022 சென்னையில் காயிதே மில்லத் மன்ஜிலில் தேசியத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்றது.

நமதுநிருபர் - M.முஹம்மது நியாஸ் – திருச்சி

விவசாயியிடம் லஞ்சம்

வட்டாட்சியர் கைது


திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி வட்டாட்சியர் லட்சுமி விவசாயிடம் பத்தாயிரம் லஞ்சம் வாங்கிய பொழுது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு துறையினரால் பிடிபட்டார்
.

திருச்சி மாவட்டம் காரைப்பட்டி அடுத்த மஞ்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி - 59. இவர்  துவரங்குறிச்சி-செந்துறை செல்லும் சாலையில் உள்ள புங்கமரத்தின் கிளைகள் தனது தோட்டத்திற்கு செல்லும் மின்சார வயர்களில் உரசுவதால் அந்த கிளைகளை 25.09.22 அன்று  வெட்டியுள்ளார். 

இதனை அறிந்த மருங்காபுரி வட்டாட்சியர் லட்சுமி சம்பவ இடத்திற்கு சென்று அவர் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் சாலையில் ஓரத்தில் வைத்த மரங்களை வெட்டியதற்கு அனுமதி கூறவில்லை என்று நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக லஞ்சமாக 50,000 கேட்டுள்ளார்.

இதற்கு சுப்பிரமணியன் பேரம் பேசி ரூ 10,000 தருவதாககூறி உள்ளார். லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத சுப்பிரமணியன் லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு தகவல் அளித்தார்.

தகவலின் பெயரில் லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் மணிகண்டன் தாசில்தார் லட்சுமியிடம் - சுப்பிரமணியன்  பத்தாயிரம் லஞ்சம் வாங்கும் பொழுது கையும் களவுமாக பிடிபட்டார். மேலும் வட்டாச்சியர் லட்சுமியை  கைது செ ய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நமதுநிருபர் - M.முஹம்மது நியாஸ் – திருச்சி