செப்டம்பர் 2022

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

பிரதமர் மோடி

ரயில் பயணம்


அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டப் பாதையை அகமதாபாத் கல்வி சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.

அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தை கொடியசைத்து துவக்கிவைத்த பிரதமர், கலுப்பூர் நிலையத்தில் இருந்து தூர்தர்ஷன் கேந்திரா மெட்ரோ ரயில் நிலையம் வரை மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டார்.காந்தி நகர் ரயில் நிலையத்தில், காந்தி நகருக்கும் மும்பைக்கும் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலையும் கொடியசைத்து துவக்கி வைத்த அவர், கலுப்பூர் ரயில் நிலையம் வரை ரயிலில் பயணம் செய்தார்.


நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், "இன்று 21 ஆம் நூற்றாண்டின் இந்தியா, நகர்ப்புற இணைப்பு மற்றும் தற்சார்ப்பு இந்தியா ஆகியவற்றிற்கு ஒரு பொன்னாள்" என்று கூறினார். வந்தே பாரத் ரயில், அகமதாபாத் மெட்ரோ ரயில் ஆகியவற்றில் மேற்கொண்ட பயணம் குறித்து அவர் மகிழ்ச்சி வெளியிட்டார்.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு உள்ளே ஒலி புகாத  அமைப்பை பாராட்டிய பிரதமர், விமானத்திற்குள் காணப்படும் ஒலியுடன் ஒப்பிடுகையில் நூறில் ஒரு மடங்காக இந்த ரயிலில்  ஒலி குறைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் குறித்து தனிப்பட்ட முறையில், கருத்து தெரிவித்த பிரதமர், இன்று அகமதாபாத்துக்கு நான் தலைவணங்கப் போவதில்லை, ஏனெனில் அகமதாபாத் எனது இதயத்தை வென்று விட்டது என்று உணர்ச்சி மேலிட கூறினார்.  

"21 ஆம் நூற்றாண்டின் இந்தியா நாட்டின் நகரங்களிலிருந்து புதிய வேகத்தைப் பெறப் போகிறது" என்று குறிப்பிட்ட பிரதமர்,“மாறி வரும் காலத்திற்கு ஏற்ப நமது நகரங்களை, தேவைக்கேற்ப தொடர்ந்து நவீனப்படுத்திக் கொண்டே இருப்பது அவசியம்” எனக் கூறினார். நகரத்தின் போக்குவரத்து முறை நவீன மயமாகவும், தடையற்ற இணைப்புடனும் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்த கருத்தின் அடிப்படையில் நகர்ப்புற உள்கட்டமைப்புக்கு மிகப்பெரிய அளவில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 8 ஆண்டுகளில் 24-க்கும் மேற்பட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட்டுள்ளது. சில நகரங்களில் அது நிறைவுறும் நிலையில் உள்ளது. உடான் திட்டத்தின் கீழ் பல சிறு நகரங்கள்  விமான போக்குவரத்து சேவை உடன் இணைக்கப் பட்டுள்ளது. இதே போல ரயில் நிலையங்கள் மாற்றத்தை எதிர்நோக்கியுள்ளன. “இன்று காந்தி நகர் ரயில் நிலையம் உலகின் எந்த ஒரு விமான நிலையத்திற்கும் குறையாத தரத்துடன் உள்ளது” என்றார்.

அகமதாபாத் ரயில் நிலையத்தையும் நவீனப்படுத்த அரசு முடிவெடுத்திருப்பதை சுட்டிக்காட்டினார். அகமதாபாத்- காந்தி நகரின் வெற்றியை பற்றி கூறிய பிரதமர், அந்த இரட்டை நகரின் மேம்பாட்டு வெற்றி  குறித்து  விளக்கினார். 

ஆனந்த்- நாடியாட்,  பரூச்- அங்கலேஷ்வர், வல்சாத்- வாபி, சூரத்- நவ்சாரி, வதோதரா- ஹலோல் கலோல், மோர்வி- வங்கனெர், மெக்ஷானா காடி போன்ற ஏராளமான இரட்டை நகரங்கள் குஜராத்தின் அடையாளத்தை மேலும் வலுப்படுத்த விருக்கின்றன.

அகமதாபாத், சூரத், வதோதரா, போபால், இந்தூர், ஜெய்பூர் போன்ற நகரங்கள் அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ச்சி அந்தஸ்தை உறுதி செய்யவிருப்பதாக மோடி சுட்டிக்காட்டினார். பழைய நகரங்களை மேம்படுத்தி, விரிவுபடுத்துவதில் மேற்கொள்ளப்படும் கவனத்துடன் புதிய நகரங்கள் உலக வர்த்தக தேவைக்கேற்ப மேம்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.

கிப்ட் நகரங்கள் இந்தவகை நகரங்களுக்கு நல்ல உதாரணங்கள் என்று அவர் தெரிவித்தார்.  "நாட்டின் மெட்ரோ வரலாற்றில் முதன்முறையாக 32 கிமீ நீளம் கொண்ட ஒரு பாதை ஒரே நேரத்தில் இயக்கப் பட்டுள்ளது" என பிரதமர் கூறினார். 

ரயில்வே லைனுக்கு மேலே மெட்ரோ பாதையை அமைப்பதில் எதிர்கொள்ளப்பட்ட சவால்களுக்கு இடையில் இத்திட்டம் வெகுவேகமாக முடிக்கப்பட்டுள்ளதை  அவர் சுட்டிக்காட்டினார்.வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பற்றி கூறிய பிரதமர்,அகமதாபாத் மற்றும் மும்பை ஆகிய 2 பெரிய நகரங்களுக்கு இடையிலான பயண தூரமும், நேரமும் வெகுவாக குறையும் என்று தெரிவித்தார்.

