09/24/22

அறியப்படாத சுதந்திரப்

போராட்ட வீரர்களை

அடையாளம் காண வேண்டும்

சு.திருநாவுக்கரசர்


மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களை அடையாளம் காண வேண்டும் - திருச்சி மக்களவை உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் வலியுறுத்தல்

அறியப்படாத சுதந்திரப் போரட்ட வீரர்கள் மற்றும் மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியின் நிறைவு விழா புதுக்கோட்டையில் இன்று நடைபெற்றது.


மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சென்னையில் உள்ள மண்டல மத்திய மக்கள் தொடர்பகம் ஏற்பாடு செய்திருந்த இந்தக் கண்காட்சி புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகக் கூட்டரங்கில் கடந்த 22-ஆம் தேதி முதல் 24- ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற்றது.


மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் புகைப்படக் கண்காட்சியை  திருச்சி மக்களவை உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் பார்வையிட்டார்.


பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவை கொண்டாடி வரும் இந்த வேளையில் நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த பல்வேறு வீரர்களின் தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றிருப்பது  மகிழ்ச்சி அளிக்கிறது.


எனினும் கண்காட்சி நடத்தப்படும் மாவட்டங்களில் உள்ள பல்வேறு அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் மற்றும் அவர்கள் குறித்த தகவல்களை இணைத்து கண்காட்சி நடத்தப்பட வேண்டும்.


அத்தகைய போராட்ட வீரர்கள் குறித்த தகவல்களை திரட்ட மாவட்ட ஆட்சியர் தலைமையில் பல்வேறு தரப்பினரைக் கொண்ட குழுவை மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

முன்னதாக கண்காட்சி வாயிலில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி திருவுருவச்சிலைக்கு அவர்  மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


தொடர்ந்து அரங்கில் அமைக்கப்ட்டிருந்த புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணிகள், காச நோய் தடுப்பு, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் உரிமைகள், இந்திய அஞ்சல்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளையும்  மக்களவை உறுப்பினர் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவையொட்டி நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவிகளுக்கு அவர் ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.


இந்நிகழ்ச்சியில் மத்திய மக்கள் தொடர்பு கள விளம்பர அலுவலர் (தஞ்சாவூர்) கே.ஆனந்தபிரபு, புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரா.அனிதா, புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலக் குழும உறுப்பினர் க. சதாசிவம், புதுக்கோட்டை நகர்மன்ற உறுப்பினர் க.லதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் இசை மற்றும் நாடகப் பிரிவின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நமது செய்தியாளர் G.மோனிஷாசென்னை

மாணவர்கள்

ஒரு விஞ்ஞானியாக

ஒரு தொழிலைத்

தொடர வேண்டும் டி.ருக்மணி

சிஎஸ்ஐஆர் எஸ்இஆர்சி மற்றும் சென்னை ஐஐடி கேந்திரிய வித்யாலயா இணைந்து ஒளிமயமான எரிசக்தி எதிர்காலத்தை உருவாக்க முயற்சி



சென்னை ஐஐடி  கேந்திரிய வித்யாலயா, சிஎஸ்ஐஆர் எஸ்இஆர்சி ராயல் சொசைட்டி ஆஃப் கெமிஸ்ட்ரியுடன் இணைந்து கடந்த 22-ந்தேதி  ஜிக்யாசாவின் கீழ் உலகளாவிய நாணய அளவிலான பேட்டரி சோதனைகளுக்கு ஏற்பாடு செய்தது. இத்திட்டம்,பேட்டரிகளுக்குப் பின்னால் உள்ள அறிவியலையும் அவற்றின் மிகப்பெரிய திறனையும் ஒரு கருவியாக ஆராய மாணவர்களுக்கு உதவியது.

சென்னை ஐஐடி கேந்திரிய வித்யாலயாவின்  முதல்வர் எம்.மாணிக்கசாமி வரவேற்றார். சென்னை கேவிஎஸ், ஆர்ஓ  துணை ஆணையர் டி.ருக்மணி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாணவர்கள் ஒரு விஞ்ஞானியாக ஒரு தொழிலைத் தொடர வேண்டும் என்றும் அவர்களை சமூகப் பொறுப்புள்ள நபர்களாக வடிவமைக்க வேண்டும் என்றும் நிகழ்ச்சியில் உரையாற்றிய சிறப்பு விருந்தினர் வலியுறுத்தினார்.

