09/19/22

காங்கிரஸ் கட்சியின்

தலைவராக ராகுல் காந்தி

கேஸ் எஸ் அழகிரி

தலைமையில் தீர்மானம்





இன்று 19.09.2022 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுக்குழு கூட்டம் சென்னை வேப்பேரி ஒய்.எம்.சி.ஏ.அரங்கத்தில் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டியின்  தலைவர் கேஸ் எஸ் அழகிரி தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாட்டடிலிருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் 652 பேர் பங்கேற்றனர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியை தேர்ந்தெடுப்பதாக ஒருமனதாக  தீர்மானம் நிறைவேற்றினர்.

தகவல் - S.A.N.K.S.நகீப்கான் - துணை ஆசிரியர் - IBI NEWS

மூன்றாம் முழுமைத்‌‌ திட்டம் (2027-2046)

மேயர் பிரியா ராஜன்

துவங்கி வைத்தார்







தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, தமிழ் நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை  - சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் மூன்றாம் முழுமைத்‌‌ திட்டம் (2027-2046) தொலைநோக்கு ஆவணம் தயாரித்தலின் திட்ட தொடக்கப் பயிலரங்கத்தினை‌ அமைச்சர் பெருமக்களுடன் இணைந்து துவங்கி வைத்தார் சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன்.

தா.மோ.அன்பரசன்,மாதவரம் எஸ் சுதர்சனம் MLA வாழ்த்துரைத்தனர். சிறப்புமிக்க இந்நிகழ்வில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு முதன்மை செயலாளர் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் உயர் அலுவலர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி

தோபா கல்லூரியின் 65-வது

பட்டமளிப்பு விழா 2022 செப்டம்பர் 20

அன்று நடைபெறவுள்ளது

மத்திய தகவல், ஒலிபரப்பு மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு உரை நிகழ்த்துவார்..

தோபா கல்லூரியின் நிர்வாகக் குழுத் தலைவர் சந்தர மோகன் சிறப்புரை ஆற்றுவார். கல்லூரி முதல்வர் டாக்டர். பர்தீப் பண்டாரி ஆண்டறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்.

தோபா கல்லூரி, தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் + தர சுழற்சி-II அங்கீகாரம் பெற்றது. தோபா கல்லூரி தொடர்ந்து பல்வேறு முன்னேற்றங்களை செய்து வருகிறது. பல்கலைக் கழக மானியக் குழு இந்த கல்லூரிக்கு சிறந்த திறன் கொண்ட கல்லூரி என்ற தகுதியை வழங்கியுள்ளது.

2017-ஆம் ஆண்டில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் இந்தக் கல்லூரிக்கு நட்சத்திர கல்லூரி என்ற அந்தஸ்தை வழங்கியுள்ளது. 81 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கல்லூரி தரமான கல்வியை பயிற்றுவித்து வருகிறது.

மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின்கீழ், கல்லூரி சமூக வானொலி ராப்தா 90.8- தொடங்கி, வெற்றிகரமாக நடத்தி வரும் தோபா கல்லூரி ஒரு சிறந்த இடத்தை பெற்றுள்ளது.

நமது நிருபர் - G.மோனிஷா - சென்னை

மாவட்ட ஆட்சியரிடம்

மாணவர்கள் மனு




இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் மூலமாக மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டதாவது தமிழக அரசு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை (ஸ்காலர்ஷிப்) வழங்கப்படுகிறது.

அந்த தொகை வழங்கப்படுவதற்கு வங்கியின் உடைய பாஸ்புக் மிகவும் அவசியம். ஆனால் தற்போது மாணவர்கள் வங்கியில் கணக்கு துவங்க வேண்டும் என்று சொன்னால் குறைந்தபட்ச தொகையாக ரூபாய் 1000/- வைப்புத் தொகையாக (டெபாசிட்) இருக்க வேண்டும் என்று கட்டாயபடுத்துகின்றது.

இதை சற்று வசதி உள்ளவர்கள் கொடுத்து விடுவார்கள். இல்லாத மாணவர்கள் இன்னும் வங்கி கணக்கு துவங்காமல் இருக்கின்றனர்.ஆகையால் மாணவர்களுக்கு கட்டாயப்படுத்துகின்ற வைப்புத் தொகை ரூபாய் 1000/- இல்லாமல் "0"பேலன்ஸில் வங்கி கணக்கு துவங்க உதவி செய்யுமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி

 தமிழ் மொழி உலகின்

தொன்மையான மொழி

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

தமிழ் மொழி உலகின் தொன்மையான மொழி, தாய் மொழியில் பயின்றால்தான் அறிவை வளர்க்க முடியும்: காந்தி கிராம் கிராமிய பல்கலைக்கழக விழாவில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சு




உலகின் தொன்மையான மொழி தமிழ் மொழி என்றும், தாய் மொழியில் பயின்றால்தான்  அறிவு வளரும் என்றும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே உரையாற்றிய அவர், 200 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்கள் ஆண்டபோது, கட்டடக்கலைப் படிப்பு இல்லைஎனினும், சிறந்த ஆளுமை, படைப்புத்திறன் காரணமாக அவர்கள் பல கட்டடங்கள் மற்றும் கோவில்களை உருவாக்கியதாக தெரிவித்தார்.

தாய்மொழிக் கல்விதான் அதிக பலன் தரும் என்று கூறிய அவர், பிரதமரி்ன் தனிப்பட்ட ஆர்வம் காரணமாக பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் இருக்கை தொடங்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

பின்னர் பேசிய மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை இணை  அமைச்சர் எல் முருகன், தென்தமிழகத்தைத் தவிர்த்து சுதந்திரப் போராட்ட வரலாற்றை எழுத முடியாது என்றார்.

தமிழகத்தில்தான் சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திடப்பட்டது என்று கூறிய அவர், இதில் திருநெல்வேலி, முக்கிய பங்கு வகித்ததாகத் தெரிவித்தார்.மகாகவி பாரதியார் வழியில், பிரதமர் செயல்பட்டு வருவதாகக் கூறிய அவர்,பெண்களின் சக்தி நாட்டின் சக்தி, பெண்களின் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றம் என்ற அடிப்படையில் பிரதமர் செயல்பட்டு வருவதாகக் கூறினார்.

2047ஆம் ஆண்டு 100-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் போது நாடு வளர்ச்சி அடைந்தாக இருக்க வேண்டும் என்ற நோக்கில்  பிரதமர் செயல்பட்டு வருவதாகவும், எல் முருகன் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக வேந்தர் அண்ணாமலை, துணை வேந்தர் (கூடுதல் பொறுப்பு) குர்மீத் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக சுதந்திர தின அமிர்தப் பெருவிழாவை முன்னிட்டுகாந்தி கிராம் கிராமியப் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியார், ஜான்சி ராணி, மருது சகோதரர்கள், ராணி மங்கம்மாள், வீரபாண்டிய கட்டபொம்மன் உட்பட 40 தமிழக சுதந்திரப் போராட்ட தலைவர்களின் புகைப்படக் கண்காட்சி மற்றும் சுதந்திரப் போராட்டம் தொடர்பான ஒலி-ஒளிக் காட்சியை அமைச்சர் தர்மேந்திர பிரதான் திறந்து வைத்து பார்வையிட்டார்.

பின்னர் காந்தி அருங்காட்சியகத்தையும் அவர் பார்வையிட்டார். மத்திய அமைச்சர் எல் முருகன் உடனிருந்தார்.நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த அமைச்சர்களை மாவட்ட ஆட்சியர் விசாகன், காவல் துறை  கண்காணிப்பாளர் .பாஸ்கரன் ஆகியோர்   வரவேற்றனர்.

நமது நிருபர் - G.மோனிஷா - சென்னை

திருச்சி ராணுவ அங்காடியில

தீ விபத்து பல லட்சம் மதிப்பிலான

பொருட்கள் எரிந்தது



திருச்சி மத்திய பேருந்து அருகே உள்ள மேஜர் சரவணன் சாலையில் ராணுவ பல்பொருள் அங்காடி உள்ளது. இங்கு மதுபானங்கள் மிக்சி கிரைண்டர் மின்விசிறி மற்றும் வீடுகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது. ஓய்வு பெற்ற ராணுவத்தினர் மாதந்தோறும் தங்களுக்கு தேவையான பொருட்களை அடையாள அட்டை காண்பித்து வாங்கி செல்வார்கள் .

இந்நிலையில்  அங்காடியில் ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டது  இதில் தீ வேகமாக பரவி பொருட்கள் எரிய தொடங்கின. இதைக் கண்ட ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து வந்து கண்டோன்மெண்ட் தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணிகள் ஈடுபட்டனர். இந்த பல்பொருள் அங்காடி அருகே புத்தகத் திருவிழா மைதானத்தில் நிறுத்தப்பட்டு இருந்த தீயணைப்பு வாகனமும் அங்கு வரவழைக்கப்பட்டு தீ அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

சிறிது நேரத்தில் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. அதற்குள் அங்காடியிலிருந்த பல பொருள்கள் எரிந்து சாம்பலாயின. இந்த சம்பவம் குறித்த கண்டன்மென்ட் போலீசார் விசாரணை நடத்திய முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.

நமதுநிருபர்- K.ஷாகுல் ஹமீது - திருச்சி

ஆல் இந்திய பேக் வேர்டு

அண்டு மைனாரிட்டி கவுன்சில்

17-வது மாநில மாநாடு







ஆல் இந்திய பேக் வேர்டு அண்டு மைனாரிட்டி கவுன்சில்  (BAMCEF)சார்பாக 18.09.2022 ஞாயிற்றுகிழமை காலை 11.00 மணியளவில் திருச்சி மாவட்டம் சுமங்கலி மகாலில் நடைபெற்ற 17-வது மாநில மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் K.M.K.ஹபீபுர் ரஹ்மான் கலந்துகொண்டு மக்களுக்கு மத்திய அரசாங்கத்தின் அநீதி குறித்து கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.

நிகழ்வில் முஸ்லிம் யூத் லீக் மாவட்ட துணைத் தலைவர் ஹாஜி. S.ஷேக் முஹம்மது கௌஸ் மற்றும் பேராசிரியர் M.மொய்தீன் அப்துல் காதர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி

திராவிட மாடல் என்பது தீண்டாமை

திருச்சியில் சீமான் பேட்டி


2018 ஆம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் மதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதல் சம்பந்தபட்ட  காவல்துறை தரப்பில் பொது சொத்தை சேதப்படுத்தியதற்கான தொடுக்கப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகிறார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் சங்கரன்கோவில் பாஞ்சாங்குளம் சம்பவம் குறித்து கேட்டதற்கு திராவிட மாடல் என்பது தீண்டாமை. திராவிட மாடல் ஆட்சியில் இதுதான் நடக்கும்.

தேசிய கல்வி கொள்கை வந்தால் மாநிலத்தில் உள்ள அனைத்து மொழிகளும் அழிந்துவிடும். புதிய கல்விக் கொள்கை என்பது குழந்தைகளின் மரண சாசனம் என அறிஞர்களே குறிப்பிட்டு விட்டனர். மூன்றாம் வகுப்பில் இருந்து பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நீட் தேர்வு என அனைத்திற்கும் தேர்வை எழுதுகின்றனர். ஆனால் நாட்டை ஆளும் பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் எந்த தேர்வும் எழுதுவதில்லை. நீட் தேர்வுக்கு முன் தேர்வு எழுதி மருத்துவர்கள் தகுதியானவர்கள் தானே. நீட் தேர்வில் வட மாநிலங்களில் முறைகேடு செய்து எழுதுவதாக குற்றம் சாட்டினர்.

மனுதர்மத்தில் எழுதி இருந்ததை தான் ஆ.ராசா குறிப்பிட்டார். அதில் இந்துக்களை இழிவாக பேசி உள்ளதை குறிப்பிட்டார். மனுதருமத்தில் இருப்பதை எடுத்துரைத்தார் என்றார். நாம் தமிழர் கட்சி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் சந்திக்க தயாராக உள்ளோம். 

உலகிலேயே மிக தொன்மையானது பழமையானது தமிழ் மொழி என பிரதமரே தாய்மொழி தமிழை குறிப்பிட்டுள்ளார். அப்ப தாய்மொழி தமிழை அனைவரும் கற்க வேண்டும். அப்படி இருக்கும் போது எதற்கு ஹிந்தி படிக்க வேண்டும் என கூறினார். இந்த வழக்கு தொடர்பாக அடுத்த மாதம் 18ஆம் தேதி மீண்டும் சீமான் ஆஜராக வேண்டும் என நீதிபதி பாபு உத்தரவிட்டார்

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி

TALAM SHOP வழங்கும்

உற்பத்தியாளர்களின் மாபெரும்

நேரடி நுகர்வோர் பொருட்காட்சி





TALAM SHOP வழங்கும் தமிழக சிறு குறு உற்பத்தியாளர்களின் நேரடி விற்பனை பொருட்காட்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று தொடங்கியது. இந்த பொருட்காட்சியை திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இந்த பொருட்காட்சியில் 50 உற்பத்தியாளர்கள் மற்றும் உணவுப் பொருள்கள் கைவினைப் பொருள்கள் அழகு சாதனப் பொருள்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் என 500 பொருட்கள் காட்சிப் படுத்தப் பட்டிருந்தன.

இதில் குறிப்பாக பெண்களுக்கான சிறப்பு சமையல் போட்டி நடைபெற்றது. சிறப்பு விருந்தினர் சன்.டி.வி மாஸ்டர் சீஃப் டைட்டில் வின்னர் தேவகி, அடுப்பில்லா சமையல் ஆரோக்கியத்துக்கான முதல் வழி குறித்து எடுத்துரைத்தார்.

மேலும் குழந்தைகளுக்கான உள் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் சான்றிதழ்களுடன் பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஜெயரங்கா ஆயுஷ் மருத்துவமனை சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

இப்பொருட் காட்சியில் பொருள்கள் வாங்கும் ஒரு நபருக்கு குலுக்கல் முறையில் ஒரு குடும்பத்திற்கான பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள கேரளா டூர் பாக்கேஜ் வழங்கப்பட்டது.

இதுவரை நாம் பயன்படுத்திடாத பலவகையான ஆரோக்கியத்திற்கு தேவையான பொருட்கள், புதுமையான பொருட்கள் உங்கள் நிறுவன பெயரில் விற்கவும், சில்லறையாகவும், மொத்தமாகவும் மற்றும் ஏற்றுமதி செய்யப்பட்டது.

நமதுநிருபர்- K.ஷாகுல் ஹமீது - திருச்சி

திருச்சியில் நாளை (20.09.2022)

மின்நிறுத்தம் செய்யப்படும்

பகுதிகள்


திருச்சி வாழவந்தான் கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (20.09.2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை காலை 9:45 மணி முதல் பகல் 2 மணி வரை ஜெய் நகர் திருவேங்கடநகர், கணேசபுரம், கணபதி நகர், பெல் டவுன்ஷிப் செக்டர், சொக்கலிங்கபுரம், இம்மானுவேல் நகர், வ.உ.சி நகர், எழில் நகர், அய்யம்பட்டி,

வாழவந்தான் கோட்டை, வாழவந்தான் கோட்டை சிட்கோ தொழிற்சாலை, திருநெடுங்குளம், தொண்டைமான் பட்டி, பெரியார் நகர், ரெட்டியார் தோப்பு, ஈச்சங்காடு, பர்மா நகர், மாங்காவனம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நாளை (20.09.2022) மின்விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

நமதுநிருபர்- K.ஷாகுல் ஹமீது - திருச்சி