 அகமதாபாத்தில் இருந்து மும்பையை அடைய ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் தோராயமாக 7 முதல் 8 மணி நேரத்தை எடுத்துக்கொள்ளும்.அதே சமயம் சதாப்தி ரயில் 6.30 மணி முதல் 7 மணி நேரத்தில் செல்லும். ஆனால் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் அதிகபட்சமாக 5.30 மணி நேரத்தில் காந்தி நகரில் இருந்து மும்பையை சென்றடையும் என பிரதமர் கூறினார்.

மற்ற ரயில்களை விட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்  அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். வந்தே பாரத் பெட்டிகளை வடிவமைத்த பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வியலாளர்களுடன் அவர் கலந்துரையாடினார்.

காசி ரயில் நிலையத்தில் தாம் மேற்கொண்ட கலந்துரையாடல் பற்றி  நினைவுகூர்ந்த பிரதமர், வந்தே பாரத் ரயிலுக்கு வரவேற்பு அதிகமாக இருந்ததை சுட்டிக்காட்டினார். இரட்டை என்ஜின் அரசின் பயனாக   மெட்ரோ திட்டங்களுக்கு மிக விரைவாக அனுமதி கிடைப்பதுடன், விரைவாக திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது என்று விளக்கினார்.

மெட்ரோவுக்கான பாதை திட்டம்  ஏழை எளிய மக்களின் தேவையை கருத்தில் கொண்டு செயல்படுத்தப் படுவதாகவும், கலுப்பூர் பன்னோக்கு போக்குவரத்து மையமாக  உருவாகி வருகிறது என்றும் அவர் கூறினார்.

மின் பேருந்துகளை உற்பத்தி செய்து இயக்கும் பேம் (எப்ஏம்இ) திட்டம் அரசால் தொடங்கப்பட்டுள்ளதை பிரதமர் தெரிவித்தார். இதன் மூலம் ஏழை எளிய நடுத்தரப்பிரிவு மக்கள் பேருந்துகள் வெளியிடும் புகையால் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படுவதாக தெரிவித்தார்.

நாட்டில் இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்சார பேருந்துகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக  மோடி கூறினார்.இந்த மின்சார பேருந்துகளுக்காக மத்திய அரசு ரூ.3500 கோடி செலவழித்துள்ளதாக கூறிய பிரதமர், குஜராத் மாநிலத்தில் 850 மின்சார பேருந்துகள் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதில் ஏற்கனவே 100 பேருந்துகள் இயக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.   கடந்த கால மத்திய அரசுகள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், நகரங்களில் போக்குவரத்து நெரிசல்களை தடுக்க அவை தவறிவிட்டதாக தெரிவித்தார். 21-ம் நூற்றாண்டில் விரைவான வளர்ச்சி மிக முக்கிய அம்சமாகும் என்று  கூறிய அவர், தேசிய விரைவு சக்தி பெருந்திட்டமும், தேசிய சரக்குப் போக்குவரத்து கொள்கையும்  இதற்கு முக்கிய உதாரணங்கள் என்றார்.

நமது ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்த பிரதமர், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் 75 வந்தே பாரத் ரயில்களை இயக்க திட்டமிடப் பட்டுள்ளதாக கூறினார்.  வெறும் 52 வினாடிகளில் 100 கி.மீ. வேகத்தை வந்தே பாரத் ரயில் எட்டும் என்பது அதன் முக்கிய அம்சமாகும் என்றார்.

ரயில்வே கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்துப் பேசிய பிரதமர், நாட்டின் ரயில்வே கட்டமைப்பின் பெரும்பகுதி ஆளில்லா ரயில்வே கேட்டுகளில்  இருந்து விடுவிக்கப் பட்டதை எடுத்துரைத்தார். "கிழக்கு மற்றும் மேற்கு அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு வழித்தடங்கள் தயாரானதும், சரக்கு ரயில்களின் வேகமும் அதிகரிக்கும், பயணிகள் ரயில்களின் தாமதமும் குறைக்கப்படும்" என்று மேலும் கூறினார்.

நாட்டில் உள்கட்டமைப்பு மேம்பாடு பற்றிய சிந்தனை செயல்முறையில் ஏற்பட்டுள்ள மகத்தான மாற்றங்களையும், வேகம் உந்து காரணியாக இருப்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். “கடந்த 8 ஆண்டுகளில், நாங்கள் மக்களின் விருப்பங்களுடன் உள்கட்டமைப்பை இணைத்துள்ளோம்” என்று மோடி தொடர்ந்தார்,

 “ஒரு காலத்தில் உள்கட்டமைப்பு தொடர்பான அறிவிப்புகள் தேர்தல் லாபம் மற்றும் நஷ்டங்களை மட்டுமே மனதில் கொண்டு வெளியிடப்பட்டன. வரி செலுத்துவோரின் வருமானம் அரசியல் நலன்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இரட்டை இயந்திர அரசாங்கம் இந்த எண்ணத்தை மாற்றியுள்ளது"  என்று மாற்றங்களை எடுத்துரைத்த பிரதமர், நிலையான முன்னேற்றத்தின் அடிப்படையானது வலுவான மற்றும் தொலைநோக்கு சிந்தனையுடன் கட்டப்பட்ட உள்கட்டமைப்பு என்றும், இன்று செய்யப்படும் பணிகள் இந்த சிந்தனையுடன் ஒத்துப்போகின்றன என்றும் கூறினார். 

பள்ளிகள் மற்றும் பொறியியல் துறைகளைச் சேர்ந்த மாணவர்கள், நிலத்தடி மற்றும் நிலத்தடி மெட்ரோ கட்டுமானப் பணிகள் மற்றும் அதில் மேற்கொள்ளப்படும் முதலீட்டின் வகை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமர் விருப்பம் தெரிவித்தார்.

இது நாட்டின் முன்னேற்றத்தில் தொழில்நுட்பத்தின் பங்கு மீதான அவர்களின் நம்பிக்கையை அதிகரிப்பதோடு, அவர்களுக்குள் உரிமை உணர்வையும் உருவாக்கும். இதன் மூலம் பொதுச் சொத்துக்களுக்கு ஒருபோதும் தீங்கு விளைவிக்காத ஒரு தலைமுறை உருவாகும் என்றார்.

உரையின் முடிவில், வளர்ந்த இந்தியாவை விடுதலையின் அமிர்த காலத்தில் கட்டியெழுப்பு வதற்கும் நவீன உள்கட்டமைப்பைக் உருவாக்கவும் அதிக வேகமும், சக்தியும் தேவை என்று பிரதமர் வலியுறுத்தினார். “குஜராத் மாநிலத்தில் உள்ள இரட்டை இயந்திர அரசும் இதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொருவரின் முயற்சியின் மூலம் இந்தப் பணி நிறைவேறும் என்று நம்புவதாக பிரதமர் கூறினார்.

குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், ஆளுனர் ஆச்சார்யா தேவ்விரத்,  ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, நாடாளுமன்ற உறுப்பினர் சி ஆர் பாட்டீல்,  ரயில்வே இணையமைச்சர் தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நமது செய்தியாளர் G.மோனிஷாசென்னை

அமைச்சர் மா.சுப்ரமணியனுக்கு

கா.ஜமாலுதீன் வாழ்த்து


திராவிட முன்னேற்ற கழக வேளச்சேரி பகுதி துணை அமைப்பாளர் கா.ஜமாலுதீன் சென்னை தெற்கு  மாவட்ட கழக  செயலாளரும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான மா.சுப்ரமணியனை இன்று 30.09.2022 நேரில் சந்தித்து அவரின் பணிகள்,மக்கள் நல பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

போக்குவரத்து நெரிசல்

மு.மதிவாணன் ஆய்வு


திருச்சி அரியமங்கலம் பால்பண்ணை சிக்னல் பகுதியில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை சரி செய்வது சம்பந்தமாக மண்டலம் 3-ன் தலைவரும் திருச்சி கிழக்கு மாநகர செயலாளருமான மு.மதிவாணன்,பகுதி கழகச் செயலாளர் விஜயகுமார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

நமதுநிருபர் - S.ஷமி அகமது - திருச்சி

மருந்துக்கு அப்பால்

டாக்டர்.காளிதாஸ்

தத்தாத்ரேயா சவான்

டாக்டர்.காளிதாஸ்
தத்தாத்ரேயா சவான்

கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின்
புதிய டீன் பொறுப்பேற்பு

சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐசி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் புதிய டீனாக காளிதாஸ் தத்தாத்ரேயா சவான் 27-ந் தேதி  பொறுப்பேற்று கொண்டார். 53 வயதான அவர், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர். மருத்துவமனை கல்வி மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தில் நீண்ட அனுபவம் கொண்ட அவர், தடய அறிவியலில் முதுநிலை மருத்துவப்பட்டம் பெற்றவர் ஆவார்.

நாசிக்கில் உள்ள மகாராஷ்டிரா சுகாதார அறிவியல் பல்கலைக் கழகத்தின் பதிவாளராகவும், தேர்வு கட்டுப் பாட்டாளராகவும்  நிதி மற்றும் கணக்கு அதிகாரியாகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

மருத்துவர், நோயாளி உறவுக்கான மேலாண்மை படிப்பில் திலக் மகாராஷ்டிரா வித்யா பீடத்தின் பிஎச்டி பட்டத்தையும் அவர் பெற்றுள்ளார்.ஐஐஎம் உட்பட பல்வேறு கல்வி நிறுவன படிப்புகளையும் நிறைவு செய்துள்ள அவர், மருந்துக்கு அப்பால் என்னும் நூலை எழுதியுள்ளார்.மருத்துவ துறை மற்றும் சுகாதார அறிவியல் தொடர்பானவர்களுக்கு இந்த நூல் பெரிதும் பயன்படும்.

சிறப்பு நிருபர் - R.முகமது மீரான் -  சென்னை

100 சதவீத நூலக வாசகர்கள்

தென்னூர் சுப்பையா

நடுநிலைப்பள்ளி



திருச்சி புத்தூர் கிளை நூலகத்தில் தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் நூறு சதவீத நூலக வாசகர்களாக சேரும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

திருச்சி தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தன் வரவேற்றார்.

தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை திருச்சிபுத்தூர் கிளை நூலகர் புகழேந்தி திருச்சி நகர சரக வட்டார கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணியிடம் உறுப்பினர் இரசீதினை வழங்கினார்.

புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டத் தலைவர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார்.

திருச்சி நகர சரக வட்டார கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணி பேசுகையில்,பள்ளி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் படிக்கும் பழக்கத்தினை ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும்.அவ்வகையில் நூறு சதவீத நூலக வாசகர்களை கொண்ட திருச்சி தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப் பள்ளி செயல் பாராட்டிற்குரியது.

நூலகம் தகவல், எழுத்தறிவு, கல்வி மற்றும் கலாச்சார கருப்பொருளை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.பள்ளி என்பது பாடநூல்களைக் கொண்டு அறிவை விதைக்கும் களம் ஆகும். நூலகமோ அந்த அறிவை செம்மைப் படுத்தும் மற்றொரு களமாகும். பள்ளியும் நூலகமும் இணைபிரியாதவை ஆகும். 

குழந்தைகளுக்கு இளம் பருவத்திலேயே வாசிக்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை படித்த புத்தகத்தை திறனாய்வு செய்ய வேண்டும். அந்த மாணவர்களை மாவட்டம், மாநில அளவில் தேர்வு செய்து பரிசு வழங்கி கௌரவிக்கப் படுவார்கள்.

மேலும் புத்தக செயலியை பயன்படுத்தி புத்தகத்தை வாசிக்க வேண்டும். வாசிப்பை நேசிக்க வேண்டும். கருத்துக்களை மாணவர்கள் பேசிக்க வேண்டும் என்றார்.

நமதுநிருபர் - M.முஹம்மது நியாஸ் – திருச்சி

QMASS 

காயிதே மில்லத்

ஆட்டோ ஸ்டீல் சங்க

புதிய நிர்வாகிகள்


காயிதே மில்லத் ஆட்டோ ஸ்டில் சங்கத்தின் 27வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் தேர்தல் 29/09/2022. வியாழக்கிழமை காலை 11.30.மணியளவில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள நியூ டைமன் மஹாலில் (அரிஸ்டோ A/c) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திருச்சிராப்பள்ளி மாநகர தி.மு.க.,செயலாளரும். திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயருமான மு.அன்பழகன்.M.A. கலந்து கொண்டார்.

கூட்டம் QMASS.சங்க காரியகமிட்டி தலைவர் A.அப்துல்  நிசார்.B.com.Ex.Mc.தலைமையில் நடைபெற்றது.

தற்போதுள்ள நிறுவன உறுப்பினர்கள்:

K.பஷீர் அகமது,A.அபுபக்கர்,N.சையத் இப்ராஹிம்,A.அபுதாஹிர்

காரிய கமிட்டி உறுப்பினர்கள்:

P.முகமது ஆதம்,S.தேவராஜ்,B.அப்துய் ஜலீல்,M.உபைத்துல்லாஹ்.V.G.M.மகாலிங்கம்,M.இக்பால்,K.காதர் கான்,N.ராஜ கோபால்,M.S.R.சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தலைவர் K.M.S.ரபீக் அஹமத்


துணைத் தலைவர் P.சம்பத்குமார்


செயலாளர் N.ஜாகிர் உசேன்

துணைச் செயலாளர்
M.ஜூபர் அலி அகமது

இணைச் செயலாளர்
M.ஷஹாவுதீன்

பொருளாளர் M.F.நூர் முகமது

காயிதே மில்லத் ஆட்டோ ஸ்டில் சங்கத்தின் புதிய நிர்வாகிகள்  நியமனம்

தலைவராக K.M.S.ரபீக் அஹமத்

துணைத் தலைவராக P.சம்பத்குமார்

செயலாளராக N.ஜாகிர் உசேன்

துணைச் செயலாளராக M.ஜூபர் அலி அகமது

இணைச்செயலாளராக M.ஷஹாவுதீன்

பொருளாளராக M.F.நூர் முகமது ஆகியோரும்

செயற்குழு உறுப்பினர்களாக

N.ஷேக் அலாவுதீன்,S.முகமது யூசுப்,J.சவ்கத் அலி,ஹாஜி.V.M.அக்பர் அலி,A.அப்துல் ரஹ்மான்,S.R.அயாஸ் ஷபீக் அகமது  D.பால குமார்,S.முகமது பாரூக்,S.சார்லஸ்,M.அம்மானுல்லாஹ்,A.அப்துல் ரஷீத்,S.சையத் இப்ராஹிம், K.முகமது மன்சூர்,M.முகமது நியாஸ் ஆகியோரும் நியமனம் செய்யப் பட்டனர்.  

இதனைத் தொடர்ந்து மேயருக்கும் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கும் QMASS.தலைவர் ஷீல்டுகள் வழங்கினார்.

M.F.நூர் முகமது நன்றியுரை வழங்கினார்.

நமதுநிருபர் - M.முஹம்மது நியாஸ் – திருச்சி

பெருநகர சென்னை

மாநகராட்சியின்

மாமன்றக் கூட்டம்





பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் தலைமையில்  (29.09.2022) ரிப்பன் கட்டட மாமன்ற கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் துணை மேயர் மு.மகேஷ்குமார்,அரசு முதன்மை செயலாளர் ககன்தீப் சிங்பேடி இ.ஆ.ப. நிலைக்குழு தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள்‌ உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நமதுநிருபர் - M.முஹம்மது நியாஸ் – திருச்சி

தமிழ்நாட்டில் பெகட்ரானின்

புதிய மின்னணு சாதனங்கள்

உற்பத்தி தொழிற்சாலை


பெகட்ரானின் புதிய மின்னணு சாதனங்கள் உற்பத்தி தொழிற்சாலையை மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தமிழ்நாட்டில் நாளை தொடங்கிவைக்கிறார்

மத்திய அரசின் பிரபலமான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தைவானின் மின்னணு சாதன ஜாம்பவானான பெகட்ரானின் புதிய செல்பேசி தயாரிப்பு தொழிற்சாலை சென்னையை அடுத்த செங்கல்பட்டு தொழிற் பூங்காவில் நாளை (செப்டம்பர் 30) தொடங்கப்பட உள்ளது.

இந்த நிகழ்வில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கவுரவ விருந்தினராக கலந்துகொள்வார்.2014-15-ல்  செல்பேசி உற்பத்தியின் மதிப்பு ரூ. 18,900 கோடி அளவுக்கு குறைந்திருந்த நிலையில், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டத்தின் முதல் ஆண்டுக்குள் 28 சதவீதம் அதிகரித்து, ரூ.60000 கோடி என பதிவாகியது.

தற்போது மேலும் 14 மடங்கு உயர்ந்து, ரூ.2,75,000 கோடி என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது.2015-16ல் செல்பேசி ஏற்றுமதி ஏறத்தாழ பூஜ்யம் என்ற நிலையில் இருந்தது. உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டம் போன்றவற்றால் 2019-20ல் ஏற்றுமதி மதிப்பு ரூ.27,000 கோடியை தொட்டது.

உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டத்தின் முதலாண்டிற்குள் 66 சதவீதம் அதிகரித்து, ரூ. 45,000 கோடியை எட்டியது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஏப்ரல்-ஆகஸ்ட் வரையிலான முதல் 5 மாதங்களில் செல்பேசி ஏற்றுமதி  140 சதவீதம் உயர்ந்து, ரூ.25,000 கோடியாக அதிகரித்தது.கடந்த ஆண்டு இதே காலத்தில், இந்த மதிப்பு ரூ.10,300 கோடியாக இருந்தது.

பெகட்ரான் நிறுவனம் குறித்து:

இந்த நிறுவனம் வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்கானதாகும். தகவல் தொடர்பு சாதனங்கள், கணக்கிடும் சாதனங்கள், நுகர்வோருக்கான மின்னணு பொருட்கள் ஆகியவற்றின் தொழில் நுட்பங்களில் முன்னணியில் உள்ளது.

 மின்னணு சாதனங்கள் உற்பத்தி நிறுவனங்களில் பெகட்ரான் நிறுவனம் உலக அளவிலான தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 2021-ல் பார்ச்சூன் குளோபல் 500 தரவரிசையில், 235-ஆக இந்நிறுவனம் இருந்தது.

இந்த நிறுவனம், தென்கிழக்கு ஆசியா, இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா ஆகியவற்றில் உற்பத்தி நிறுவனங்களை கொண்டுள்ளது. 2022 ஜூலை மாதத்தில் இதன் துணை நிறுவனமான பெகட்ரான் இந்தியா தொடங்கப்பட்டது.

நமது செய்தியாளர் G.மோனிஷாசென்னை

மக்களுக்காக

மத்திய அரசிடம்

157 திட்டங்கள்

எம்.அண்ணாதுரை






ஏழைகளுக்கு உதவி செய்ய அரசின் திட்டங்களை ஊடகவியலாளர்கள் அறிந்திருக்க வேண்டும்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தல்

சமூகத்தில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு உதவி செய்ய அரசின் திட்டங்களை உடகவியலாளர்கள் அறிந்திருக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கே.செந்தில்ராஜ் வலியுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடியில் செப்டம்பர் 29 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் கலந்துரையாடல் நிகழ்ச்சியை தொடங்கிவைத்த அவர், மத்திய அரசின் மக்கள் நல திட்டங்கள் குறித்த கண்காட்சியையும்  பார்வையிட்டார்.

ஊடகவியலாளர் கலந்துரையாடலில் பேசிய மாவட்ட ஆட்சியர், பேரிடர், தேர்தல், கொரோனா, வெள்ளம் போன்ற காலங்களில் பத்திரிகையாளர்கள் மிகவும் உதவியாக இருந்ததை நினைவுகூர்ந்தார்.

அரசின் மக்கள் நலத்திட்டங்கள் பல இருந்தாலும், அவற்றை தேவையானவர்களுக்கு ஊடகங்கள் மூலமாகத்தான் செல்லவேண்டும். எனவே பாதிக்கப்பட்டுள்ள ஒரு நபர் பற்றி வெளியிடும் கட்டுரை பலருக்கு பயன்படும் என்று அவர் கூறினார்.

பத்திரிக்கை சுதந்திரத்தை சரியாக பயன்படுத்த வேண்டும் என்றும், நம்மால் பொதுமக்கள் பயனடைய வேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.தன்னார்வலர்கள் செய்யும் நல்ல பணிகளை ஊடகங்கள் பாராட்டுவதன் மூலம் அவர்களை மேலும் உற்சாகப்படுத்த முடியும் என்றும் இதனால் சமூகத்தில் உள்ள பலர் பயனடைய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

மத்திய பத்திரிகை தகவல் அலுவலக  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கூடுதல் தலைமை இயக்குனர் எம்.அண்ணாதுரை பேசுகையில்,சமூக ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து ஊடகங்களிலும் மக்களிடம் தகவல்களை கொண்டு சேர்க்கும் பணிகளை பத்திரிகை தகவல் அலுவலகம் செய்துவருகிறது.மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்களை செய்தியாளர்களிடம் எடுத்துரைக்க இந்தக் கலந்துரையாடல் நடத்தப்படுகிறது என்றார்.

குழந்தைகள், பெண்கள், மாணவர்கள், முதியவர்கள், மீனவர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களுக்காக மத்திய அரசிடம் மட்டும் சுமார் 157 திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. இதன் மூலம் சுமார் 8 லட்சம் கோடி ரூபாய் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்றும் எம்.அண்ணாதுரை கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன், சென்னை பத்திரிகை தகவல் அலுவலக இணை இயக்குனர் நதீம் துஃபைல் உடனிருந்தனர்.

தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் எல்.சரஸ்வதி, மாவட்ட வேளாண் துணை இயக்குனர் கே.ஜெயசெல்வின் இன்பராஜ், மீன்வளத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன் ஆகியோர் அவரவர் துறை மூலமாக மேற்கொள்ளப்படும் மத்திய அரசு திட்டங்கள் குறித்து செய்தியாளர்களிடம் எடுத்துரைத்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர்கள் பதிலளித்தனர்.  நிகழ்ச்சியில் மத்திய கள விளம்பர அலுவலக இணை இயக்குனர் டி.சிவகுமார், கள விளம்பர அலுவலர் ஜூனி ஜேக்கப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு நிருபர் ஜே.இப்ராஹிம் - தூத்துக்குடி

விலையின்றி

சமையல் எரிவாயு

சிலிண்டர்


2022 ஆகஸ்ட் 31 வரை தமிழ்நாட்டில் சுமார் 37 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புகள் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளன: சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் தகவல்

2022 ஆகஸ்ட் 31 வரை தமிழ்நாட்டில் சுமார் 37 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புகள் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளன. சென்னை நெசப்பாக்கம் பகுதியில் பிபிசிஎல் பெட்ரோல் நிலையம் அருகே செப்டம்பர் 29 நடைபெற்ற நிகழ்ச்சியில் 20 பெண் பயனாளிகளுக்கு இந்த திட்டத்தின் மூலம் சமையல் எரிவாயு இணைப்புகளை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணையமைச்சர் ராமேஸ்வர் தெலி வழங்கினார்.

இந்திய எண்ணெய் கழகம் 19,21,340 இணைப்புகளையும், இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் 9,42,521 இணைப்புகளையும், பிபிசிஎல் 8,12,293 இணைப்புகளையும் வழங்கியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

2021-22 நிதியாண்டில் 62,06,748 சமையல் எரிவாயு  சிலிண்டர்கள் வாங்க தமிழ்நாட்டில்  பிரதமரின்  உஜ்வாலா திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில்  ரூ.413.90 கோடி எண்ணெய் நிறுவனங்கள் மூலம் மத்திய அரசால் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

பெண்களின் சுகாதார பாதுகாப்பை கருத்தில் கொண்டு சமையலறையின் புகையிலிருந்து அவர்களை விடுவிக்கும் வகையில் விலையின்றி சமையல் எரிவாயு சிலிண்டர்களை  விநியோகிக்கும்  பிரதமரின் உஜ்வாலா திட்டம் 2016 மே 1 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டதை அவர் நினைவுகூர்ந்தார்.

நெசப்பாக்கத்தில் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) நிரப்பும் நிலையத்தையும், விற்பனையையும் அமைச்சர் ராமேஸ்வர் தெலி தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில்  இந்திய எண்ணெய் கழகத்தின் செயல் இயக்குனரும்,  மாநிலத்தில் உள்ள எண்ணெய் நிறுவனங்களின் தலைவருமான வி.சி அசோகன், இந்திய எண்ணெய் கழகத்தின் தென் மண்டல செயல் இயக்குனர் கே.சைலேந்திரா,பிபிசிஎல் தென் மண்டல சில்லரை விற்பனை பிரிவு தலைவர் புஷ்ப குமார் நய்யார், எச்பிசிஎல் மண்டல தலைவர் சஞ்சய் மாத்தூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக சிபிசிஎல் விரிவாக்க திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ராமேஸ்வர் தெலி ஆய்வு செய்தார்.எண்ணூர் பகுதியில் உள்ள காமராஜர் துறைமுகத்தில், ரூ.900 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இந்திய எண்ணெய் கழகத்தின் பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கான துணை துறைமுகப் பணிகளை அமைச்சர் பார்வையிட்டார்.  இந்த துணை துறைமுகம் ஆண்டுக்கு 2 மில்லியன் மெட்ரிக் டன்  சரக்குகளை கையாளும் திறன்கொண்டதாகும்.

வல்லூர் முனையம் மற்றும் சிபிசிஎல் நிறுவனங்களை குழாய் மூலம் இந்த துணைத்துறைமுகம் இணைப்பதாக இருக்கும். இந்த துணைத் துறைமுகம் 2025-ல் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மணலி பகுதியில் உள்ள ஆமுல்லைவாயல் கிராமத்தில் 71 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டு வரும்   ஒருங்கிணைந்த உயவு எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை வளாகத்தின் கட்டுமான பணிகளையும் ராமேஸ்வர் தெலி பார்வையிட்டார்.

ரூ.1400 கோடி செலவில்  அமைக்கபடவுள்ள இந்த தொழிற்சாலை ஆண்டுக்கு 680 ஆயிரம் மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்டதாகும்.இது அடுத்த ஆண்டு செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டங்களின் மூலம் அருகில் உள்ள பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான திறன் மிகுந்த மற்றும் திறன் குறைந்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

சிறப்பு நிருபர் – R.முகமது மீரான் -  சென்னை

இலங்கை துறைமுகத்திற்கு

செல்லும் கப்பல்

தூத்துக்குடிக்கு வரும்

எம்.அண்ணாதுரை






துறைமுக மேம்பாட்டுப் பணிகள் பொருளாதார வளர்ச்சிக்கு பயனுடையதாக அமையும்

தூத்துக்குடி துறைமுகத்தில் பல்வேறு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என மத்திய பத்திரிகை தகவல் அலுவலக தமிழ்நாடு புதுச்சேரி கூடுதல் தலைமை இயக்குனர் எம்.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் மக்கள் நல திட்டங்களை  பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில்  தூத்துக்குடியில் ஊடகவியலாளர்களுடன்  கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்தார்.

பின்னர் தூத்துக்குடியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை ஊடகவியலாளர்கள் நேரடியாக பார்வையிட்டனர். துறைமுகத்தில் உள்ள ஒன்பதாவது சரக்கு தளம்,சரக்கு பெட்டக தளம், கப்பல் நுழைவாயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகள் பற்றி துறைமுக போக்குவரத்து அலுவலர்கள் விவரித்தனர்.

மிகப் பெரிய அளவிலான கப்பல்களை கையாளும் வகையில் துறைமுகத்தில் மிதவையானம் அதிகரிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி துறைமுகத்தை சரக்கு பெட்டக மையமாக மாற்றும் வகையில், தொலைநோக்கு அடிப்படையில்  பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பணிகளை மேற்கொள்வதன் மூலம் இலங்கை துறைமுகத்திற்கு செல்லும் கப்பல்களில் பெரும்பாலானவை தூத்துக்குடிக்கு வரும் வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

சிறப்பு நிருபர் ஜே.இப்ராஹிம் - தூத்துக்குடி

200 பெண்களுக்கு

சீர் வரிசை

MLA அ.ஜெ.மணிகண்ணு

வழங்கினார்


திருநாவலூரில் தமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் உளுந்துருப்பேட்டை  MLA அ.ஜெ.மணிகண்ணு பங்கேற்று 200 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சீர் வரிசைகளை வழங்கினார்.

