"சுயசார்பு இந்தியா”
முழக்கத்திற்கு தொழில்துறை
வல்லுநர்களின் பங்கு முக்கியம்
துணை ஜனாதிபதி
“சுயசார்பு இந்தியா” முழக்கத்திற்கு தொழில்துறை வல்லுநர்களின் பங்கு முக்கியம் என்று துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கூறியுள்ளார்.
இந்திய நிறுவனங்களின் தகுதி மற்றும் திறமை மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளதாக கூறிய தன்கர், இன்றைய தொழில் முனைவோர் தலைமுறையினரால் புதிய நிறுவனங்கள், புதிய வேலைவாய்ப்புகள், புதிய ஏற்றுமதிகள் மற்றும் வளர்ச்சித் தொடர்பான பிரச்சனைகளுக்கு புதிய தீர்வுகள் போன்றவைகள் ஏற்படும் என்றார்.
அனைத்து இந்திய மேலாண்மை கூட்டமைப்பின் 49ஆவது தேசிய மேலாண்மை மாநாட்டை புதுதில்லியில் தொடங்கிவைத்த துணை ஜனாதிபதி, விவசாயத்துறையிலும் வளமான முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமானதாகும் என்றார்.
இந்திய நிறுவனங்களையும், அதில் பணியாற்றுபவர்களையும் உலகத் தரம் வாய்ந்ததாக உருவாக்கும் மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கோள்காட்டிய துணை ஜனாதிபதி, மனித சக்தியின் தகுதி, திறனை மேம்படுத்துவதற்கு தொழில்துறை நிறுவனங்கள் பொறுப்பேற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
“டிஜிட்டல் தொழில் முனைவோர்கள் சிறிய நகரங்கள் மற்றும் ஊரக பகுதிகளில்கூட, தங்களின் பங்களிப்பை வழங்கி வருகின்றனர். இந்திய மனித வளமானது, உலக அளவில் அங்கீகாரம் பெற்று வருகிறது. இந்த மனித வளத்தின் தகுதி, திறமைகளை மேலும் கூர்த்தீட்டி, உலக அரங்கில் இந்தியாவை முன்னுக்கு கொண்டு வருவது அவசியமாகிறது.
இந்த பத்தாண்டு கால முடிவில், பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் மூன்று முக்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உருவாகி வருகிறது என்றார். கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசின் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் தொழில் தொடங்குவது தொடர்பான பிரச்சனைகளை தீர்த்து வருகிறது என்றார். வெளிப்படைத் தன்மையும், நம்பகத்தன்மையும் மத்திய அரசின் நிர்வாக அமைப்பின் அங்கங்களாக இருப்பதால் தான், ஜனநாயகமும், பொருளாதாரமும் சிறந்து விளங்குகின்றன என்றார்.
நமது நிருபர் - G.மோனிஷா - சென்னை