காதி பொருட்களை
வாங்கி ஊக்குவிக்க வேண்டும்
எல்.முருகன் வேண்டுகோள்
காதி பொருட்களை வாங்கி ஊக்குவிக்க வேண்டுமென மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வேண்டுகோள்
மகாத்மா காந்தி பிறந்த தினம் மற்றும் காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டி நினைவிடத்தில் உள்ள தலைவர்களின் சிலைக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுதந்திரத்தின் அமிர்த பெரு விழாவைக் கொண்டாடி 76 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறோம் என்று கூறினார். சுதந்திர தினத்தின் நூற்றாண்டு விழாவை நோக்கி நமது நாடு வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது எனவும், 100 வது சுதந்திர தினத்தில் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்ற நாடாக இந்தியா மாறுவதற்கான ஒட்டுமொத்த நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
தேசத்தலைவர்களை போற்றும் விதமாக சுதந்திரத்தின் அமிர்த பெருவிழாவை கொண்டாடி வருகிறோம் என்றார். மகாத்மா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி ஆகியோர் பிறந்த தினத்தில் அவர்களுக்கு மரியாதை செலுத்துவதில் பெருமிதம் கொள்கிறேன் என்று கூறிய அவர், பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினத்தில் அவருக்கும் மரியாதை செலுத்துவதாக தெரிவித்தார்.
ஏழைக் குழந்தைகள் கல்வி கற்பதற்காக மதிய உணவு திட்டத்தை காமராஜர் கொண்டு வந்ததை மத்திய இணையமைச்சர் நினைவு கூர்ந்தார். காமராஜர் ஆட்சி காலம் தமிழ்நாட்டில் பொற்காலமாக இருந்தது என்று குறிப்பிட்டார். மகாத்மா காந்தி பிறந்த தினத்தில் காதி துறையை ஊக்குவிக்கும் பொருட்டு அனைவரும் காதி பொருட்களை வாங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
மகாத்மா காந்தியின் முக்கிய கொள்கைகளில் ஒன்றான தூய்மையை பேண வேண்டும் என்பதை போற்றும் விதமாக தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதில் முதல் கட்டமாக வீடுகள், சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக வைத்திருத்தலை தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக நாம் பணிபுரியும் அலுவலகங்களை சுத்தமாகவும் தேவையற்ற பொருட்களை அகற்றி சிறப்பாக பராமரிக்கவும் தூய்மை இந்தியா 2.0 இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்
தொடர்ந்து, சென்னை கோபாலபுரம் காதி கிராமோத்யோக் பவன் விற்பனை அங்காடிக்கு சென்று அங்கு காதி துணிகளை வாங்கினார். கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணைய மாநில இயக்குனர் பி.என்.சுரேஷ் உடனிருந்தார்.