அறிவியல் உணர்வை மேம்படுத்த  மாணவர்-விஞ்ஞானி இணைப்புத் திட்டத்தை மாணவர்கள் பயன்படுத்துமாறு அவர்  வலியுறுத்தினார்  சிஎஸ்ஐஆர் எஸ்இஆர்சி தலைமை இயக்குநர் என்.கலைசெல்வி காணொலி மூலம் உரையாற்றினார். சிஎஸ்ஐஆர் எஸ்இஆர்சி சென்னை வளாக இயக்குனர் என்.ஆனந்தவல்லி விழாவில் கலந்து கொண்டார்.

ஆறாம் வகுப்பு மாணவர்கள் 160 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்று, மகேஸ்வரன் தலைமையில் விஞ்ஞானிகள் குழுவுடன் உரையாடினர்.முதன்மை விஞ்ஞானி, CSIR. பல்வேறு சோதனைகள் செய்தார்கள்,பருவநிலை மாற்றம் தொடர்பான சிக்கல்களைச் சமாளிப்பதற்கான அமர்வில் மாணவர்கள் பங்கேற்றனர்.

நமது செய்தியாளர் G.மோனிஷாசென்னை

பிட்ஸ்பர்க்கில் நடந்த

"உலக தூய்மை எரிசக்தி

நடவடிக்கை அமைப்பு 2022"

ஜிதேந்திர சிங் உரை

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பிட்ஸ்பர்க்கில் நடந்த "உலக தூய்மை எரிசக்தி நடவடிக்கை அமைப்பு 2022" இல் உரையாற்றினார்.


அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பிட்ஸ்பர்க்கில் "உலகளாவிய தூய்மையான எரிசக்தி  நடவடிக்கை அமைப்பு -2022" இல், மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயர்மட்ட இந்திய குழுவுக்கு  தலைமை ஏற்றுள்ள மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் உரையாற்றினார்.

போக்குவரத்துத் துறையில் இருந்து பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் நிலையான உயிரி எரிபொருள்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நிகர பூஜ்ஜிய முயற்சிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து ஊக்குவித்து கண்காணித்து வருகிறார் என்றார் அவர் .

பிட்ஸ்பர்க்கில் "சுத்தமான ஆற்றல் மாற்றத்தை விரைவு படுத்துவதற்கான சர்வதேச ஒத்துழைப்பு" என்ற தலைப்பில் நடைபெற்ற முதன்மை நிலை உச்சி மாநாட்டில் உரையாற்றிய ஜிதேந்திர சிங், பயோடெக்னாலஜி துறை மூலம் இந்தியா, மேம்பட்ட உயிரி எரிபொருள்கள் மற்றும் கழிவுகளிலிருந்து ஆற்றல் தொழில்நுட்பங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கண்டுபிடிப்புகளை ஆதரித்து வருகிறது.

மாநாட்டில் பங்கேற்ற 30 நாடுகளைச் சேர்ந்த எரிசக்தி அமைச்சர்களிடையே உரையாற்றிய அவர், நவீன உயிரித் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி மேம்பட்ட நிலையான உயிரி எரிபொருளில் பணிபுரியும் ஒரு இடைநிலைக் குழுவைக் கொண்ட 5 உயிரி ஆற்றல் மையங்களை இந்தியா நிறுவியுள்ளது என்று தெரிவித்தார்.

காலநிலை மாற்றத்தின் உலகளாவிய சவாலை எதிர்கொள்வதில் இந்தியா முன்னணியில் உள்ளது என்றும், 2005 ஆம் ஆண்டை விட 2030 ஆம் ஆண்டில் உமிழ்வு தீவிரத்தை 33-35% குறைக்கும் தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட இலக்கை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.


சிஓபி26 இல் இந்தியாவின் பிரகடனத்தில், பிரதமர் மோடி வெளிப்படுத்திய லட்சிய மாற்ற இலக்குகள் மத்தியில் புதுப்பிக்கத்தக்க திறன் சேர்க்கையின் வேகமான வேகத்தை அடைவதன் மூலம் தூய்மையான ஆற்றலை நோக்கிய அதன் மாற்றத்தில் இந்தியா உறுதியாக உள்ளது என அமைச்சர் கூறினார்.

