08/03/22

 மத்திய அரசால் புறக்கணிக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டம்

விஜய் வசந்த் எம்.பி,, கவன  ஈர்ப்பு தீர்மானம் 


கன்னியாகுமரி மாவட்டத்தை மத்திய அரசு புறக்கணிப்பதால் இன்று பாராளுமன்றத்தில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கவன  ஈர்ப்பு தீர்மானம் சமர்ப்பித்தார்.

பல மாதங்களாக முடங்கிக் கிடக்கும் நான்கு வழிச் சாலைப் பணிகளைச் சுட்டிக் காட்டி அதை விரைவில் முடிக்க மத்திய அரசு உகந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். மேலும் தற்போதைய தேசிய நெடுஞ்சாலை பணிகள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட போதும் தொடங்காமல் இருப்பதை எடுத்துக் கூறி உடனடியாக அப்பணிகளைத் துவங்க ஆவன செய்ய வேண்டும் என கோரினார்.

குமரி மாவட்ட மீனவ கிராமங்கள் கடலரிப்பால் பாதிப்படைவதை எடுத்துரைத்து கடல் தடுப்புச் சுவர் எழுப்பி நிரந்தர தீர்வு காணக் கேட்டுக் கொண்டார்.மேலும் கடலில் தவறிய மீனவர்களை மீட்கக் கன்னியாகுமரியில் ஹெலிகாப்டர் தளம் வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை வலியுறுத்தினார்.அத்துடன் நீண்ட காலமாக ரயில்வே துறை சம்பந்தப்பட்ட பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதைக் குறிப்பிட்டு அவற்றை விரைவில் நிறைவேற்றுமாறு கோரினார்.

மேற்பட்ட கோரிக்கைகளுடன் விஜய் வசந்த் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களைக் கடந்த சில நாட்களாக நேரடியாகச் சந்தித்து வலியுறுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

துணை ஆசிரியர் - S.A.N.K.S.நகீப்கான்.சென்னை.

 திருச்சி மாநகரில் நாளை (04.08.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்


திருச்சி மன்னார்புரம் துணை மின் நிலையத்தில் நாளை (04.08.2022) அவசரக்கால பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதனால் சுப்பிரமணியபுரம், சுந்தர்ராஜ் நகர், ஹைவேஸ் காலனி, மத்திய சிறைச்சாலை,கொட்டப்பட்டு பால்பண்ணை, பொன்மலைப்பட்டி, ரஞ்சிதம் ஆகிய பகுதிகளில் நாளை (04.08.2022) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மன்னார்புரம் கிழக்கு மின்சார வாரிய செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

காவிரியில் ஆடிப்பெருக்கை மாலையில் மகிழ்ச்சியாக பொதுமக்கள் கொண்டாட சிறப்பு நடவடிக்கை

திருச்சி மாநகர காவல் ஆணையர் பேட்டி 



திருச்சி அம்மா மண்டபம் படித்தறையில் ஆடி பெருக்கு விழாவை முன்னிட்டு கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் காவல் அதிகாரிகளுடன் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் ஆய்வில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களை  சந்தித்த அவர் ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி கரையோரங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக கொண்டாட 650த்திற்க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குற்ற நடவடிக்கைகளை தடுக்க பொதுமக்களோடு கலந்து சீருடை அணியாமல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காவிரியில் 30 ஆயிரம் கன அடி நீர் வந்தாலும் ஆடி 18 ஆடிப்பெருக்கை பொதுமக்கள் கொண்டாடுவதற்கு அனைத்து பாதுகாப்பு வசதிகளையும் மாநகர காவல் துறையினர் செய்து உள்ளதாக குறிப்பிட்டடார்.


நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காந்தி சிலை முன்பு போராட்டம்


நாட்டில் முஸ்லிம் சிறுபான்மையினரை தொடர்ந்து வேட்டையாடும் பாசிச அரசுகளின் நடவடிக்கைகளுக்கு எதிராக காந்தி சிலை முன்பு முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர்களான ET. முஹம்மது பஷீர், K. நவாஸ் கனி , அப்துல் ஸமத் ஸமதானி, அப்துல்வகாப் ஆகியோர் இன்று காந்தி சிலை முன்பு போராட்டம் செய்தனர்

இந்திய சிறுபான்மையினரின் உயிர்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்கவும், 

புல்டோசர்களுக்கு எதிராக முன்மாதிரியான தண்டனையை அமுல்படுத்தவும், 

சிறுபான்மையினருக்கு தீங்கு விளைவிப்பதற்காக குறிப்பாகப் பயன்படுத்தப்படும் கரி சட்டங்களை ரத்து செய்யவும், 

கல்வித் துறையில் காவிமயமாக்கலை நிறுத்தவும்,வழிபாட்டு உரிமைச் சட்டம்,1991 ஐ நிலைநிறுத்தவும் மற்றும் அதற்கு எதிரான அத்துமீறல்களைத் தடுக்கவும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது

ஒவ்வொரு சந்தர்பத்திலும் முஸ்லிம் சிறுபான்மையினரை தொடர்ந்து வேட்டையாடும் இன்றைய அரசாங்கங்களின் பாசிச சார்பு போக்குகளுக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  காந்தி சிலை முன் போராட்டம் நடத்தினர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

பா.ஜ.க.,ஆட்சியை அகற்ற காங்கிரஸ் விழிப்புணர்வு






பா.ஜ.க.,ஆட்சியை அகற்ற மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடைபயணம் மேற்கொள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்  ராகுல் காந்தி MP, மாநிலத் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அழகிரி Ex.MP ஆகியோர்களின் அறிவுறுத்தலின்படி நாடெங்கிலும் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது,

மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் நேற்று ( 02.08.22) காலை 11 மணி அளவில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சென்னை மாமன்ற உறுப்பினர்  வழக்கறிஞர் சிவ ராஜசேகரன் M.A.B.L.,MC, திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் பகுதி தலைவர் T M தணிகாசலம், மாவட்ட நிர்வாகிகள் துறைமுகம் செல்லப்பா, வாசிப் உசேன், S.நயீப்கான், S.ஜமீல் அகமது, கராத்தே பாலு, நூர்தீன்,  சீனிவாசன், S சதிஷ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

துணை ஆசிரியர் - S.A.N.K.நகீப்கான்.சென்னை.

இரயில்வே அமைச்சர்

அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து

விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை



மத்திய இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் சந்தித்து குமரி மாவட்ட மக்களின் நெடுநாள் தேவைகளை கோரிக்கையாக வைத்தார்!

நாகர்கோவிலில் இருந்து வேளாங்கண்ணிக்கு தினசரி இரயில், சென்னை தாம்பரம் விரைவு இரயிலை தினசரி ரயில் சேவையாக மாற்றுவது, ஹைதராபாத் - சென்னை இரயிலை நாகர்கோவில் வரை நீட்டிப்பது என புது இரயில்களின் தேவையை எடுத்துரைத்தார்.

இரயில் நிலையங்களின் கட்டுமான மேம்பாடு குறித்தும் அமைச்சருக்கு கோரிக்கை விடுத்தார்.குறிப்பாக லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் கன்னியாகுமரி இரயில் நிலையத்தை உலகத்தரம் வாய்ந்த இரயில் நிலையமாக மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் இரயில்வே பணிகளை துரிதமாக முடிப்பதற்கு அரசாங்கம் தரப்பில் ஆவன செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

துணை ஆசிரியர் - S.A.N.K.நகீப்கான்.சென்னை.

 திருச்சி காவிரி கரையோரங்களில் களை கட்டிய ஆடிப்பெருக்கு விழா   




தமிழ் மாதமான ஆடி மாதம் 18ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழா தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் வற்றாத நதிகள் பாயும் பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டாலும் காவேரி பாயும் மாவட்டங்களில் இந்த விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கொண்டாடப்படவில்லை.

இந்த ஆண்டு மிகச் சிறப்பாக ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டு வருகிறது. திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றின் படித்துறைகளில் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. காவிரி தாய்க்கு மஞ்சள் கயிறு, கருகமணி, பூ, மாலை, வளையல், தேங்காய் அரிசி, வெள்ளம், பழங்கள் வைத்து வணங்கி பெண்கள் மஞ்சள் கயிற்றை கழுத்திலும், ஆண்கள் கையில் கட்டிக் கொள்வர்.

மேலும் புதுமண தம்பதிகள் திருமணத்தின் போது அணிந்திருந்த மாலைகளை காவிரி ஆற்றில் விட்டு வழிபடுவர். தற்பொழுது காவேரியில் அதிக அளவில் தண்ணீர் செல்வதால் ஆறுகளில் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. ஆடிப்பெருக்கு கொண்டாட வரும் பொது மக்களின் பாதுகாப்பு கருதி தடுப்பு கட்டைகளை தாண்டி மக்கள் செல்லாதவாறு இரும்பு வலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

மேலும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் ஆற்றல் குளிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி இருக்கிறது. இதற்கிடையில் திருச்சி மாவட்டத்தில் 55 நீர்நிலைகளில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட பொது மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

அந்தந்த இடங்களில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரியில் இரு கரையிலும் தொட்டவாறு தண்ணீர் செல்வதால் ஏராளமான கிராம மக்களும் படித்துறைகளில் வந்து கும்மியடித்து சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

சாய்ந்த நிலையில் மின்சார பெட்டி - உயிர் பயத்துடன் பொதுமக்கள் நடவடிக்கை எடுக்குமா மின்சார வாரியம்?



சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள அண்ணா மெயின் ரோடு வணிகம் செய்யக்கூடிய பகுதியில் மின்சார பெட்டி சாய்ந்த நிலையில் உள்ளது மின்சார வாரியத்திடம் புகார் தெரிவித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அப்பகுதி பொதுமக்கள் உயிர் பயத்துடன் அச்சத்துடனும் இருக்கிறார்கள் உடனடியாக மின்சார வாரியம் நடவடிக்கை விரைந்து எடுக்குமா? பொதுமக்கள் கோரிக்கை.


 கடலை தோட்டத்தில் ரத்தகாயங்களுடன் கிடந்த பெண் - காவல்துறையினர் வழக்கு பதிவு

திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள கோனேரிப்பட்டியில் வசித்து வரும் தங்கவேல் - பாக்கியலட்சுமி. இவர்களது மகள் ரம்யா வயது 31 என்பவர் அவரது தோட்டத்தில் மாலை கடலை கொடி எடுக்கும் வேலை பார்த்து கொண்டிருக்கும் போது தோட்டத்தில் அருகில் இருவர் மது அருந்தியதாக தெரிகிறது.

பின்னர் அவர்கள் இருவரும் ரம்யாவிடம் தகராறு செய்ததில் ரம்யாவின் அலறல் சத்தம் கேட்ட அவரது தம்பி சம்பவ இடத்திற்க்கு வந்தபோது ரம்யா சட்டை கிழிக்கப்பட்டு ரத்தகாயங்களுடன் அலங்கோலாமாக மயங்கி கிடந்துள்ளார்.பின்னர் 108 உதவியுடன் அவர் அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து ரம்யா கொடுத்த தகவலின் பேரில் உப்பிலியபுரம் காவல் துறையினர் மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியராக பணிபுரியும் மணிவேல் மனைவி உமா தேவனூர் பகுதியில் ஆசிரியராக பணிபுரியும் முத்துவீரன் மகன் குருமூர்த்தி ராணுவத்தில் இருந்து பணி ஓய்வு பெற்ற பழனியாண்டி மகன் மணிவேல் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மூவரையும் தேடி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து மூன்று நபர்களும் தலைமறைவாகி உள்ளனர். திருமணம் ஆகாத பெண்ணை மானபங்கம் படுத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

 திருச்சி அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வாரத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

 




உலகத் தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு நேற்று ( 2.8.2022)திருச்சி உறையூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கி.ஆ.பெ விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகளின் மூலமாக தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு கர்ப்பிணி தாய்மார்களிடையே ஏற்படுத்தினர்.

திருச்சி நகர் நல அலுவலர் (பொறுப்பு) மருத்துவர். ஜா. ஷர்மிளி பிரிசில்லா கலாமணி தலைமை தாங்கினார். மருத்துவர். பக்ருதீன் முன்னிலை வகித்தார்.கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் முதலில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியின் மூலமாக தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் தாய்ப்பால் கொடுப்பதனால் மார்பக புற்றுநோய் , ரத்த சோகை ஏற்படாது போன்ற தாய்ப்பாலின் நன்மைகளை விளக்கி பாடினர்.

மேலும் தொலைக்காட்சி பெட்டி மாதிரி செய்யப்பட்டு அதில் தாய்ப்பால் கொடுக்கும் சரியான முறைகள் தொடர் நாடக வடிவில் காட்சிப்படுத்தப்பட்டது. கர்ப்பிணி தாய்மார்கள் தாய்ப்பால் குறித்து கேட்ட சந்தேகங்களுக்கு மருத்துவர்கள் பதில் அளித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு பால்,கடலை மிட்டாய், பேரிச்சம்பழம், உலர் திராட்சை, பாதாம் உள்ளிட்ட ஆரோக்கியமான சிற்றுண்டி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் முடிவில் கர்ப்பிணி தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்போம் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவோம் என்று உறுதிமொழி ஏற்றனர்.


நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி