கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட துணிகள்.சலவை தொழிலாளர்கள் சாலை மறியல்



திருச்சியில் நூற்றுக்கணக்கான சலவை தொழிலாளர்கள் கொள்ளிடம் ஆற்றில் துணிகளை துவைக்கும் தொழிலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலைக்கு மேல் முன்னறிவிப்பு இன்றி அதிகப்படியான தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சுமார் 50க்கும் அதிகமான சலவைத் தொழிலாளர்கள் ஆற்றுக்குள் காய வைத்த துணிகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. பொதுவாக முக்கொம்பு மேல் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால் கண்டிப்பாக முன்னறிவிப்பு வெளியிடப்படும். ஆனால் நேற்று இரவு அது போன்ற முன்னறிவிப்பு இன்றி தண்ணீர் திறந்து விட்டதாக கூறி கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட சலவை தொழிலாளர்கள் இன்று செக் போஸ்ட் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சலவைத் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டு இருக்கும் தங்களுக்கு இது போன்ற முன்னறிவிப்பு இன்றி தண்ணீர் திறந்து விட்டால் தொழில் அடியோடு பாதிக்கப்படும் என்றும் உடனடியாக இதுபோன்று முன்னறிவிப்பு இன்றி தண்ணீரை திறந்து விட காரணமாக இருந்த அதிகாரியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு அதிகமாக டோல்கேட் திருவானைக்காவல் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது - தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்திய காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து தற்காலிகமாக தங்களது போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர்.

மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே கொள்ளிடம் ஆற்றில்  தண்ணீர் தொடர்ந்து வருகிறது என்று முன்பே அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். நீர்வளத்துறை அதிகாரிகளும் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாகவும், நீர்வரத்து அதிகமானதால் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

Share To:

IBINEWS

Post A Comment:

0 comments so far,add yours