தண்ணீ வசதியில்ல... யாரும் பொண்ணு கொடுக்க மாட்றாங்க
கமுதி அருகே முத்துசெல்லையாபுரம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய கூலி தொழிலாளர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் குடிநீர் பிரச்சினை என்பது பல ஆண்டுகளாக தொடர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் இப்பகுதியில் குடிநீர் வசதிக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
ஆனால் முத்துசெல்லையாபுரம் கிராமத்தில் முறையாக செயல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது. ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் முறையான நடவடிக்கைகள் எடுக்காததால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் சரியாக இல்லை என்கின்றனர். இதனால் குடங்களுடன் தண்ணீருக்காக அலையும் நிலை காணப்படுகிறது.
குறிப்பாக மழை காலங்களில் பெய்யும் மழை நீரானது, இந்த கிராமத்தில் உள்ள ஊரணிகளில் தேக்கி வைக்கப்படுகிறது. அந்த கலங்கிய சுகாதாரமற்ற முறையில் உள்ள மண்டி தண்ணீரையே கிராம மக்கள் தள்ளுவண்டியில் எடுத்து செல்கின்றனர். பின்னர் சுண்ணாம்பு கற்களை போட்டு தெளியவைத்து குடிநீராக குடித்து வருகின்றனர்.
இதன் காரணமாக முத்துசெல்லையாபுரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு கல்லடைப்பு, காய்ச்சல், இருமல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படுவதாக தெரிகிறது. மேலும் குடிநீர் பிரச்சினை தீராத பிரச்சினையாக தொடர்ந்து வருவதால், இந்த கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கு அருகிலுள்ள கிராமங்களில் சென்று பெண் கேட்டால் யாரும் தர முன்வருவதில்லை என்று கூறப்படுகிறது.
தங்கள் கிராமப் பெண்களின் தலையில் மண்டி தண்ணீரை சுமந்து செல்ல முடியாது என்று கறாராக கூறிவிடுகின்றனர். இதனால் வெளியே பெண் கிடைக்காமல் முத்துசெல்லையாபுரம் கிராமத்திற்கு உள்ளேயே பெண் பார்த்து திருமணம் முடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் உடனடியாக கவனிக்க வேண்டும். சுகாதாரமான முறையில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தி தண்ணீரை விநியோகம் செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நமதுநிருபர்- M.ஜமால் முஹம்மது - சென்னை