பத்திரிகையாளர் ஜி.அப்துர் ரஹீம் மரணம் சிராஜுல்ஹஸன் இரங்கல்

பத்திரிகையாளர்
ஜி.அப்துர் ரஹீம்

அன்பு நண்பரும், ஆழமான பேச்சாளரும், சிறந்த மொழிபெயர்ப்பாளரும், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் இயக்கத்தின்  சென்னை மாநகரத் தலைவராகவும் இருந்து அரும்பணியாற்றிய ஜி.அப்துர் ரஹீம் இறப்பெய்தினார் எனும் செய்தி பெரும் துயரத்தை அளித்தது.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..

 சமரசத்திற்கு ‘விடியல்’ தந்தவர்

சமரசம், மானுட வசந்தம் போன்ற இயக்கத்தின் ஊடகப் பிரிவுகள்  ஒரு கூரையின் கீழ் இயங்கவேண்டும் என்பதற்காக “கிரியேடிவ் கம்யூனிகேஷன் சென்னை”(CCC) எனும் துணை நிறுவனம் தனி சட்ட திட்டங்களுடன் உருவாக்கப்பட்டது.

CCC  தலைமை நிர்வாகியாக ஜி. அப்துர் ரஹீம் அவர்கள் நியமிக்கப்பட்ட பிறகுதான் சமரசம் அலுவலகத்திற்கு விடிவு காலம் பிறந்தது.

ஒரு பத்திரிகை அலுவலகத்திற்குத் தேவையான எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்த எங்களுக்கு அவருடைய வருகை புது நம்பிக்கை அளித்தது.

முதலில் அரதப் பழசான கணினிகளை எல்லாம் அகற்றிவிட்டு சமரசம் ஊழியர்கள் அனைவரின் மேசைகளிலும் நவீன கம்யூட்டர்கள் இடம்பெறச் செய்தார்.

ஆசிரியர்குழுவின் செயல்பாடுகள் அனைத்தையும் கணினிமயம் ஆக்கினார்.பத்திரிகையின் தாள் கொள்முதல், கணக்கு வழக்குகள், சந்தா விவரங்கள் போன்ற அனைத்தையும் கணினியில் பதிவேற்றம் செய்ய வைத்தார்.

என் எழுத்துப் பணிக்கும் உறுதுணையாக இருந்தார்.

மாபெரும் இஸ்லாமியச் சிந்தனையாளர்  மௌலானா  மௌதூதி அவர்கள் கிட்டத்தட்ட 75ஆண்டுகளுக்கு முன்பு, தம்முடைய “தர்ஜுமானுல் குர்ஆன்” இதழில் வாசகர்களின் வினாக்களுக்கு விடையளித்து வந்தார்.

அறிவுக் கருவூலமாய் விளங்கிய அந்தக் கேள்வி- பதில்களை மொழிபெயர்த்து சமரசத்தில் வெளியிட வேண்டும் என்று தீர்மானித்தோம். மொழியாக்கப் பொறுப்பைத் தாமே முன்வந்து ஏற்றுக்கொண்டார் அப்துர் ரஹீம் அவர்கள்.

இவர் சென்னை மாநகரத் தலைவராக இருந்தபோதுதான்  இயக்கம் மாநகரின் பல இடங்களிலும் அறிமுகம் ஆகியது. 

மாநகரப் பணிகளுக்கென்று தனியே அலுவலகம் அமைக்க வேண்டிவந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இஸ்லாமிய வாழ்வியலை ‘ஊருக்கு உபதேசம்’ என்கிற அளவில் இல்லாமல் தம் தனிப்பட்ட வாழ்விலும் கடைப்பிடித்தார். 

அஸர் தொழுகைக்குப் பிறகு,  தம் மகனின் திருமணத்தை மிக எளிய முறையில் பள்ளிவாசலில் நடத்தினார்.ஓர் இனிப்பு, ஒரு சமோசா, ஒரு கோப்பை தேநீர்- அவ்வளவுதான் விருந்து. திருமணம் நிறைவுபெற்றது.

இஸ்லாமிய இயக்கத்திற்குத் தன்னலமற்று அவர் ஆற்றிய பணிகளையும், எதிர்கொண்ட சோதனைகளையும் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.இயக்க நிகழ்ச்சியில்தான் அவருடைய இறுதிமூச்சும் பிரிந்திருக்கிறது.

இன்னொரு முக்கியமான செய்தி- அவர் மார்க்கத்தைத் தழுவியவர்.ஜி.அப்துர் ரஹீம் அவர்களை வல்ல இறைவன் தன் நல்லடியார்கள் குழுவில் இணைத்து, உயர் சுவனப் பேறுகளை வாரி வழங்குவானாக.

அவரைப் பிரிந்துவாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இயக்கத் தோழர்களுக்கும் இறைவன் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக.

இவ்வாறு சிராஜுல்ஹஸன் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தகவல் - இளையான்குடி M.ஷாஜஹான் 

ஆசிரியர் - மறுமைவெற்றி&உண்மைஉணர்வு மாத இதழ்கள்

Share To:

IBINEWS

Post A Comment:

0 comments so far,add yours