10/07/22

விமானப்படை முகாமிலிருந்து

சென்னை திரும்பிய

என்சிசி படை


அகில இந்திய விமானப்படை ராணுவ முகாமிலிருந்து வெற்றிகரமாக என்சிசி படைப்பிரிவு சென்னை திரும்பியது

தேசிய மாணவர் படையின் (தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார்) இயக்ககத்தின் அகில இந்திய விமானப்படை ராணுவம் முகாமிலிருந்து வெற்றிகரமாக இன்று சென்னை திரும்பியது.

இந்த இயக்ககத்தின் அணி பல்வேறு போட்டிகளில் 3 தங்கப் பதக்கங் களையும், 3 வெள்ளிப் பதக்கங் களையும் வென்றது. ஒட்டுமொத்த கோப்பைக்கான போட்டியில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.

இந்த அணியின் சிறப்பு மிக்க செயல்பாட்டிற்காக இயக்ககத்தின் துணை தலைமை இயக்குனர் கமாடோர் அத்துல் குமார் ரஸ்தோகி பாராட்டு தெரிவித்தார். இந்த அணியினரை மாநில விளையாட்டுக்கள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ வி மெய்யநாதன் தனிப்பட்ட முறையில்  கவுரவித்து ஊக்கப்படுத்தினார்.

புதுதில்லியில் உள்ள என்சிசி தலைமை இயக்குனரகத்தால், இந்த வருடாந்திர நிகழ்வு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் உள்ள என்சிசி பிரிவுகளின் 5 விமானப்படை அணிகளால் பெறப்பட்ட பயிற்சியின் தரத்தை மதிப்பீடு செய்வதற்காக இந்த முகாம் நடத்தப்பட்டது.

ராஜஸ்தானின் ஜோத்பூரில் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 5 வரை போட்டிகள் நடத்தப்பட்டன. சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, புதுச்சேரி ஆகிய இடங்களைச் சேர்ந்த என்சிசி பிரிவுகளில் 5 விமானப்படை அணிகள் தெரிவு செய்யப்பட்டன. 

சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின்  பாதுகாப்புப் பிரிவு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்புநிருபர் - A.M.மாஹீன் - சென்னை

திருச்சியில்

வரும் 12ஆம் தேதி

கழிவு வாகனங்கள்

பொது ஏலம்


திருச்சி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தபட்டு கழிவு செய்யப்பட்ட 3 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் ஆக மொத்தம் 5 வாகனங்கள் தற்போது உள்ள நிலையிலேயே பொது ஏலம் மூலம் விடப்படுகிறது.

வருகின்ற (12-10-2022) காலை 10 மணிக்கு திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலம் நடைபெறுகிறது.ஏலம் எடுக்க விரும்புவோர் (11.10.2022) ம் தேதி காயை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டுக் கொள்ளலாம்.

மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் ஏலம் நடைபெறும் நாளான (12/10/2022) காலை 7 மணி முதல் 10 மணி வரை தங்களது ஆதார் அட்டையுடன் இருசக்கர வாகனத்திற்கு ரூபாய் 1000/- மற்றும் நான்கு சக்கர-வாகனத்திற்கு ரூபாய் 5000/- முன் பணம் செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ளவேண்டும்.

ஏலம் எடுத்த உடன் சரக்கு மற்றும் சேவை வரி (இரு சக்கர வாகனத்திற்கு 12% மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு 18%) முழு தொகையையும் செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் நிச்சயமாக கொரணா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் தெரிவித்துள்ளார்.

நமதுநிருபர் - M.முஹம்மது நியாஸ் – திருச்சி

திருச்சி சிவா

மு.க.ஸ்டாலினை

சந்தித்து வாழ்த்து



நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா நாடாளுமன்ற தொழில் துறை நிலைக்குழுவின் தலைவராக நியமிக்கப் பட்டதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

நமதுநிருபர் - M.முஹம்மது நியாஸ் – திருச்சி

நியாய விலை கடைகளில்

நாளை(08.10.2022)

குறைதீர் கூட்டம்



பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும் மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும் உணவுப்பொருள் வளங்கல் தொடர்பான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை நடத்த உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என அரசு  உத்தரவிட்டுள்ளது.

அதன்படி திருச்சி மாவட்டத்தில் நாளை (08.10.2022) காலை 10 மணி முதல் பிற்பகல் 1.00மணி வரை கீழ்கண்ட வட்டங்களில் அதன் எதிரே குறிப்பிட்டுள்ள நியாய விலை அங்காடிகளில் பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம் தனி வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல்  அலுவலர்களால் நடத்தப்பட உள்ளது.

இதற்கு ஒவ்வொரு வட்டத்திற்கும் ஒரு கண்காணிப்பு அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.எனவே பொதுமக்கள் பொது விநியோகத் திட்டம்  தொடர்பான கோரிக்கைகளைன குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம், நகல் குடும்ப அட்டை கோருதல், மற்றும் இதர கோரிக்கைகளை தெரிவித்து பயனடையலாம்.

என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

நமதுநிருபர் - M.முஹம்மது நியாஸ் – திருச்சி

தீபாவளிக்கு

டவுன் ஹால் மைதானத்தில்

தரைக்கடைகள் 

மா.பிரதீப்குமார் தகவல்





தீபாவளிக்கு டவுன் ஹால் மைதானத்தில் தரைக்கடைகள் அமைத்திட விண்ணப்பிக்கும் தேதி மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

திருச்சிராப்பள்ளி கிழக்கு வட்டம், டவுன் கிராமம், வட்டாட்சியர் அலுவலகம் முன்புறமுள்ள டவுன் ஹால் மைதானத்தில் 2022 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தரைக்கடைகள் அமைப்பது தொடர்பாக குற்றங் குறைகளற்ற திட்டவட்டமான ஒழுங்குமுறை உடைய தெளிவான நடைமுறைகள் சென்ற ஆண்டு பின்பற்றப்பட்டது போல் நடப்பு ஆண்டும் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது.

இது ஒவ்வொரு வருடமும் நடைமுறையில் உள்ள திட்டமாகும்.இது புதிய திட்டமல்ல.டவுன் ஹால் மைதானத்தில் பின்வரும் விவரப்படி அ, ஆ, இ பகுதி என பாகுபாடு செய்யப்பட்டு 

“அ” பகுதியில் 80 சதுர அடி கொண்ட 37 தரைக்கடைகளும், 

“ஆ” பகுதியில் 80 சதுர அடி கொண்ட 19 தரைக்கடைகளும் 

“இ” பகுதியில் 80 சதுர அடி கொண்ட 24 தரைக்கடைகளும்

அமைத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.கடை ஒவ்வொன்றும் அனுமதி வழங்கப்படும் நாளிலிருந்து தீபாவளி பண்டிகை முடிவுறும் வரை வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படும்.

‘அ’ பிரிவு தரைக்கடை ஒன்றுக்கு அனுமதிக் கட்டணம் ---- ரூ.6500

‘ஆ’பிரிவு தரைக்கடை ஒன்றுக்கு அனுமதிக் கட்டணம் ---- ரூ.5500

‘இ’ பிரிவு தரைக்கடை ஒன்றுக்கு அனுமதிக் கட்டணம் ---- ரூ.4500

தரைக்கடைகள் அமைக்க விரும்பும் நபர்கள் எந்தப் பிரிவு தரைக்கடை வேண்டுமோ அதைத் தங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டு அதற்கான கட்டணத் தொகையை வருவாய் கோட்டாட்சியர், திருச்சிராப்பள்ளி (Revenue Divisional Officer, Tiruchirappalli ) என்ற பெயரில் வங்கி கேட்பு காசோலையாக (Demand Draft ) எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியாரிடம் (12.10.2022) பிற்பகல் 05.45 மணிக்குள் சேர்க்க வேண்டும்.

தரைக்கடைகள் எண்ணிக்கையை விட மனு செய்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் பட்சத்தில் குலுக்கல் முறையில் நபர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். முதலில் “அ” பிரிவுக்கு குலுக்கல் முறையில் தேர்வு நடைபெறும். அதில் இடம் கிடைக்காதவர்கள் விரும்பினால் “ஆ” பிரிவுடன் சேர்ந்து குலுக்கல் நடைபெறும். “ஆ” பிரிவில் இடம் கிடைக்காதவர்கள் விரும்பினால் “இ” பிரிவில் சேர்ந்து குலுக்கல் நடத்தப்படும்.

மேற்படி குலுக்கல் நகர வர்த்தக குழு பிரதிநிதிகள் மாவட்ட உபயோகிப்பாளர் சங்க பிரதிநிதிகள் மற்றும் நகர முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் திருச்சிராப்பள்ளி, வருவாய் கோட்டாட்சியரால் திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் (14.10.2022) அன்று காலை 11.00 மணிக்கு நடத்தப்படும்.

என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

நமதுநிருபர் - M.முஹம்மது நியாஸ் – திருச்சி

தேர்தல் ஆணையம்

பல் இல்லாத

ஆணையங்களாகவே உள்ளன

கி.வீரமணி


கி.வீரமணி


ராஜராஜன் குறித்து வெற்றிமாறன் மற்றும் கமல்ஹாசன் சொன்ன கருத்துக்கள் 100 சதவீதம் சரியானது - கீ.வீரமணி பேட்டி

திருச்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியாரின் 144 வது பிறந்த நாள் விழா மற்றும் புத்தகங்கள் அறிமுக விழா திருச்சியில் நடைபெற்றது.

இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டார். அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்... முன் இருந்த காலத்தை விட தற்போது பெரியார் அதிகம் தேவைப்படுகிறார். தற்போது மதவாதமும், ஜாதிவாதமும் தலை தூக்கி ஆடுகிறது.

அனைவருக்கும் கல்வி என்பதை கிடைக்கச்செய்ய மறுக்கிறார்கள். புதிய கல்வி கொள்கை என்ற பெயரில், வேத பாட சாலையில் படித்தவர்கள் பள்ளிப்படிப்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்ததற்கு சமம் என பாஜக அரசு கூறுகிறது. நேரடியாக அவர்கள் பொறியியல் கல்லூரியில் சேரலாம் எனவும் கூறுகிறார்கள். இது பிற்போக்கு தனமான கண்டிக்கதக்க நடவடிக்கை.

கடந்த காலங்களில் கல்வியின் தரம் தாழ்ந்து விட்டதாக பாஜக வினர் கூறுகிறார்கள். ஆனால் இப்பொழுது தான் கல்வியின் தரம் தாழ்கிறது. இது போன்ற செயல்பாடுகளை தடுக்கும் விதத்தில் தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நடந்துவருகிறது. இதனை குறை சொல்பவர்களிடம் இருந்து திமுக அரசை பாதுகாக்க வேண்டியது திராவிட இயக்கங்களின், குறிப்பாக திராவிடர் கழகத்தின் கடமையாக உள்ளது.

குழந்தை திருமணம் என்பது கிரிமினல் குற்றம். ஆனால் சிதம்பர தீட்சதர்கள் எந்த சட்டத்திற்கும் கட்டுப்படாமல் குழந்தை திருமணம் செய்து வந்தார்கள். இதை ஏற்கனவே இருந்த அரசு கண்டுகொள்ளவில்லை. தற்போது குழந்தை திருமணம் தொடர்பாக தீட்சதர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப் படுகிறார்கள்.

இதை பாராட்டும் அதே நேரத்தில், இந்த நடவடிக்கை கண் துடைப்பு நடவடிக்கையாக இருந்து விடக்கூடாது.தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த நாட்டில் உள்ள பெரும்பாலான சாமியார்கள் தேடப்பட்ட அல்லது தேடப்படும் குற்றவாளியாக தான் இருக்கிறார்கள்.

இராஜ இராஜ சோழர் குறித்து வெற்றிமாறனும், கமல்ஹாசனும் கூறிய கருத்து நூற்றுக்கு நூறு சரியானது.அவர்களின் கருத்தை வைத்து வெறித்தனத்தை பரப்பலாம் என சிலர் முயற்சித்தால் அந்த பருப்பு இங்கு வேகாது. வேதங்களில் கூட இந்து என்கிற பெயர் கிடையாது. வெள்ளைக்காரர்கள் வைத்த பெயர் தான் இந்து. அந்த மதத்திற்கு இந்து என்கிற பெயர் இல்லை என்பதை நீதிமன்ற தீர்ப்புகள் கூறியுள்ளன.

தேர்தல் ஆணையம் யாருடைய கைப்பாவையாக உள்ளது என்பது இந்திய மக்களுக்கு தெரியும். அது குறித்து நாம் கவலைப்பட தேவையில்லை. அந்த ஆணையங்கள் பல் இல்லாத ஆணையங்களாகவே உள்ளன என்றார்.

நமதுநிருபர் - M.முஹம்மது நியாஸ் – திருச்சி

சுங்கச்சாவடி

ஊழியர்கள் பணிநீக்கம்

சிபிஐ,சிபிஎம்,விசிக

காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்



கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செங்குறிச்சி சுங்கச்சாவடியில் பணிபுரிந்து வந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் 28 பேரை எவ்வித  முன்னறிவிப்பு மின்றி சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்த சுங்கச்சாவடி நிர்வாகத்தை கண்டித்து

உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ,சிபிஎம்,விசிக,காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கலந்துகொண்டனர்.

இவ்வாறு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் எம்.எஸ்.முருகன் தனது செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.