நமது நிருபர்R.வேல்முருகன் - கள்ளக்குறிச்சி

தேசிய விளையாட்டு

விருதுகள் 2022

கடைசி தேதி நீடிப்பு

தேசிய விளையாட்டு விருதுகள் 2022-க்கான கடைசி தேதியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் அக்டோபர் 1 வரை நீடித்துள்ளது.

மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது, அர்ஜூனா விருது, துரோணாச்சார்யா விருது, தியான் சந்த் விருது,  தேசிய விளையாட்டு ஊக்குவிப்பு விருது, 2022-ம் ஆண்டுக்கான மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோப்பை ஆகியவற்றுக்கு 2022 ஆகஸ்ட் 27 அன்று மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் அமைச்சகம் விண்ணப்பங்களை வரவேற்றிருந்தது.

இதற்கான அறிவிப்பு  அமைச்சகத்தின் www.yas.nic.in என்ற இணையதளத்தில்  பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  விண்ணப்பங்கள் அனுப்புவதற்கான கடைசி தேதி 2022 செப்டம்பர் 27 என்பதிலிருந்து 2022 அக்டோபர் 1–க்கு (சனிக்கிழமை) நீடிக்கப்பட்டுள்ளது.

தகுதியுள்ள விளையாட்டு வீர்ர்கள் / பயிற்சியாளர்கள் / அமைப்புகள் / பல்கலைக்கழகங்கள் இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கென்றே உருவாக்கப்பட்டுள்ள dbtyas-sports.gov.in என்ற இணையப்பக்கத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளனர்.

அக்டோபர் 1-க்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப் படமாட்டாது.

நமது செய்தியாளர் G.மோனிஷாசென்னை

சட்டவிரோத இணையதளம்

அரசுக்கு வருவாய் இழப்பு

சர்வதேச அழைப்புகளுக்காக அமைக்கப்பட்ட சட்டவிரோத தொலைத்தொடர்பு கட்டமைப்பை தொலைத்தொடர்புத் துறை கண்டுபிடித்துள்ளது.

இந்தியாவில் உள்ள உள்நாட்டு மொபைல் மற்றும் வயர்லைன் வாடிக்கை யாளர்களுக்கு சர்வதேச அழைப்பு வசதியை அளிப்பதற்காக சட்டவிரோதமாக இணையதளம் மூலம் தொலைத் தொடர்பு கட்டமைப்பு அமைக்கப்பட்டதை தொலைத்தொடர்பு துறை கண்டுபிடித்துள்ளது.

இதுபோன்ற சட்டவிரோதமான கட்டமைப்பு நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலையும், அரசுக்கு வருவாய் இழப்பையும் ஏற்படுத்தும்.கடந்த 4 மாதங்களில் 30 சட்டவிரோத தொலைத்தொடர்பு அமைப்புகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

இதுபோன்ற, சட்டவிரோத தொலைத் தொடர்பு அமைப்புகள் இருப்பது தெரியவந்தால், பொதுமக்கள் 18001104204/1963 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு  புகார் அளிக்கலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நமது செய்தியாளர் G.மோனிஷாசென்னை

பகத் சிங் பிறந்த தினம்

பிரதமர் தலைவணக்கம்

தியாகி பகத் சிங் பிறந்த தினத்தையொட்டி அன்னாருக்கு பிரதமர் தலைவணங்கினார்



தியாகி பகத் சிங் பிறந்த தினத்தையொட்டி அன்னாருக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைவணங்கினார். தியாகி பகத் சிங் குறித்து தமது எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ள வீடியோ பதிவையும் பிரதமர் பகிர்ந்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;  “தியாகி பகத் சிங் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி, அவருக்கு நான் தலைவணங்குகிறேன். அவருடைய துணிச்சல், நமக்கு அதிக உத்வேகத்தை அளிக்கிறது. நமது நாடு குறித்த அவரது தொலைநோக்குப் பார்வையை நனவாக்க, நாம் உறுதியேற்போம்.”

நமது செய்தியாளர் G.மோனிஷாசென்னை

PVC பூட்ஸ் பற்றிய

கலந்துரையாடல்

நிகழ்ச்சி

தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் PVC பூட்ஸ் பற்றிய திருத்தியமைக்கப்பட்ட இந்திய தரநிலைகள் கலந்துரையாடல்




இந்திய தர நிர்ணய அமைவனம் சார்பில் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் PVC பூட்ஸ் பற்றிய திருத்தியமைக்கப்பட்ட இந்திய தரநிலைகள்” குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று நடந்தது.   

நிகழ்ச்சியில் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி மோகன், இந்திய தர நிர்ணய அமைவனத்தின் விஞ்ஞானிகள், ஜோஸ் சார்லஸ், பானு கிரண் கலந்து கொண்டனர்.

சிமெண்ட், உணவு பதன தொழில்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு தொழிற்சாலைகளில் பணியாற்று பவர்களுக்காக பிவிசி பூட்ஸ் பரிந்துரைக்கப் படுகிறது. இத்தகைய பூட்ஸ்களில் தடிமன், ஏற்ற இறக்கம் போன்ற பல தேவைகளுக்கான மதிப்புகள் மாற்றியமைக்கப்பட்டு, செயல்திறன் மற்றும் குளிர் நெகிழ்வு எதிர்ப்பிற்கான கூடுதல் தேவைகள் அறிமுகப் படுத்தப்பட்டன.

மத்திய காலணி பயிற்சி நிறுவனம் (CFTI), காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (FDDI), இத்தகைய பூட்ஸ்களை பயன்படுத்தும் தொழிற்சாலைகள் ஆகிய பல்வேறு அமைப்புகளில் இருந்து பலர் கலந்து கொண்டனர். மூலப்பொருள் தேவைகள் முதல் சோதனை வரை தரநிலையின் விவரக்குறிப்புகள் விவாதிக்கப்பட்டன.

நமது செய்தியாளர் G.மோனிஷாசென்னை

இஸ்லாமிய

கூட்டமைப்பின் கூட்டம்

K.M.K.ஹபீப் ரஹ்மான்

தலைமை

திருச்சி இஸ்லாமிய கூட்டமைப்பின் அனைத்து கட்சிகள் இயக்கங்களின் கூட்டம் கூட்டமைப்பின் தலைவர் K.M.K.ஹபீப் ரஹ்மான் தலைமையில் இன்று 28.09.2022 நடைபெற்றது.




இஸ்லாமிய கூட்டமைப்பின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் இமாம் R. அப்துல்லாஹ் ஹஸ்ஸான் பைஜி MBA,LLB மற்றும் உதுமான் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அக்டோபர் 2 அமைதி பூங்காவான திருச்சியில் RSS ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கக் கூடாது என்று  இக்கூட்டமைப்பு  வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. மேலும் திருச்சி காவல் ஆணையரை நேரில் சந்தித்து இது சம்பந்தமாக மனு அளிப்பது என்று இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அவர்கள் செல்லும் பாதைகளில் பெரும்பாலான இடங்களில் பள்ளிவாசல்களும்,  வியாபார ஸ்தலங்களும் குடியிருப்புகளும் இருப்பதால் கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில் மக்களுக்கு இந்த ஊர்வலத்தின் மூலம் அச்ச நிலை ஏற்பட்டிருக்கிறது.

எனவே மக்களின் இந்த அச்சத்தையும், திருச்சியை அமைதி பூங்காவாக தொடர்வதற்கும் காவல்துறை இந்த பேரணியை  உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

 இந்த கூட்டத்தில் திருச்சி மாவட்ட அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் அரசியல் கட்சிகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

நமதுநிருபர் - M.முஹம்மது நியாஸ் – திருச்சி

மத்திய அரசு

பணியாளர் தேர்வு

இலவச பயிற்சி


மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (STAFF SELECTION COMMISSION) மூலம் உதவி தணிக்கை அதிகாரி (Assistant Audit Officer), உதவி கணக்கு அதிகாரி (Assistant Account Officer), உதவி பிரிவு அதிகாரி (Assistant Section Officer), தணிக்கையாளர்(Auditor), ஆய்வாளர் (Central Bureau of Narcotics), வருமான வரித்துறை ஆய்வாளர்(CBDT) உள்ளிட்ட சுமார் 20,000 பணியிடங்களுக்கு இளநிலை பட்டப்படிப்பு அளவிலான சார்நிலைத் தேர்விற்கான(Combined Graduate Level Examination) அறிவிப்பாணை 17.09.2022 அன்று வெளிவந்துள்ளது.

இப்பணியிடங்களுக்கு இளங்கலை பட்டப்படிப்பு கல்வித்தகுதி உடைய வேலை நாடும் இளைஞர்கள் இணையவழியில் (www.ssc.nic.in) 08.10.2022 வரை விண்ணப்பிக்கலாம், இப்போட்டித்தேர்விற்கு நேரடி இலவச பயிற்சி வகுப்பு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் 29.09.2022 அன்று முதல் துவங்கப்படவுள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள, திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த, போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் வேலை நாடுநர்கள் அனைவரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

நமதுநிருபர் - M.முஹம்மது நியாஸ் – திருச்சி

பயிர் காப்பீடு செய்ய அறிவிப்பு

ஆட்சியர் தகவல்


திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், நடப்பு 2022-23ஆம் ஆண்டு ரபி சிறப்பு பருவத்தில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்த அரசு ஆணை பெறப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் வருவாய் கிராம அளவில் நெல்-II, பிர்கா அளவில் மக்காச்சோளம்-II மற்றும் பருத்தி-II பயிர்களுக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து வருகின்றனர்.

மேலும், நெல்- II, மக்காச்சோளம்-11 மற்றும் பருத்தி-II பயிர்களை பயிர் காப்பீடு செய்ய, வரும் நவம்பர் 15-ஆம் தேதி கடைசி நாளாகும். விவசாயிகளின் நலன்கருதி தங்களது பயிர்களை பயிர் காப்பீடு செய்து கொள்ள ஏதுவாக இம்மாவட்டத்திலுள்ள அனைத்து பொது சேவை மையங்களும் (08.11.2022) முதல் (15.11.2022) வரை 24 மணி நேரமும் செயல்பட மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இத்திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் (குத்தகைதாரர் உட்பட) பயிர் காப்பீடு செய்யலாம். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் பயிர் கடன் பெறும் விவசாயிகள் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் விருப்பத்தின் பேரில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேரலாம்.

இத்திட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய முன்மொழி படிவம், விண்ணப்ப படிவம், பயிர் சாகுபடி அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல் ஆகிய ஆவணங்களுடன், அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பொது சேவை மையங்களை அணுகலாம். மேலும் தகவலுக்கு, அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகவும்.

இத்திட்டத்தில், நெல் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு பிரீமியமாக ரூ.558/-, பருத்தி பயிருக்கு ஒரு ஏக்கருக்கு பிரீமியமாக ரூ.566/- மற்றும் மக்காச் சோளம் பயிருக்கு ஒருஏக்கருக்கு பிரீமியமாக ரூ.388/- செலுத்தி பயிர் காப்பீடு செய்யலாம்.

அறிவிக்கப்பட்ட இறுதி நாளுக்கு முன்பாக வெள்ளம் மற்றும் புயல் ஏற்படும் பட்சத்தில் பயிர் சேதம் அடைந்தால் பயிர் காப்பீடு செய்ய அன்றே இறுதி நாளாகும்.

எனவே, விவசாயிகள் அனைவரும் பயிர் காப்பீடு செய்ய இறுதி நாள் வரை காத்திருக்காமல் உடனடியாக நெல், மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்து பயன்பெறுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி