வாக்காளர் பட்டியலுடன்
ஆதார் எண்ணை இணைக்கும்
சிறப்பு முகாம் தேதி அறிவிப்பு
இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியினை கடந்த 01.08.2022 முதல் துவங்கி உள்ளது. மேற்படி திட்டத்தின் நோக்கம் என்பது வாக்காளர் பட்டியலினை 100% தூய்மையாக்கல், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களின் தனி தகவல்களை உறுதிபடுத்துதல் மற்றும் பாதுகாத்தல்,
இப்பணியானது 01.08.2022 முதல் தொடங்கி 31.03.2023-க்குள் முடித்திட ஆணையிட்டுள்ளது. வாக்காளர்கள் தங்களது ஆதார் எண் விபரங்களை தெரிவிப்பது என்பது முழுவதும் வாக்காளர்கள் தனக்குதானே தனது சுயவிருப்பத்தின் அடிப்படையில் செய்கின்ற அல்லது நிர்பந்தப்படுத்தாத தன்னார்வமான செயல் ஆகும். மேற்படி திட்டத்திற்கு சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களை சட்டபூர்வமான அதிகாரியாக நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் இத்திட்டத்தின்படி இணையவழிமுறையில் (Online) வாக்காளர்கள் தாங்களே நேரடியாக தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் படிவம்-6B-ஐ
https://www.nvsp.in,
https://votersportal.eci.gov.in ஆகிய
இணையதளம் மூலமாகவும் Voters Helpline Mobile, GARUDA mobile App, போன்ற செயலி வழியாகவும் பதிவு செய்து கொள்ளலாம். இம்மாவட்டத்தில் மேற்கண்ட வழிமுறைகளின்படி இணைய வழியில் விண்ணப்பிக்கும் முதல் 1000 நபர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் இ-சான்றிதல் வழங்கப்பட உள்ளது.
இச்சான்றினை பெற இணையவழியில் ஆதார் எண்ணை இணைத்த பின்னர் தங்களது தொலைபேசி எண்ணிற்கு வரும் குறியீட்டு எண்ணை தனியாக குறித்து வைத்துக்கொண்டு பின்னர்
http://elections.tn.gov.in/getcertificate என்ற இணையதள முகவரிக்குச் சென்று தங்களது மொபைல் எண்ணையும், ஓ.டி.பி எண்ணையும் உள்ளீடு செய்து இ-சான்றினை பதிவிறகம் செய்து கொள்ளலாம். எனவே திருச்சிராப்பள்ளி மாவட்ட வாக்காளர்கள் இணையவழியில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைத்து இவ்வாய்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
மேலும் வாக்காளர்கள் இணையமற்ற வழிமுறையின்படி (Off Line) வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு வாக்காளர்களும் தங்களது ஆதார் எண் விபரங்களை வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது வாக்கு சாவடி நிலை அலுவலர் ஆகியோருக்கு படிவம்-6B-இல் தெரிவித்து வாக்காளர் பட்டியலுடன் இணைத்துக் கொள்ளலாம்.
மேலும் இப்பணிக்காக சிறப்பு முகாம் எதிர் வருகின்ற 04.09.2022 (ஞாயிறு) அன்று நடத்தப்பட உள்ளது. இச்சிறப்பு முகாம் நாளில் சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் வாக்காளர்கள் படிவம் 6B-யை பூர்த்தி செய்து சமர்பிக்கலாம்.மேலும் பல சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது.அச்சிறப்பு முகாம் தேதிகள் பின்னர் தெரிவிக்கப்படும்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தினை பொறுத்தவரையில் இத்திட்டம் தொடங்கப்பட்ட 01.08.2022 முதல் 22.08.2022 வரை 4,49,581 வாக்காளர்கள் அதாவது மொத்த வாக்காளர்களில் 19.50 சதவீதம் வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துள்ளனர்.
மேலும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நகர்புற பகுதிகளை விட கிராமபுற பகுதிகளில் சுமார் 22 சதவீதம் வாக்காளர்களும், நகர்புற பகுதிகளில் சுமார் 11 சதவீத வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துள்ளனர்.
நகர்புற பகுதிகளில் போதிய இணையதள வசதிகள் இருந்தும் வாக்காளர்கள் தாமாக முன்வந்து பதிவேற்றம் செய்வது குறைவாக உள்ளதால் வாக்காளர்கள் தாங்களே தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் மேற்கண்ட இணையதளம் மற்றும் அலைபேசி வழியாகவும் இணைத்து மாவட்ட நிர்வாகத்திற்கு நல் ஒத்துலைப்பினை நல்கிடுமாறு தெரிவிக்கப்படுகிறது.
இப்பணி மூலம் ஒருவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் ஒரு இடத்தில் மட்டுமே இடம்பெறும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் பெயர் இருந்தால் அவர் விரும்பும் இடம் தவிர்த்து, பிற இட வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும்.
மேலும் இப்பணியினை 31.03.2023-க்குள் முடித்திட உத்தரவிட்டுள்ளதால் வாக்காளர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஊடகவிய லாளர்கள் ஆகியோர் ஒத்துழைப்பு நல்கிடுமாறு திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.