நன்னடத்தை உறுதிமொழியை மீறி
கஞ்சா விற்பனை செய்த ஐந்து நபர்களுக்கு
350 நாள் சிறை தண்டனை
திருச்சி மாநகரத்தில் நடப்பாண்டில் இதுவரை இளைய சமுதாயத்தினரை சீரழிக்கும் வகையில் அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சாவை தொடர்ந்து விற்பனை செய்து வந்ததாக கண்டோன்மெண்ட் காவல்நிலைய சரகத்தில் 24 நபர்கள் மீதும், பொன்மலை காவல்நிலைய சரகத்தில் 2 நபர்கள் மீதும், கே.கே.நகர் காவல்நிலைய சரகத்தில் 5 நபர்கள் மீதும், காந்திமார்க்கெட் காவல்நிலைய சரகத்தில் 13 நபர்கள் மீதும், தில்லைநகர் சரகத்தில் 2 நபர்கள் மீதும், ஸ்ரீரங்கம் காவல்நிலைய சரகத்தில் 7 நபர்கள் மீதும் என மொத்தம் 53 நபர்கள் மீது நன்னடத்தை உறுதிமொழி பிரமாண பத்திரம் பெற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எடமலைபட்டிபுதூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்த ரவுடி முத்துராமன், டக்கார் மற்றும் கிரண் ஆகியோர்களுக்கும், கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த உதயகுமார் மற்றும் மாரிசெல்வம் ஆகியோர்களும், தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்யும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக, சம்பந்தபட்ட காவல்நிலைய ஆய்வாளரின் பிணையப்பட்ட அறிக்கையின்படி எதிரிகளை நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் முன்பு ஆஜர் செய்ததின் பேரில், ஒரு வருட காலத்திற்கு கஞ்சா விற்பனை செய்யும் குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டேன் என்ற நன்னடத்தை உறுதிமொழி பிரமாண பத்திரத்தை மேற்படி எதிரிகள் தாக்கல் செய்துள்ளனர்.
அவ்வாறு நன்னடத்தைக்கான பிணையம் பெற்றிருந்தும், அதனை மீறி குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டு பிணையத்தை மீறிய ஒரு ரவுடி உட்பட 5 நபர்களை திருச்சி மாநகர நிர்வாக செயல்துறை நடுவரால், மீதமுள்ள காலத்திற்கு சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.
இவர்களில், ஒரு நபருக்கு 350 நாட்கள் மேல் சிறைதண்டனையும், 01 நபருக்கு 300 நாட்களுக்குள் சிறைதண்டனையும், 02 நபருக்கு 200 நாட்களுக்குள் சிறைதண்டனையும், ஒரு நபருக்கு 100 நாட்களுக்குள் சிறைதண்டனையும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், திருச்சி மாநகரில் பல்வேறு காவல்நிலையங்களில் கஞ்சா விற்பனை செய்த 8 நபர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகரில் இதுபோன்ற போதை பொருள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.