 2014ல் 32 ஜிகாவாட்டாக இருந்த நாட்டின் ஒட்டுமொத்த நிறுவு திறனை 5 மடங்கு அதிகரித்து 2022க்குள் 175 ஜிகாவாட்டாகவும், மேலும் 500 ஆகவும் உயர்த்தும் வகையில், உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விரிவாக்கத் திட்டத்தை இந்தியாவும் செயல்படுத்தி வருவதாகவும் அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார்.

நமது செய்தியாளர் G.மோனிஷா – சென்னை

தி.மு.க.15 வது கழக

அமைப்பு தேர்தல்

ஆர்.அருள்செல்வன்

வேட்புமனு தாக்கல்


திராவிட முன்னேற்ற கழகத்தின் 15 வது கழக அமைப்பு தேர்தல் மாநில விவசாய அணி இணை செயலாளர் ஆர்.அருள்செல்வன் Ex.MLA.,நாகை வடக்கு (மயிலாடுதுறை மாவட்டம்) மாவட்ட கழக செயலாளர் பதவிக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

சிறப்பு நிருபர் – A.முஹம்மது ரிஜா - மயிலாடுதுறை

தீபாவளிக்கு சிறப்பு பேருந்து

சந்திர பிரியங்கா அறிவிப்பு


அமைச்சர் சந்திர பிரியங்கா

புதுச்சேரியில் தீபாவளியை முன்னிட்டு கடந்த ஆண்டை விட இந்தாண்டு கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் புதுச்சேரி போக்குவரத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா அறிவிப்பு.

சிறப்பு நிருபர் – A.முஹம்மது ரிஜா - மயிலாடுதுறை

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

கண்டன ஆர்ப்பாட்டம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின்  தலைவர்கள் மீதான NIA மற்றும் ED-ன் கைது நடவடிக்கைகள் மற்றும் அத்துமீறிய சோதனைகளை கண்டித்து 

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 

நாள்:25-09-2022, ஞாயிற்றுக்கிழமை.

நேரம்: காலை10.30மணி.

இடம்: உக்கடம், கோவை.

வாருங்கள் தோழர்களே 

பாசிச பாஜகவின் ஏவல் துறையாக செயல்படும் தேசிய புலனாய்வு முகமை (NIA) மற்றும் அமலாக்கத் துறைக்கு (ED) எதிராக ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைவோம்.அழைக்கிறது  கோவை மாவட்ட  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

இவ்வாறு கோவை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு  அழைப்பு விடுத்துள்ளது.


சிறப்பு நிருபர் - M.முகமது யாசீன் - கோவை

பாதுகாப்பு கண்காட்சி 2022

பாதுகாப்புத் துறை

செயலாளர் ஆய்வு

புதுதில்லியில் நடைபெற்ற உயர்மட்டக் குழு கூட்டத்தில் பாதுகாப்பு கண்காட்சி 2022க்கான ஏற்பாடுகளை பாதுகாப்புத் துறை செயலாளர் ஆய்வு செய்தார்,

புதுதில்லியில் நடைபெற்ற உயர்மட்டக் குழு கூட்டத்தில், வரவிருக்கும் பாதுகாப்பு கண்காட்சி 2022 -க்கான ஏற்பாடுகளை  பாதுகாப்புத் துறைச் செயலாளர் அஜய் குமார் விரிவாக ஆய்வு செய்தார்.

குஜராத் அரசின் தலைமைச் செயலாளர் பங்கஜ் குமார் மற்றும் மாநில அரசு மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.  பாதுகாப்பு கண்காட்சியின்  12வது பதிப்பு குஜராத்தின் காந்திநகரில் அக்டோபர் 18 முதல் 22 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 பாதுகாப்பில் தற்சார்பை  எட்டும் வகையில் பொதுமக்களை இதில் ஈடுபடுத்தவும், அவர்களை விண்வெளி மற்றும் பாதுகாப்பு உற்பத்தித் துறையில் சேர ஊக்குவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது; இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகள் குறித்து பல பங்குதாரர்களால் பாதுகாப்பு செயலாளருக்கு விளக்கப்பட்டது.

உள்நாட்டு பாதுகாப்பு தளங்கள் மற்றும் தயாரிப்புகளின் வணிகம் மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதன் மூலம் கண்காட்சியை மாபெரும் வெற்றியடையச் செய்ய அதிகாரிகளை அஜய் குமார் வலியுறுத்தினார்.

கடந்த  மார்ச் 10-14 வரை நடத்த திட்டமிடப்பட்ட கண்காட்சி சில சவால்கள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. புதிய தேதிகள் (அக்டோபர் 18-22, 2022) ஆகஸ்ட் 08 அன்று அறிவிக்கப்பட்டது. வரவிருக்கும் பதிப்பு இந்திய நிறுவனங்களுக்கு பிரத்யேகமான முதல் பதிப்பாகும். இந்திய நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்களின் இந்திய துணை நிறுவனங்கள், இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனப் பிரிவு, இந்திய நிறுவனத்துடன் கூட்டு முயற்சியைக் கொண்ட கண்காட்சியாளர் ஆகியோர் இந்திய பங்கேற்பாளர்களாகக் கருதப்படுவார்கள்.

பாதுகாப்பு கண்காட்சியின்  கருப்பொருள் 'பெருமைக்கான பாதை' என்பதாகும். இந்த நிகழ்விற்கு முன்னதாக, மாநிலங்களை அரங்குகள் அமைப்பதற்கும், அதன் மூலம் உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியை மேம்படுத்துவதன் மூலம் தேசத்தை கட்டியெழுப்புவதற்கும் நாடு தழுவிய அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரங்குகள் அமைக்க  பல மாநிலங்கள் உறுதி அளித்துள்ளன. தற்போது 8 ஆக உள்ள மாநில அரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது, மேலும் மாநில முதலமைச்சர்கள், தொழில்துறை அமைச்சர்கள், தலைமைச் செயலாளர்கள் போன்றவர்களுக்கு முதலீட்டைக் கோருவதற்கும் அந்தந்த மாநிலங்களை மேம்படுத்துவதற்கும் இது வாய்ப்பளிக்கும்.

நமது செய்தியாளர் G.மோனிஷா – சென்னை

NRS பிரினோ தேவா

பிறந்தநாள்

Dr.NRS.ரமேஷ் வாழ்த்து


புதுவை முதல்வர் NR ஐயாவின் நல்லாசியுடன் இன்று பிறந்தநாள் விழா காணும் NR ஐயாவின் விசுவாசி  NRS பிரினோ தேவா NR காங்கிரஸ் இளைஞர் அணி பிரமுகர்  அவர்களுக்கு எங்களின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். வாழ்க! வளமுடன்!! என்றும் அன்புடன் Dr.NRS. ரமேஷ்.

இவ்வாறு Dr.NRS. ரமேஷ் அகில இந்திய NR காங்கிரஸ் பேரியக்கம் (காரைக்கால் மாவட்டம்.) தனது வாழ்த்துச்  செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பு நிருபர் – A.முஹம்மது ரிஜா - மயிலாடுதுறை

இந்திய-நேபாள

எல்லையில்

அமித் ஷாஆய்வு

மத்திய உள்துறை  அமைச்சர் அமித் ஷா இந்திய-நேபாள எல்லையில் உள்ள பீகார் மாநிலம்  ஃபதேபூர் சென்று ஆய்வு செய்தார்.





அமித் ஷா, ஃபதேபூர், பெக்டோலா, பெரியா, அம்காச்சி மற்றும் ராணிகஞ்ச் ஆகிய இடங்களின் பிஓபி கட்டிடங்களை திறந்து வைத்து,  பணியாளர்களுடன் உரையாடினார். அவர்களுடன் சிற்றுண்டி அருந்திய அவர், புத்தி காளி மாதா கோவிலுக்குச்  சென்று பிரார்த்தனை செய்தார்.

நாட்டின் பாதுகாப்பிற்காக எல்லையில் கடினமான சூழ்நிலைகளில் பணிபுரியும் நமது துணிச்சலான பாதுகாப்பு வீரர்களின் வசதிகள் மற்றும் நலன்களை கவனித்துக் கொள்வது நமது பொறுப்பு என்று பிரதமர் நரேந்திர மோடி நம்புவதாக அவர் கூறினார்.


கடந்த எட்டு ஆண்டுகளில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, எல்லையில் பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கு உழைத்துள்ளது. ரூ.25 கோடி செலவில் கட்டப்பட்ட அத்தகைய கட்டடங்கள் இன்று திறந்து வைக்கப் பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பிரதமராக பதவியேற்ற பிறகு, நவீன உள்கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம் நமது எல்லைகளை பாதுகாக்கும் தீர்மானத்தை மோடி காட்டியுள்ளதாக குறிப்பிட்ட அமித் ஷா, 2008-14 வரை, எல்லை உள்கட்டமைப்புக்கான பட்ஜெட் ரூ.23,700 கோடியாக இருந்தது, அதை 2014-20ல் இருந்து ரூ.44,600 கோடியாக பிரதமர் நரேந்திர மோடி உயர்த்தியுள்ளார் எனக் கூறினார்.

நாட்டில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதிலும், பேரிடர்களின் போது நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளிலும், நியாயமான தேர்தலை நடத்துவதிலும் நமது பாதுகாப்புப் படைகளுக்கு மிக முக்கியப் பங்கு உள்ளது என்றும், ஆயுதப் படைகளின் தியாகம், அர்ப்பணிப்பை நமது நன்றியுள்ள நாடு  என்றும் மறக்காது என்றார்.

எல்லைகளின் பாதுகாப்பிற்கு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது, எல்லைப் பாதுகாப்பு படை மற்றும் பிற பாதுகாப்புப் படைகளின் நல்ல நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், இதுபோன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை நோக்கி நகர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

முன்னாள் பிரதமர் மறைந்த அடல் பிஹாரி வாஜ்பாய் காலத்திலிருந்தே ஒரே நாடு, ஒரே எல்லைப் பாதுகாப்புப் படை என்ற கொள்கையை இந்திய அரசு ஏற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

நமது நிருபர் - G.மோனிஷா - சென்னை

திராவிட முன்னேற்ற கழகத்தின்

15 வது கழக அமைப்பு தேர்தல்

MLA நிவேதா முருகன்

விண்ணப்பம்


அறிஞர் அண்ணா அறிவுறுத்திய கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு அடிப்படையில், அரசியலில் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்து, ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்திடவும்,

பகுத்தறிவு அடிப்படையில் மறுமலர்ச்சிக்கான சீர்திருத்தப் பணி ஆற்றிய ஓய்வறியா உதயசூரியன் முத்தமிழறிஞர் தமிழின தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் நல்லாசியுடனும்

மிசாவை வென்ற திராவிட மாடலின் நாயகர் கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் கழக இளம் தலைவர்  நல்வாழ்த்துக்களோடும்  திராவிட முன்னேற்ற கழகத்தின் 15 வது கழக அமைப்பு தேர்தலில் நாகை வடக்கு மாவட்ட கழக" மாவட்ட செயலாளர்" பொறுப்பிற்க்கு பூம்புகார் சட்டமன்ற தொகுதி MLA.நிவேதா முருகன் விண்ணப்பப் படிவத்தினை சமர்ப்பித்தார்.

சிறப்பு நிருபர் – A.முஹம்மது ரிஜா - மயிலாடுதுறை

என்.ஐ.ஏ சோதனை

எதிர்த்து கூட்டம்



கடந்த வியாழக்கிழமை 22.09.2022 அன்று மாலை 7.30 மணியளவில் பாலக்கரை SDPI  அலுவலகத்தில் ஐக்கிய கூட்டமைப்பு சார்பாக கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் Popular Friends of India (PFI) அலுவலகங்களில் மத்திய புலனாய்வு பிரிவின் (NIA ) சோதனை நடைபெற்றது.அதை எதிர்த்து திருச்சி மாவட்ட ஐக்கிய இஸ்லாமிய நலக் கூட்டமைப்பு சார்பாக கூட்டம் நடைபெற்றது.

கூட்டமைப்பின் தலைவர் ஜனாப். K.M.K ஹபிபுர் ரஹ்மான் ஆணைக்கிங்க  இணை ஒருங்கிணைப்பாளர். SDPI மண்டல தலைவர்  இமாம் ஹஸ்ஸான் பைஜி கூட்டத்தில் தலைமை தாங்கினார்.

இதில் PFI மாவட்ட தலைவர் சபியுல்லா மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞரணி செயலாளர் ஹாஜி.G.H.சையது ஹக்கீம், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் ஹாஜி.ஷேக் முஹம்மது கெளஸ் , தெற்கு மாவட்ட உறுப்பினர்கள். J.ஜாபர் ஷெரிப், A.K.அலாவூதின், இளைஞரணி நவாப்கான், M.முஹம்மது நியாஸ் மற்றும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பின் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

நமதுநிருபர்- A.K.அலாவுதீன் - திருச்சி

 உளுந்தூர்பேட்டையில்

நாம்தமிழர் கட்சி

ஆர்ப்பாட்டம்


உளுந்தூர்பேட்டையில் நாம்தமிழர் கட்சினர் விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நமது நிருபர்R.வேல்முருகன் - கள்ளக்குறிச்சி

இசுலாமிய அமைப்புக்களின் மீது

ஒன்றிய அரசின் அடக்குமுறை!

வைகோ கண்டனம்


அண்மைக் காலமாக ஒன்றிய பா.ஜ.க. அரசு, தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை ஆகியவைகளின் மூலம் இசுலாமிய அமைப்புக்களின் நிர்வாகிகள் இல்லங்கள் மற்றும் அலுவலகங்கள் ஆகியவைகளில் புகுந்து சோதனை என்ற பெயரில் அவர்களை அச்சுறுத்தி வருகிறது.

எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா ஆகிய அமைப்புக்கள் மக்களாட்சி முறையில் வெளிப்படையாக இயங்கி வரும் அமைப்புக்களாகும். இந்த அமைப்பில், இந்துக்கள் முதலான பிற மதத்தினரும் நிர்வாகிகளாக உள்ளனர்.

ஆம்புலன்ஸ் வண்டிகள் மூலம் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவி செய்தல், இயற்கை பேரழிவின்போது அனைத்து மக்களுக்கும் நிவாரண உதவிகளை அளித்தல், குருதிக் கொடை வழங்குதல், மத நல்லிணக்க ஊர்வலங்களை நடத்தி, ஒற்றுமைப் படுத்துதல் என பல வகைகளிலும் இந்த அமைப்புக்கள் ஆரவாரமின்றி பணியாற்றிக் கொண்டு இருக்கின்றன.

இந்த அமைப்புக்களை பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதாக புழுதிவாறித் தூற்றும் பணியில் சங் பரிவார் கூட்டம் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டு வருகிறது. மக்கள் ஆதரவுடன், வேரூன்றி வளர்ந்து வரும் இந்த அமைப்புக்களை இயங்கவிடாமல் தடுத்து, அழித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் காவிக் கும்பல் சதித் திட்டம் தீட்டி செயல்படுத்திக் கொண்டு வருகிறது.

இந்த அமைப்புக்களின் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையும், நூற்றுக்கணக் கானவர்கள் கைது செய்யப் பட்டதையும் ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானதாகவும், சிறுபான்மை இன மக்களுக்கு எதிரானதாகவும் நடுநிலையாளர்கள் கருதுகிறார்கள்.

இந்தப் போக்கினை மறுமலர்ச்சி தி.மு.க. கண்டிக்கிறது.அவர்கள் மீது பழிவாங்கும் நோக்கில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

வைகோ பொதுச்செயலாளர் மறுமலர்ச்சி தி.மு.க.‘தாயகம்’சென்னை - 8

தகவல் - S.A.N.K.S.நகீப்கான் - துணை ஆசிரியர் - IBI NEWS

என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் அல்ல பிஸ்மில்லாகான்


என்ஐஏ அதிகாரிகளால் மதுரையில் கைது செய்யப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் அல்ல, அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது நான்கு புத்தகங்கள் மட்டுமே, என மதுரை முஸ்லீம் ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் சந்திப்பில் செய்தியாளர்களை சந்தித்த பிஸ்மில்லாக்கான் தெரிவித்துள்ளனர்.

மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் மற்றும் அனைத்து இயக்கங்கள் கட்சிகள் சார்பாக மதுரை தெற்குவெளி வீதியில் உள்ள பள்ளிவாசலில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

என்ஐஏ சோதனைக்கு எங்களின் வருத்தத்தையும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த 22ம் தேதி சோதனை என்ற பெயரில் அத்துமீறலையும் சட்ட விதிமுறைகளையும் சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்ட அதிகாரிகளை வண்மையாக கண்டிக்கிறோம்.

பல நபர்களை கைது செய்த இந்த நடவடிக்கை என்பது திடீர் நடவடிக்கை அத்துமீறல் நடவடிக்கை மத்திய புலனாய்வுத்துறை இதை செய்துள்ளது.

மத்திய புலனாய்வு துறை அதிகாரிகளோடு துப்பாக்கி ஏந்திய போலீஸ் அதிகாரிகள் 25க்கும் மேற்பட்டோர் வந்து எங்களை அச்சுறுத்தினர். இவர்களோடு தமிழக காவல்துறை கை கொடுத்துள்ளது

மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் இங்கே என்ன செய்ய வந்திருக்கிறார்கள் என்பது மதுரை மாநகர ஆணையாளர் அவர்களுக்கு தெரியாமல் இருப்பதே வேதனையான ஒன்று.

பெண்கள் மட்டுமே இருக்கும் வீட்டில் போலீசார் அத்துமீறி உள்ள செல்லும் சம்பவம் வேதனையை அளிக்கிறது,

இவர்களது சோதனையில் நான்கே நான்கு புத்தகங்களை மட்டுமே எடுத்துள்ளனர்.ஆனால் அந்த இல்லத்தில் உள்ள அனைத்து பெண்களையும் மிரட்டியது மட்டுமில்லாமல் தேசத் துரோகிகள் என்று சொல்லி அச்சுறுத்தி உள்ளனர்.

அதிகாலை நேரத்தில் எங்களது தொழுகையை நிறுத்தி விட்டார்கள் பள்ளிவாசலை மூடிவிட்டார்கள். மக்கள் எழுச்சியாக போராட்டம் நடத்திய தன் அடிப்படையில் தான் பள்ளிவாசல்கள் மீண்டும் திறக்கப்பட்டது.

இந்த சோதனை ஆனது இல்லத்தில் இருந்த பெண்கள் குழந்தைகள், முதியவர்கள் என அனைவரையும் வேதனைப்படுத்தி உள்ளது, ஒரு கர்ப்பிணி பெண்ணைகூட விட்டுவைக்காமல் இந்த காவல்துறையினர் துன்புறுத்தி உள்ளனர், இது அனைத்திற்கும் ஒரே காரணம் எங்களை ஒடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு காவல்துறையை வைத்து சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்,

நீதிமன்றத்தை அணுகலாம் என்றால் நீதிமன்றம் மக்களுக்காகவோ சட்டத்திற்காகவோ இல்லை என்பதே எங்களது வேதனை,

இது அடிப்படை உரிமைக்கு எதிராக நடக்கக்கூடிய நடவடிக்கை.

ஆர்எஸ்எஸ் என்கிற சக்தியின் சித்தாந்தம் எங்களை இந்த அளவுக்கு பாடாய்படுத்துகிறது.

அப்பாவிகளாக இருக்கக்கூடிய எங்களது நண்பர்களை கைது செய்தவர்களை உறுதியாக மீட்டெடுப்போம்.அவர்களை விடுதலை செய்ய வேண்டும். விடுதலை செய்திற வரையில் நாங்கள் எங்களது மன எழுச்சிக்கு தொடர்ந்து போராட்டங்கள் நடத்துவோம்.

எங்களோடு தோழமையில் இருக்கிற தமிழக அரசாங்கத்தை, தமிழக காவல்துறையை பற்றி நாங்கள் குறை சொல்லவில்லை.

இவ்வாறு மதுரை முஸ்லீம் ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் சந்திப்பில் செய்தியாளர்களை சந்தித்த பிஸ்மில்லாக்கான் தெரிவித்துள்ளனர்.

நமது நிருபர் - சென்னை ஷேக் அப்துல்லா