திருச்சியில் அமைச்சர்கள்
திறந்து வைத்த புத்தகச்சுவர்
திருச்சி புத்தகத் திருவிழா வருகின்ற செப்டம்பர் 16 முதல் 26 வரை நடைபெறவுள்ளதை முன்னிட்டு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்ட புத்தகச்சுவரினை திறந்து வைத்தனர்.
பின்னர் பள்ளி மாணவர்கள் காசினை சேமித்து புத்தகம் வாங்கும் விதமாக உண்டியல்களை வழங்கியும், புத்தகத் திருவிழா இலச்சினையினை வெளியிட்டும், விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட குடிநீர் கேன்களை வழங்கியும், பேருந்துகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டியும் புத்தகத் திருவிழா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்கள்.
திருச்சி புத்தகத் திருவிழா மத்திய பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள செயின்ட் ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் விதமாக, பொதுமக்கள் தாங்கள் வாசித்த நல்ல நூல்களையும், நேசிக்கும் புதிய நூல்களையும், தாமாக முன்வந்து நன்கொடையாக வழங்கிடும் வகையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புத்தகச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சேகரிக்கப்படும் புத்தகங்கள் அனைத்தும் கிராமப்புற நூலகங்களுக்கு வழங்கப்படவுள்ளது.
மாணவர்கள் காசு சேமித்து அதனைக் கொண்டு புத்தகம் வாங்கி படிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்திடும் வகையில் உண்டியல்களை 200க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. விளம்பர ஸ்டிக்கர்கள் அரசு பேருந்துகளிலும், திருச்சி மாவட்டம் முழுவதும் விநியோகிக்கப்படும் 20 லிட்டர் குடிநீர் கேன்களிலும் ஒட்டி விளம்பரப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்படும் கடிதங்கள் அனைத்திலும், புத்தகத் திருவிழாவிற்கான விளம்பரம் முத்திரையிடப்பட்டு அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக, திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (04.09.2022) நடைபெற்ற மெகா கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமினை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பார்வையிட்டனர்.
இந்நிகழ்வுகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையர் ஆர்.வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் செ.ஸ்டாலின் குமார், அ.சௌந்தரபாண்டியன், எம்.பழனியாண்டி,
மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி, மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வே.பிச்சை, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கங்காதாரணி, அரசு போக்குவரத்துக் கழக பொதுமேலாளர் சக்திவேல் மற்றும் மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் அரசுத்துறை அலுவலர்கள், வாசகர் வட்டத்தினர், எழுத்தாளர் சங்கத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி